search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் நடைபெற்றதை காணலாம்.
    X
    ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம் நடைபெற்றதை காணலாம்.

    ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில் தேரோட்டம்

    ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மிகவும் பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில் அமைந்துள்ளது. தென்னகத்தில் எங்கும் இல்லாத வகையில் இந்த கோவிலில் மரச்சிற்பத்தினால் செய்யப்பட்ட தேர் மலையின் மீது அமைந்துள்ள கோவிலை சுற்றி வலம் வருவதும், முருகப்பெருமான் மலை மீது வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதும் சிறப்பாகும்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் தைப்பூச தேர்த்திருவிழாவும் ஒன்றாகும். அதுபோல் இந்த ஆண்டுக்கான தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 9-ந் தேதி சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10-ந் தேதி காலை கீழ் தேரோட்டம் நடந்து மாலை தேர் நிலை வந்து சேர்ந்தது. நேற்று முன்தினம் ஈஸ்வரன் கோவில் முன்பு உள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலாக்காட்சியும் நடைபெற்றது.

    திருவிழாவின் மணிமகுடம் சூட்டும் நிகழ்ச்சியாக மலைத்தேரோட்டம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் சுவாமி புறப்பாடு ரதஆரோகணம், அதிர்வேட்டு, பம்பை, உடுக்கை சிறப்பு மேளத்துடன் கரகாட்டம், இளநீர் காவடி ஆட்டத்துடன் பக்தர்கள் வந்தனர். பின்னர் வெற்றி வேலாயுத சுவாமிக்கு அரோகரா கோஷம் முழங்க மலைத் தேரோட்டம் நடைபெற்றது.

    மலைத்தேரோட்டத்தை காண திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து கலந்துகொண்டனர். கதித்தமலையை சுற்றியும் மலை கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நின்று மலைத்தேரோட்டத்தை பக்தி பரவசத்துடன் பார்த்தனர்.

    தேர்த்திருவிழாவையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு பஸ் வசதியும், அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குன்னத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மலையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. நேற்று இரவு 8 மணிக்கு மகா தரிசனமும் சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியுடன் சுப்பிரமணியசுவாமி வள்ளி-தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊத்துக்குளி மற்றும் காங்கேயம் போலீசார் செய்திருந்தனர். ஆங்காங்கே கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    விழா ஏற்பாடுகளை ஊத்துக்குளி கதித்தமலை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×