search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மரங்களாக மாறிய மந்தாரன் - சமி
    X

    மரங்களாக மாறிய மந்தாரன் - சமி

    அடுத்தவர்களின் உடல் தோற்றத்தைப் பார்த்து அடையும் மகிழ்ச்சி சிறிது நேரம் மட்டுமே இருக்கும் என்பதை விளக்கும் கதையை கீழே பார்க்கலாம்.
    தவுமிய முனிவர், தனது மகன் மந்தாரனுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் தேடிக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர்கள், ‘அவுரவ முனிவர்- சுமேதை தம்பதியருக்குப் பிறந்த சமி எனும் பெண்ணை, மந்தாரனுக்குத் திருமணம் செய்து வைக்கலாம்’ என்று சொன்னார்கள்.

    தவுமிய முனிவரும், அவுரவ முனிவரைச் சந்தித்து தனது மகன் மந்தாரனுக்கு சமியைத் திருமணம் செய்து கொடுக்கும்படி வேண்டினார். அவுரவ முனிவர் அதற்குச் சம்மதிக்க, ஒரு நல்ல நாளில் மந்தாரன், சமி திருமணம் பெண் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது.

    திருமணத்துக்குப் பின் சில நாட்கள் சென்றது. மந்தாரன், சமியை அழைத்துக் கொண்டு தந்தையின் ஆசிரமத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது விநாயகருக்குச் சமமானவர் என்ற சிறப்பு பெற்ற புருசுண்டி முனிவர், அவர்களுக்கு எதிராக வந்து கொண்டிருந்தார்.

    அந்த முனிவரின் உடல் மிகப் பருமனாகவும், பார்த்தவுடன் சிரிக்கத் தோன்றுவதாகவும் இருந்தது. அவரைப் பார்த்தவுடன் கணவன்-மனைவி இருவரும், தங்கள் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டுச் சிரித்தனர். அதனால் கோபமடைந்த புருசுண்டி முனிவர், ‘என்னைப் பார்த்துச் சிரித்து, என்னை அவமதித்த நீங்கள் இருவரும் மரமாக மாறிப் போய் விடுங்கள்’ என்று சாபம் கொடுத்தார்.

    முனிவரின் சாபத்தைக் கேட்டு வருத்தமடைந்த இருவரும், ‘உங்கள் உருவத்தைப் பார்த்து, எங்களை அறியாமல் சிரித்துத் தவறு செய்து விட்டோம். எங்களின் தவறை மன்னித்து, எங்களுக்குக் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற்று, புதிதாகத் தொடங்கியிருக்கும் எங்கள் இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமைந்திட உதவ வேண்டும்’ என்று வேண்டினர்.

    மனமிரங்கிய முனிவர், ‘நான் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற முடியாது. என் சாபத்தால் மரமாக மாறி நிற்கும் உங்கள் இருவருக்கும் இடையில், நான் வணங்கும் விநாயகப்பெருமான் எழுந்தருளும் போது, உங்களிருவருக்கும் பல்வேறு சிறப்புகள் கிடைக்கும்’ என்றார்.

    அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த இருவரும் அவரை நன்றியுடன் வணங்கினர். அடுத்த நிமிடம் முனிவரின் சாபப்படி மந்தாரன் மந்தார மரமாகவும், சமி வன்னி மரமாகவும் (சம்ஸ்கிருதத்தில் சமிபத்ரம் என்பர்) மாறி நின்றனர்.

    விமோசனம் :

    மந்தாரனும், சமியும் மரமாகிப் போனதால், அவர்களால் தவுமிய முனிவர் ஆசிரமத்துக்குத் திரும்பச் செல்ல முடியவில்லை. மகனும், அவனது மனைவியும் ஆசிரமத்துக்குத் திரும்பி வராததை நினைத்து கவலையடைந்த தவுமியர், அவர்கள் ஆசிரமத்துக்கு எப்போது திரும்பி வருவார்கள் என்று அவுரவரிடம் கேட்டு வரும்படி தனது சீடர்கள் இருவரை அனுப்பி வைத்தார்.

