search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் குண்டம் இறங்கிய போது எடுத்த படம்.
    X
    கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் குண்டம் இறங்கிய போது எடுத்த படம்.

    ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் விழா

    ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் ஆகிய 2 கோவில்களின் முன்பும் 24-ந் தேதி கம்பம் நடப்பட் டன. இந்த கம்பங்களுக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு குண்டம் பற்றவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை பக்தர்கள் தீ மிதிப்பதற்கு வசதியாக குண்டம் அமைக்கப்பட்டது. பின்னர் காலை 9.45 மணிக்கு கோவில் தலைமை பூசாரி ராஜா பிரகாசம் முதலில் குண்டம் இறங்கினார். அப்போது கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்கினர். பின்னர் காப்பு கட்டிய பக்தர்களை தொடர்ந்து திரளான ஆண்கள் -பெண்கள், சிறுவர்-சிறுமிகள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து மதியம் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். பின்னர் மதியம் 12 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.

    வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு கம்பங்கள் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல் மற்றும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
    Next Story
    ×