search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கார்த்திகை தீபத்திருவிழா:  மருந்துவாழ்மலை உச்சியில் மகாதீபம் 12-ந் தேதி ஏற்றப்படுகிறது
    X

    கார்த்திகை தீபத்திருவிழா: மருந்துவாழ்மலை உச்சியில் மகாதீபம் 12-ந் தேதி ஏற்றப்படுகிறது

    கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மருந்துவாழ்மலை உச்சியில் “மகா தீபம்“ வருகிற 12-ந் தேதி ஏற்றப்படுகிறது.
    ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத்திரு விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரமான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்டபதியில் அமைந்துள்ள 1,800 அடி உயர மருந்துவாழ்மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    முன்னதாக மருந்துவாழ்மலையில் உள்ள பரமார்த்தலிங்கபுரம் சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் ஆகியன நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் உள்பட பல கோவில்களில் அன்று இரவு 8 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

    மேலும் வீடுகளின் வாசல் முன் பெண்கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத்திருவிழாவை கொண்டாடுவார்கள். வீடுகள் தோறும் கொழுக்கட்டை, அப்பம், திரளி போன்றவைகளை தயார் செய்து உண்டு மகிழ்வார்கள். சிறுவர்கள் இரவு நேரங்களில் சுக்குநாரிபுல், டயர், தீப்பந்தங்கள் கொளுத்தி விளையாடுவார்கள்.

    கார்த்திகை தீபத்திரு விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் 12-ந் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டும், கிழக்கு வாசல் திறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு பகவதிஅம்மன் கோவில் மேல்சாந்தி அன்று மாலை 4 மணிக்கு தனிப்படகு மூலம் சென்று கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    Next Story
    ×