search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்திக்கு கிடைத்த பெரும் பதவி
    X

    பக்திக்கு கிடைத்த பெரும் பதவி

    மதுரையில் வசித்து வந்த மூர்த்தி நாயனார் சிவனின் மீது கொண்டிருந்த அதீத அன்பையும், பக்தியையும் பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    மதுரையில் வசித்தவர் மூர்த்தி நாயனார். சிவனின் மீது அதீத அன்பு கொண்டிருந்த இவர், சொக்கநாதரின் திருமேனிக்கு சாத்தப்படும் சந்தனக்காப்புக்காக தினமும் சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியைச் செய்துவந்தார். இந்த நிலையில் பாண்டிய மன்னனிடம் இருந்து, வடுக கருநாடு பகுதியைச் சேர்ந்த மன்னன் ஒருவன், போர் தொடுத்து மதுரையைக் கைப்பற்றினான். சைவ நெறியின் மீது பற்றில்லாத அந்த மன்னன், சைவத் திருத் தொண்டர்களையும், மக்களையும் துன்புறத்தத் தொடங்கினான். மூர்த்தி நாயனாருக்கும் இடர்மிக புரிந்தான்.

    இருப்பினும், மனம் பலம் மிகுந்த மூர்த்தி நாயனார், மன்னனின் இடரை பொருட்படுத்தாது, தமது திருத்தொண்டினை முன்பைவிடவும் பல மடங்கு அன்புடன் இறைவனுக்கு செய்து வந்தார். இடையூறுகளுக்கு மத்தியிலும் மூர்த்தி நாயனார் திருத்தொண்டு செய்து வந்ததால், அவருக்கு சந்தனக் கட்டைகள் கிடைக்கும் வழியை மன்னன் தடுத்து விட்டான்.

    இதனால் செய்வதறியாது தவித்த மூர்த்தி நாயனார், பரம்பொருளான சிவபெருமானிடம் முறையிட்டார். பெரும் முயற்சி செய்தும் அன்றைய தினம் சந்தனக் காப்பு நடத்துவதற்கு தேவையான சந்தனம் கிடைக்கவில்லை. பகல் பொழுது கழிந்து சென்று கொண்டிருந்தது. சைவ நெறிக்கு வந்த சோதனையை எண்ணி வருந்தினார் மூர்த்தி நாயனார்.

    மாலைப் பொழுதில் சோமசுந்தரரின் திருக்கோவிலை அடைந்தார். ‘ஈசனின் திரு மேனிக்குப் பூசும் சந்தனக் கட்டைக்குத்தான் தடை வந்தது. சந்தனத்தை தேய்க்கும் கைக்கு எந்த தடையும் இல்லையே!’ என்று எண்ணியவர், அங்கிருந்த வட்டப் பாறையில் தனது கையை வைத்து தேய்த்தார். தோல் தேய்ந்து, நரம்பு எலும்புகள் முதலியன சிதைந்து போயின.

    இதைக் கண்டு பொறுக்க முடியாத இறைவன், உடனடியாக மூர்த்தி நாயனாரை தடுத்தாட்கொண்டார். நாயனாரின் முன்பு தோன்றிய ஈசன், ‘அன்பனே! அன்பின் மிகுதியால் இவ்வாறு செய்யாதே. உன்பால் கொடுமை செய்தவன் வலிந்து கொண்ட நாடு முழுமையும் நீயே ஆட்சி செய்யும் நிலை ஏற்படும். அப்போது நீதியை நிலைநாட்டு. நியதியுடன் அறப்பணியும், திருப்பணியும் செய்வாயாக. பின் சிவலோகம் வந்தடைவாயாக! என்று வாழ்த்தினார்.

    இறைவனின் வார்த்தையைக் கேட்டு கல்லில் கையை தேய்ப்பதை நிறுத்தினார். அவரது கை முன்போலவே பொலிவுடன் காணப்பட்டது.

    நல்லவர்களுக்கு தீங்கு செய்த வடுகமன்னன் கடும் நோயில் விழுந்து இறந்தான். இதையடுத்து அவையில் இருந்த அமைச்சர்கள், அடுத்த மன்னனை தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து பட்டத்து யானையின் கண்ணை, துணியால் கட்டி, ‘இந்த அரசை ஆளும் தகுதி படைத்தவரை, தும்பிக்கையில் ஏந்தி வருக!’ என்று கூறி விடுவித்தனர்.

    கண் கட்டிவிடப்பட்ட யானை வீதிகளில் திரிந்து, கோவில் முன்பு நின்று கொண்டிருந்த மூர்த்தி நாயனாரை தூக்கிக் கொண்டு வந்தது. அதைக் கண்ட அமைச்சர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மூர்த்தி நாயனார் அடிமலர் வீழ்ந்து வணங்கினர். நாடெங்கும் வாழ்த்தொலி எழுந்தது.

    அப்போது மூர்த்தி நாயனார், ‘இத்தேசம் எங்கும் சைவ ஒளி ஓங்குமாயின், இந்த அரசை ஏற்று ஆள்வேன். அவ்வாறு அரசாட்சி செய்யும்போது, திருநீறே அபிஷேகமாகவும், உத்திராட்சமே அணிகலனாகவும், சடைமுடியே மணி முடியாகவும் இருக்க வேண்டும்’ என்று அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

    இதனை அமைச்சர்கள் அப்படியே ஏற்பதாக தெரிவித்தனர். மூர்த்தி நாயனார் செங்கோல் தாங்கினார். திருக்கோவில் சென்று சோம சுந்தரக் கடவுளை வணங்கி நகரை வலம் வந்து, நல்லாட்சியை தொடங்கினார்.

    Next Story
    ×