search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை மகாதீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை மகாதீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை மகாதீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை மகாதீப திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த வருடத்திற்கா மகாதீப திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா வருகிற 13-ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 11 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகமும், சர்வ அலங்காரமும் நடைபெற்றது. பின்பு அங்கிருந்து மேளதாளம் முழங்க முருகப்பெருமான் கம்படித்தடி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு முருகப்பெருமான் முன்னிலையில் கார்த்திகை மகாதீபத்திருவிழா கொடி ஏற்றப்பட்டு, கம்பத்தடிக்கு பால், பன்னீர் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.

    தொடர்ந்து கொடிமரத்திற்கு பூமாலை, தர்ப்பைபுல், மாவிலை தோரணம் கட்டப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் ‘வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்க அரோகரா‘ என்று பக்தி கோஷங்களை எழுப்பி பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி, தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தெய்வானை சமேத முருகப்பெருமான், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியான 11-ந்தேதி கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபத்தில் பட்டாபிஷேக விழாவும், மறுநாள் காலை தேரோட்டமும் நடக்கிறது.

    விழாவின் முத்தாய்ப்பாக 12-ந்தேதி மாலை 6 மணிக்கு மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக தாமிர நெய் கொப்பரை தயாராக உள்ளது. மேலும் சுமார் 300 லிட்டர் நெய், 5 கிலோ கற்பூரம், 150 மீட்டர் கடா துணியால் தயாரிக்கப்படும் திரி ஆகியவை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக உச்சிபிள்ளையார் கோவில் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    இதேபோல உசிலம்பட்டி அருகே உள்ளது திடியன் கிராமம். இந்த ஊரில் உள்ள திடியன் தங்கமலை ராமர் கோவில் அடிவாரத்தில், தென்திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் பெரியநாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் திருவிழா நடைபெற்று, இதையொட்டி மலையின் உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றுவது வழக்கம். அதே போல இந்த வருடத்திற்கான கார்த்திகை திருவிழா தொடங்கி உள்ளது. இதையொட்டி வருகிற 12-ந்தேதி மாலை 6 மணிக்கு மலை உச்சியல் கார்த்திகை மகாதீபம் ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 175 லிட்டர் நெய் கொள்ளளவு கொண்ட நெய் கொப்பரை, சுமார் 60 அடி நீளமுள்ள திரி ஆகியவை தயார் செய்யப்பட்டு வருகிறது.
    Next Story
    ×