search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 6-ந்தேதி நடக்கிறது
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 6-ந்தேதி நடக்கிறது

    சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பழனிசாமி பேசியதாவது:-

    எஸ்.கண்ணனூர் பேருராட்சி மூலம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான இடங்களில் குடிநீர் தொட்டி நிறுவி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தற்காலிக நடமாடும் கழிவறை வசதி, குளியல் அறை வசதி தேவையான அளவு செய்யப்படும். கூடுதல் எண்ணிக்கையில் தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்து குப்பைகளை உடனுக்குடன் அகற்றி அனைத்து இடங்களையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக அன்றைய தினம் நடைபாதையில் உள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும். தற்காலிக பஸ் நிலையம் மற்றும் சிற்றுந்து நிறுத்தும் இடம் ஆகியவற்றை தேவையான இடங்களில் அமைக்க வேண்டும்.

    போலீஸ் துறையின் மூலம் பக்தர்கள் கோவிலுக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும். பக்தர்கள் அதிகமாக திரளும் இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தங்கு தடையற்ற தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். கூட்டநெரிசலால் இடிபாடுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, பக்தர்களை ஒரே இடத்தில் கூடவிடாமலும், தரிசனம் செய்த பக்தர்கள் உடனுக்குடன் புறப்பட்டு வெளியில் செல்ல வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு பணியில் போலீசாரை சுழற்சி முறையில் பணியமர்த்திட வேண்டும். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும். பஸ் நிறுத்தங்களில் போக்குவரத்தை கண்காணித்து தேவைக்கேற்ப மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    கோவில் யாகசாலையில் இருந்து கடங்கல் புறப்பட்டு மூலவர் பகுதிக்கு எடுத்து செல்லும் போதும் இரவு சாமி புறப்பாட்டிற்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். போக்குவரத்துத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பொதுமக்கள் வந்து செல்ல அதிகப்படியான பஸ்களை சாதாரண கட்டணங்களில் இயக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் விழா நாட்கள் முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.

    மருத்துவ துறையின் மூலம் பொதுமக்கள் அவசர தேவைக்கு இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். யாகசாலை மற்றும் பேரூராட்சி அலுவலகம் பகுதிகளில் 2 தீயணைப்பு வாகனங்களை 4 நாட்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும். பொதுப்பணித்துறையினர் தற்காலிக தகரப்பந்தல், யாகசாலை பந்தல், கோபுரத்தில் அமைக்கப்பட்டு உள்ள சாரங்களுக்கு உறுதித்தன்மைக்கு சான்று வழங்கிட வேண்டும். நெடுஞ்சாலை துறை சார்பில் தேவையான இடங்களில் சாலை செப்பனிடும் பணி, குண்டும், குழியுமாக உள்ள பகுதிகளை சீர்செய்திட வேண்டும். சாலையின் இரு புறங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    கும்பாபிஷேகம் அன்று அன்னதானம் வழங்குபவர்கள் முறையாக உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து தரமான உணவு வகைகள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வருகிற 4-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6-ந்தேதி இரவு 9.30 மணி வரை பக்தர்களுக்கு கட்டணமில்லா தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்து வெளியேறும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்திட வேண்டும். அனைத்துத் துறை அலுவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும். முடி காணிக்கை மண்டபத்தில் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×