search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமிதோப்பு ஐயா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நேற்று கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    சாமிதோப்பு ஐயா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நேற்று கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றம்

    சாமிதோப்பு ஐயா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஐயாவழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
    குமரி மாவட்டம் சாமிதோப்பு ஐயா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழா வருகிற 30-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு முந்திரி பதமிடுதல், 5 மணிக்கு நடை திறப்பு, தொடர்ந்து ஐயாவுக்கு பணிவிடை போன்றவை நடந்தன. தொடர்ந்து, கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் காவி உடை அணிந்து, தலைப்பாகை அணிந்த ஐயா வழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அவர்களின் ‘ஐயா சிவ.. சிவ.. அரகரா.. அரகரா..’ என்ற பக்தி கோஷத்திற்கு இடையே திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானம் நடந்தது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த ஐயாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு ஐயா தொட்டில் வாகன தெரு பவனி நடைபெற்றது. பின்னர், பணிவிடையும், உகப்படிப்பும் நடைபெற்றது.

    திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று (சனிக்கிழமை) காலை, மாலை நேரங்களில் பணிவிடை, இரவு ஐயா பரங்கி நாற்காலியில் அமர்ந்து தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி போன்றவை நடைபெறும். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதானம், ஐயாவழி சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கின்றன.

    வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு ஐயா அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் சென்று முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா இறுதி நாளான வருகிற 30-ந் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×