search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பஞ்சமி தீர்த்த உற்சவத்தில் 2 லட்சம் பக்தர்கள் புனிதநீராடினர்
    X

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பஞ்சமி தீர்த்த உற்சவத்தில் 2 லட்சம் பக்தர்கள் புனிதநீராடினர்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் நடந்த பஞ்சமிதீர்த்த உற்சவத்தில் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
    திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து சிறிய சேஷ வாகனம், பெரிய சேஷ வாகனம், அம்ச வாகனம், முத்துப்பந்தல் வாகனம், சிம்ம வாகனம், கல்ப விருட்ச வாகனம், அனுமந்த வாகனம், பல்லக்கு வாகனம், யானை வாகனம், சர்வ பூபால வாகனம், சூரிய பிரபை, சந்திரபிரபை வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று சக்கர ஸ்நானம் மற்றும் பஞ்சமி தீர்த்த உற்சவம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று முன்தினம் மாலை முதலே கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பஞ்சமிதீர்த்த உற்சவத்தையொட்டி நேற்று காலை 6.30 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர் பத்மாவதி தாயார், நான்கு மாடவீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக புறப்பட்டார். காலை 8 மணியளவில் அவர் நீராழி மண்டபத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார்.

    அங்கு சிறப்பு அபிஷேகம், சிறப்புப்பூஜைகள் நடந்தன. மதியம் 12.30 மணியில் இருந்து 12.40 மணிவரை கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு சக்கர ஸ்நானம் மற்றும் பஞ்சமி தீர்த்த உற்சவம் நடந்தது.



    அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரில் 3 முறை மூழ்கி புனித நீராடினர். புஷ்கரணியில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பக்தர்கள் வீதம் அடுத்தடுத்து நீராட ஏற்பாடு செய்யப்பட்டது. புஷ்கரணிக்கு பக்தர்கள் சென்று புனிதநீராட ஒரு வழியும், புனிதநீராடிய பக்தர்கள் புஷ்கரணியில் இருந்து வெளியே செல்ல மற்றொரு வழியும் அமைக்கப்பட்டு இருந்தது. இதன்படி சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணியில் இருந்து 5 மணிவரை கோவில் அருகே கங்குன்றம் மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு சிறப்புப்பூஜைகள் நடந்தது. இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை பிரகார மண்டபத்தில் தங்க திருச்சி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வந்தார். பின்னர் கொடிமரத்துக்குக் கீழே வந்து சேர்ந்தார். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடி மரத்தில் இருந்து கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடி இறக்கப்பட்டது. அத்துடன் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    முன்னதாக மூலவர் பத்மாவதி தாயாருக்கு அலங்காரம் செய்வதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து மஞ்சள், குங்குமம், தங்க ஜரிகையால் ஆன பட்டு வஸ்திரம், துளசிமாலை, லட்டு பிரசாதம், சந்தனம், பழம், வெற்றிலை பாக்கு மற்றும் தங்க, வைர ஆபரணங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் 10 கூடைகளில் திருமலையில் இருந்து தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தலைமையில் பலத்த பாதுகாப்புடன் அலிபிரி நடைபாதை வழியாக திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

    திருச்சானூருக்குக் கொண்டு செல்லப்பட்ட மங்களப் பொருட்களை 3 யானைகள் மீது வைத்து கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். மங்களப் பொருட்களை தேவஸ்தான இணை அதிகாரி போலா.பாஸ்கர் பெற்றுக்கொண்டார். மூலவர் பத்மாவதி தாயாருக்கு தங்க பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. அது, இன்று (திங்கட்கிழமை) காலை வரை தாயாருக்கு அணிவிக்கப்பட்டு இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இன்று (திங்கட் கிழமை) மாலை 5.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிவரை புஷ்ப யாகம் நடக்கிறது.

    விழாவில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ், நடிகர் பாலகிருஷ்ணாவின் மனைவி வசுந்தராதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×