    சீடர்கள் இருவரும் அவுரவரிடம் சென்று அவர்களிருவரும் ஆசிரமம் திரும்பி வராதது பற்றிக் கேட்டனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவுரவர், ‘சமியும் மந்தாரனும் பல நாட்களுக்கு முன்பே இங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். அவர்கள் இன்னுமா வந்து சேரவில்லை’ என்று கேட்டார்.

    உடனே சீடர்கள், ‘அவர்களிருவரும் ஆசிரமத்துக்கு இதுவரை வந்து சேரவில்லை. நீங்கள் இங்கே அருகிலுள்ள இடங் களில் அவர்களைத் தேடிப்பாருங்கள். நாங்கள் திரும்பிச் செல்லும் வழியில் இருக்கும் சில இடங்களில் தேடிப் பார்த்துச் செல்கிறோம்’ என்று சொல்லித் திரும்பினர்.

    தவுமிய முனிவரின் சீடர்கள், திரும்பிச் செல்லும் வழியிலிருந்த பல இடங்களிலும் அவர்களைத் தேடிப்பார்த்தனர். மரமாக மாறிப் போன அவர்களிருவரையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆசிரமத்துக்குச் சென்ற சீடர்கள் தவுமியரிடம், அவர்களிருவரும் காணாமல் போன தகவலைச் சொன்னார்கள்.

    அவுரவ முனிவரும், அவருடைய ஆசிரமத்தைச் சுற்றியுள்ள பல இடங்களில் தேடிப் பார்த்து அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல், தவுமிய முனிவர் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். முனிவர்களிருவரும் தங்கள் பிள்ளைகள் காணாமல் போனதை நினைத்துக் கவலையடைந்தனர்.

    காணாமல் போனவர்கள் என்ன ஆனார்கள்? என்று தெரிந்து கொள்வதற்காக தவுமியர் தியானத்தில் அமர்ந்தார். அவருடைய ஞானப் பார்வைக்குப் புருசுண்டி முனிவர் கொடுத்த சாபத்தால் பிள்ளைகள் இருவரும் மரமாகிப் போனது காட்சிகளாகத் தெரிந்தன.

    அதனைக் கண்ட தவுமியர் அவுரவரிடம் பிள்ளைகள் இருவரும், புருசுண்டி முனிவரின் சாபத்தால் மரமாகிப் போனதைப் பற்றிச் சொன்னார். இருவரும் அதை நினைத்து வருத்தமடைந்தனர்.

    அவுரவர் தவுமியரிடம், ‘நம் பிள்ளைகள் இருவரையும் புருசுண்டி முனிவரின் சாபத்திலிருந்து மீட்க என்ன செய்வது?’ என்று கேட்டார்.

    அதற்குத் தவுமியர், ‘நம் பிள்ளைகளுக்குச் சாபம் கொடுத்த புருசுண்டி முனிவர் விநாயகருக்குச் சமமானவர் என்பதால், அவர் கொடுத்த சாபத்திலிருந்து நம் பிள்ளைகளை மீட்க நாம் இருவரும் சேர்ந்து விநாயகரை வேண்டுவோம்’ என்றார்.

    அவுரவரும் அதற்குச் சம்மதிக்க, அவர்கள் இருவரும் சேர்ந்து, பன்னிரண்டு ஆண்டு காலம் தவமிருந்தனர். அவர் களது இடைவிடாத தவத்தில் மனம் மகிழ்ந்த விநாயகர், அவர்களிருவருக்கும் நேரில் காட்சி கொடுத்தார். தங்கள் முன்பாகத் தோன்றிய விநாயகரை வணங்கிய இருவரும், தங்கள் பிள்ளைகளைப் புருசுண்டி முனிவர் கொடுத்த சாபத்திலிருந்து மீட்டுத் தரும்படி வேண்டினர்.

    ‘புருசுண்டி முனிவர் எனக்குச் சமமான தகுதியைப் பெற்றவர். அவர் கொடுத்த சாபத்திலிருந்து உங்கள் பிள்ளைகளை என்னால் விடுவிக்க முடியாது’ என்றார் விநாயகர்.

