search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேலத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி: ஆடு, கோழிகளை கடித்து பக்தர்கள் ஊர்வலம்
    X

    சேலத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி: ஆடு, கோழிகளை கடித்து பக்தர்கள் ஊர்வலம்

    சேலத்தில் மாசி மாத அமாவாசையையொட்டி நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காளி வேடமணிந்து வந்த பக்தர்கள் ஆடு, கோழிகளை கடித்து ஆக்ரோஷமாக ஆடியபடி ஊர்வலமாக வந்தனர்.
    சேலத்தில் மாசி மாத அமாவாசையையொட்டி நேற்று அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சேலம் டவுன் தேர்வீதி பெரிய அங்காளம்மன்கோவில், அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை அங்காளம்மன் கோவில், வின்சென்ட் அங்காளம்மன் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து பக்தர்கள் மேளதாளம் முழங்க அந்தந்த பகுதியில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்காளம்மன் சாமிகளின் வேடமணிந்து ஆக்ரோஷமாக ஆடியவாறு ஊர்வலமாக சென்றார்கள்.

    அப்போது வழிநெடுக திரளான மக்கள் நின்றுகொண்டு தங்களின் பல்வேறு நேர்த்திக்கடனை நிறைவேற்றும்பொருட்டு சாமியாடியவாறு வந்த பக்தர்களிடம் ஆட்டுக்குட்டிகளையும், கோழி களையும், முட்டைகளையும் கொடுத்தனர். ஆட்டுக்குட்டிகளை வாங்கிய பக்தர்கள் தங்கள் கழுத்தில் தூக்கிபோட்டு ஆடியபடியே வந்ததுடன், ஆட்டின் குரல்வளையை கடித்து ரத்தம் குடித்தனர்.

    இன்னும் சில பக்தர்கள் கோழியை வாயில் கவ்வி, ரத்தத்தை குடித்தபடி ஆடிக்கொண்டே மயானம் நோக்கி வந்தனர். அந்த பக்தர்களின் உடல் முழுவதும் ஆடு, கோழிகளின் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. மேலும் சில பக்தர்கள் மயானத்தில் கிடந்த மனித மண்டை ஓட்டை கவ்வியபடி ஆக்ரோஷத்துடன் வந்தனர். இது பார்ப்போரை சற்று அச்சுறுத்தும் வகையிலும், வியப்பூட்டும் வகையிலும் இருந்தது. இப்படி மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து மயானம் நோக்கி வந்த பக்தர்களின் பாதங்களில் பெண்கள் தண்ணீர் ஊற்றி கழுவி வழிபட்டனர்.

    சேலம் காக்காயன் சுடுகாட்டில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சியையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது ஆக்ரோஷத்துடன் ஆடியவாறு வந்த பக்தர்கள், அங்கு கூடி இருந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் விபூதி கொடுத்து ஆசி வழங்கினர். காளி வேடமணிந்த பக்தர்கள் மயானத்தை நெருங்கும்போது திருமணம் ஆகாத இளம்பெண்கள், குழந்தையில்லாத பெண்கள் மற்றும் நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டவர்கள் நேர்த்திக்கடனாக தரையில் படுத்திருந்தனர். சிலர் கை குழந்தையுடன் தரையில் படுத்திருந்ததையும் காணமுடிந்தது. அவர்களை சாமி வேடமணிந்த பக்தர்கள் ஒவ்வொருவராக தாண்டி சென்றனர். இப்படி செல்வதால் குழந்தை வரம் கிட்டும், விரைவில் இளம்பெண்களுக்கு திருமணம் ஆகும், நோய்நொடிகள் தீரும் என்பது ஐதீகம்.

    மயான கொள்ளை நிகழ்ச்சியையொட்டி இறந்தவர்களின் கல்லறை, நினைவிடங்கள் புதுப்பிக்கப்பட்டு இருந்தது. இறந்தவர்களின் நினைவிடங்களில், உறவினர்கள் மாலை அணிவித்தும் தேங்காய், பழம், சூடம், அவல், பொரி வைத்தும் வழிபட்டனர். அத்துடன் இறந்தவர்களுக்கு பிடித்தமானவற்றை படையலாக வைத்தும் வழிபாடு செய்தனர்.

    ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சாமி சிலைகளுக்கு மயானங்களில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சேலம் மாநகரில் நேற்று சுடுகாட்டில் நடத்தப்பட்ட மயான கொள்ளை நிகழ்ச்சியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×