search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்வந்தன் தேடிய நிம்மதி - ஆன்மிக கதை
    X

    செல்வந்தன் தேடிய நிம்மதி - ஆன்மிக கதை

    செல்வத்தைத் துறப்பதால் நிம்மதியும், சந்தோஷமும் வராது. செல்வத்தின் மீதான பற்றுதலையே முதலில் துறக்க வேண்டும் என்பதை உணர்த்தும் கதையை பார்க்கலாம்.
    அவன் மிகப்பெரிய கோடீஸ்வரன். அவனிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தன. ஆனால் சந்தோஷமும், நிம்மதியும் மட்டும்தான் அவனுக்கு கிடைக்கவே இல்லை.

    நிம்மதி வேண்டும் என்பதற்காக செல்வங்களைச் செலவு செய்து, உலகம் முழுவதும் சுற்றினான். அப்போதும் அவன் தேடிய நிம்மதி அவனுக்குக் கிடைக்கவில்லை. மனசுக்குள் எப்போதும் பரபரப்பும், சந்தேகமும் உலாவிக் கொண்டே இருந்தது. வீட்டில் என்ன நிலைமை இருக்கிறதோ... பொன்னும், பொருளும் பத்திரமாக இருக்குமா? சொந்தக் காரங்களே சேர்ந்து அனைத்து பொருட்களையும் களவாடிச் சென்று விட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் எண்ணம் அலைமோதிக்கொண்டே இருந்தது.

    எண்ணங்களை மறந்தால்தான், நிம்மதி கிடைக்கும் போல என்று எண்ணியவன், மது, மாது, சூது, போதை என சகலத்திலும் இறங்கி விட்டான். தன்னையே மறந்துபோகிற அளவுக்கு போதையில் மிதக்க ஆரம்பித்தான். ஆனாலும் அது சில நிமிடங்கள், சில மணி நேரங்கள் என்றுதான் இருந்தது. மறுநிமிடம் அதே நிம்மதியற்ற நிலை ஏற்பட்டு விடும். வாழ்க்கையே வெறுத்து விட்டது, அந்த செல்வந்தனுக்கு.

    இந்த வாழ்க்கையே வேண்டாம். இனிமேல் துறவறத்தில் இறங்கிவிட வேண்டியதுதான் என்று அவனுக்குத் தோன்றியது. அவனோடு நட்பு கொண்டிருந்த சிலரும், ஆன்மிகப் பாதைக்குத் திரும்பி, சன்னியாசியாக மாறினால் ஒருவேளை நிம்மதி கிடைக்கலாம் என்று கூறியதால், அந்த வழியையே தேர்ந்தெடுத்தான்.

    வீட்டில் இருக்கும் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பணம் எல்லாத்தையும் மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு ஒரு துறவியை சந்திப்பதற்காகப் போனான்.

    அந்தத் துறவி காட்டிற்குள் ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்ற செல்வந்தன், மூட்டையை துறவியின் காலடியில் வைத்து விட்டு, ‘சுவாமி! என் மொத்த சொத்தும் இதில் இருக்கிறது. இவை எதுவும் எனக்கு வேண்டாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும் தான் வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கைகூப்பியபடி வேண்டி நின்றான்.

    கண் திறந்து பார்த்த துறவி, மூட்டையை திறந்து பார்த்தார். அதில் தங்கமும், வைரமும், கண்ணைப் பறித்துக் கொண்டிருந்தன. உடனே அந்த மூட்டையை கட்டி, தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.

    இதைப் பார்த்ததும் செல்வந்தனுக்கு மூச்சே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது. ‘அய்யோ... என்னுடைய பணம்.. என்னுடைய பணம்..’ என்று கத்தியபடியே துறவியை துரத்தத் தொடங்கினான்.

    ஆனால் துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடுகொடுக்க முடியவில்லை. துறவி காட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து மரத்தடியில் அமர்ந்து விட்டார்.

    சிறிது நேரத்தில் அங்கு வந்தான் செல்வந்தன். அவனைப் பார்த்து சிரித்த துறவி, ‘என்னப்பா.. பயந்துட்டியா? உன் சொத்து மூட்டையை நீயே வைத்துக்கொள்’ என்று திருப்பிக்கொடுத்தார்.

    சொத்து மூட்டை கைக்கு வந்ததும், அந்த செல்வந்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முகத்தில் புன்னகை தாண்டவமாடியது. குதூகலத்தில் கொந்தளித்தான்.

    இப்போது துறவி கேட்டார். ‘என்னப்பா பணத்தை புதுசா பார்க்கிற மாதிரி சிரிக்கிற? இதுக்கு முன்னாடியும் இந்த சொத்தெல்லாம் உன்கிட்ட தானே இருந்தது? அப்போது இல்லாத சந்தோஷமும், நிம்மதியும் இப்போது உன் முகத்தில் தெரிகிறதே’ என்றார்.

    செல்வத்தைத் துறப்பதால் நிம்மதியும், சந்தோஷமும் வராது. செல்வத்தின் மீதான பற்றுதலையே முதலில் துறக்க வேண்டும் என்பது, இப்போது அந்தச் செல்வந்தனுக்குப் புரிந்தது.
    Next Story
    ×