    அதனைக் கேட்டு வருத்தமடைந்த முனிவர்கள், ‘புருசுண்டி முனிவர் கொடுத்த சாபத்தால் எங்கள் பிள்ளைகள் மரங்களாக மாறித் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களிருவரையும் நீங்கள்தான் காப்பாற்றியருள வேண்டும்’ என்றனர்.

    விநாயகர் அவர்களிடம், ‘உங்கள் பிள்ளைகள் இருவரும் பிருசுண்டி முனிவரின் சாபத்தால் மரங்களாக மாறியிருந்தாலும், அவர்களுக்கு எந்தத் துன்பமும் ஏற்படாது. அவர்களுக்கு என் மூலம் பல்வேறு சிறப்புகள் கிடைக்கச் செய்கிறேன்’ என்றார். அதைக் கேட்டு முனிவர்கள் இருவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

    விநாயகர் அவர்களிருவரையும் மந்தாரன், சமி ஆகியோர் மரமாக மாறி நிற்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு விநாயகர், சாபம் பெற்று நிற்கும் இரு மரங்களுக்கு இடையில் போய் நின்றார். அவர் அப்படி நின்றதும், மரங்களாக இருந்த இருவரும் சுய உருவம் பெற்று, விநாயகரை வணங்கினர். முனிவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

    அப்போது விநாயகர், மந்தாரன், சமி இருவரையும் பார்த்து, ‘உங்கள் இருவரின் தந்தையர் செய்த தவத்தால், அவர்கள் உங்களை நேரடியாகப் பார்த்துக் கொள்வதற்காக உங்களுக்குச் சுய உருவம் கிடைத்திருக்கிறது. சிறிது நேரத்தில், நீங்கள் மீண்டும் மரமாக மாறிப்போய் விடுவீர்கள். இருப்பினும், அவர்கள் செய்த தவத்தின் பலனாக உங்களிருவருக்கும் பல சிறப்புகள் கிடைக்கப் போகின்றன’ என்றார்.

    அதைக் கேட்ட மந்தாரனும் சமியும், தாங்கள் பெற்ற சாபத்திலிருந்து தங்களை விடுவிக்க தந்தையரை எண்ணி மகிழ்ந்தனர். விநாயகரை வணங்கி நின்றனர்.

    விநாயகர் அவர்களிருவரையும் பார்த்து, ‘பூலோகத்தில் எனக்குச் செய்யப்படும் வழிபாட்டிற்கு இனிமேல், வன்னி, மந்தாரை இலைகளும் பயன்படுத்தப்படும். வன்னி, மந்தாரை இலைகளைக் கொண்டு வழிபடுபவர்களுக்கு, என்னை நேரில் சந்தித்து வழிபட்ட பலன்கள் கிடைக்கும். அறுகம்புல் இல்லாத குறையை மந்தாரை மலர் நீக்கும். அறுகும் மந்தாரையும் இல்லாத குறையை வன்னி இலை போக்கும். உலகிலுள்ள இலைகள் எல்லாவற்றிலும் வன்னி இலை தனிச்சிறப்பு பெறும். அந்த இலையை சிவபெருமான் தனது சடைமுடியில் அணிந்து பெருமை செய்வார்’ என்றார்.

    பின்னர் விநாயகர் அங்கிருந்து மறைந்தார். மந்தாரனும் சமியும் மீண்டும் மரங்களாக மாறிப்போனார்கள். தங்கள் பிள்ளைகள் இனி வரும் காலங்களிலும் இப்பூலோகத்தில் புகழுடன் வாழ்வார்கள் எனும் மகிழ்ச்சியில் முனிவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர்.

    அடுத்தவர்களின் உடல் தோற்றத்தைப் பார்த்து அடையும் மகிழ்ச்சி சிறிது நேரம் மட்டுமே இருக்கும். ஆனால், அதைத் தொடர்ந்து வரும் துன்பம் அதிக காலம் நீடித்திருக்கும் என்பதை மந்தாரன் மற்றும் சமி பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
    Next Story
    ×