search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் பற்றிய அரிய தகவல்கள்
    X

    வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் பற்றிய அரிய தகவல்கள்

    பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் அதிகாலையில் தான் திறக்கப்படும். வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் பற்றிய அரிய தகவல்களை கீழே பார்க்கலாம்.
    சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்?

    சொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் கூறப்படும் கதை வருமாறு:-

    அவதார புருஷரான எம்பெருமாளுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக்கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது.

    நவ திருப்பதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் இரவில் திறப்பு :

    பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் அதிகாலையில் தான் திறக்கப்படும். ஆனால் நெல்லை மாவட்டம் நவதிருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம், வரகுணமங்கை (நத்தம்), திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர் ஆகிய கோவில்களில் வைகுண்ட ஏகாதசியன்று இரவு 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும்.

    பின்னர் இந்த கோவில்களில் இருந்து மாலைகள் ஆழ்வார் திருநகரியில் உள்ள பன்னிரு ஆழ்வார்களில் முதல்வரான நம்மாழ்வார் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்படும். அதன்பின்னர் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு மறுநாள் (துவாதசி) காலை 5 மணி அளவில் ஆழ்வார் திருநகரி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

    அதேபோல் ராமநாதபுரத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியன்று இரவில் தான் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் :

    108 திவ்ய தேசங்களில் 106 திவ்ய தேசங்கள் மட்டும் பூமியில் உள்ளன. 107-வது திவ்ய தேசம் திருப்பாற்கடல். 108-வது திவ்ய தேசம் வைகுண்டம் ஆகும். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரசித்திப்பெற்றது. சிவலிங்கத்தின் மீது பிரசன்ன பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தரும் அற்புத தலம் இது. அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் உள்ள இந்த கோவிலை தரிசித்தால் திருப்பாற்கடலை தரிசித்த பலன் கிடைப்பதாகவும், பாவங்கள் அனைத்தும் விலகுவதாகவும் தலபுராணம் கூறுகிறது.

    மோகினி அலங்கார தத்துவம் :

    வைகுண்ட ஏகாதசியின் போது பகல்பத்து திருநாளில் 10-ம் திருநாள் எம்பெருமான் மோகினி அலங்காரத்துடன் காட்சி தருவார். மனிதன் வாழ்வில் மண், பொன், பெண் ஆசைகளை கடக்க முடியாது. இதில் பெண்ணாசையை வெல்வது கடினம். திருப்பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை அசுரர்களுக்கு கிடைக்காமல் செய்வதற்காக திருமால் மோகினி வேடம் தாங்கினார். அதில் மயங்கிய அசுரர்கள் அமிர்தத்தை இழந்தனர். பெண்ணாசையால் மதி இழக்காமல் இறைவன் காட்டிய மார்க்கத்தில் சென்றால் வைகுண்டம் நிச்சயம் என்பதை பக்தர்களுக்கு ரெங்கநாதர் உணர்த்துகிறார். இதுவே மோகினி அலங்கார தத்துவமாகும்.

    தங்க பல்லியை வணங்கும் பக்தர்கள் :

    ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கும் போது பக்தர்கள் கூட்டம், கூட்டமாக உள்ளே செல்வார்கள். அப்போது வாசலுக்கு மேலே சிற்ப வடிவமாக இரண்டு தங்க பல்லிகள் பதிக்கப்பட்டிருக்கும். அதை பக்தர்கள் பயபக்தியுடன் வணங்குவார்கள். அதாவது பல்லி புவி ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்படாமல், தானே சுற்றுச்சுவர்களிலும், மேற் சுவர்களிலும் வேகமாக ஊர்ந்து செல்லும் இயல்புடையதாகும். அது போல பக்தர்கள் உலக பந்தங்களில் பற்று வைக்காமல், விலகி சென்றால் இறைவனின் சொர்க்கவாசல் அவர்களுக்கு கிடைக்கும் என்பதே அதன் தத்துவம்.

    பகவத்கீதை உபதேசித்த தினம் :

    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த குருஷேத்திர யுத்தத்தின்போது அர்ச்சுனன் மனம் தளர்ந்து காண்டீபம் வில்லை கீழே வைத்து விட்டு போரிட மறுத்து விடுகிறான். வைகுண்ட ஏகாதசியன்று பகவான் கண்ணன், அர்ச்சுனனுக்கு பகவத்கீதையை உபதேசம் செய்தார்.

    தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தபோது அமுதம் வெளிவந்த நாளும் வைகுண்ட ஏகாதசி என்பது குறிப்பிடத்தக்கது.

    தீபஜோதியில் ஜொலிக்கும் குருவாயூரப்பன் கோவில் :

    கேரளாவில் வைகுண்ட ஏகாதசியை விருட்சிக ஏகாதசி என்ற பெயரில் கொண்டாடுவர். குருவாயூரில் ஏகாதசி விழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது தீப ஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றி கோவிலை சொர்க்கலோகம் போல மாற்றி கொண்டாடுவர்.

    ஏகாதசியன்று காலை 3 மணி முதல் மறுநாள் துவாதசி வரை கோவில் திறந்தே இருக்கும். ஏகாதசியன்று குருவாயூரப்பனை தரிசித்தால் சொர்க்க வாசலை மிதித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பரமபதம் :

    வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்கள் இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இந்த விளையாட்டின் போது ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கத்தை அடையலாம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் கீழே வர நேரிடும். ஏணி என்பது புண்ணியத்தையும், பாம்பு என்பது பாவத்தையும் குறிக்கும்

    புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்தை சென்று அடைவார்கள். பாவம் செய்தவர்கள் வாழ்க்கையில் கீழே இறங்கி இன்னல்களை அடைவார்கள் என்பதையே பரம பதம் விளையாட்டு வலியுறுத்துகிறது.

    திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி தசமியன்று இரவு ஏகாந்த சேவை முடிந்தவுடன் தங்கவாசல் மூடப்படுகிறது. பிறகு விடியற்காலை ஏகாதசியன்று சுப்ரபாதம் தொடங்கி மறுநாள் துவாதசி இரவு ஏகாந்த சேவை வரையிலும் திருவேங்கடவன் கர்ப்பக்கிரகத்தை ஒட்டியுள்ள முக்கோடி பிரதட்சண வழியை திறந்து வைத்திருப்பார்கள்.

    ஏகாதசி, துவாதசி ஆகிய இரண்டு நாட்களும் திருவேங்கடவன் தரிசனத்திற்குப் பிறகு முக்கோடி பிரதட்சணம் வழியாக வெளியே செல்வார்கள். இந்த முக்கோடி பிரதட்சண நுழைவு வழியை வைகுண்ட வாசல் என்றும் அந்த வழியை வைகுண்ட பிரதட்சணமென்றும் கூறுவர். வைகுண்ட ஏகாதசியன்று மூன்று உலகங்களிலும் உள்ள 3 கோடியே 50 லட்சம் புண்ணிய தீர்த்தங்களும், புஷ்கரணிகளும், அனைத்து தேவதைகளும் திருமலையில் உள்ள சுவாமி புஷ்கரணியில், சூட்சம ரூபத்தில் குடிக்கொண்டிருப்பதாக ஐதீகம்.

    சக்கரத்தாழ்வார் திருமலையில் வீதி உலாவாக சுவாமி புஷ்கரணிக்கு வந்து சேருவார். அங்கு அவருக்கு அபிஷேகம் ஆன பிறகு புஷ்கரணியில் பவித்ரஸ்நானம் செய்வர். சக்கரஸ்நானம் நடைபெறும்போது பக்தர்களும் புஷ்கரணியில் நீராடி வைகுண்ட ஏகாதசி விரத பலனை முழுமையாக அடைகிறார்கள்.
    Next Story
    ×