search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரிய ஆன்மிக வழிபாட்டு தகவல்கள்
    X

    அரிய ஆன்மிக வழிபாட்டு தகவல்கள்

    சில கோவில்களில் சாமி சிலைகள் வித்தியாசமான தோற்றங்களில் காட்சியளிக்கும். இத்தகைய அரிய கோவில்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    லிங்க வடிவில் அம்மன் :

    கோயம்புத்தூர் மாவட்டம் கொழுமம் திருத்தலத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கொலுவிருக்கும் மாரியம்மன், லிங்க வடிவில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த மூலவரைப் பார்க்கும்போது அம்மனுக்கான எந்த அம்சமும் தென்படாது. இருப்பினும் கூட, இந்த லிங்கத்தை அம்மனாக பாவித்து, புடவை அணிவித்து பூஜை மற்றும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

    சோமாசி மாற நாயனார் :

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சோமாசி மாற நாயனார், தனது மனைவி சுசீலையுடன் இந்த ஆலயத்தில் வேள்வி செய்தார். அந்த வேள்வியில் இறைவனை கலந்துகொண்டு அவிர்பாகத்தைப் பெற்றுக் கொள்ளும்படி செய்யுமாறு, சோமாசி மாற நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு வேண்டுகோள் விடுத்தார். சுந்தரர் கூறியதன் பேரில் இறைவனும் வித்தியாசமான தோற்றத்தில் பார்வதி, தனது பிள்ளைகள் விநாயகர், முருகன் ஆகியோருடன் வந்தார்.

    அந்த வித்தியாசமான கோலம் என்ன :

    இறைவன் வேடுவர் வேடத்தில் நான்கு வேதங்களையும் நாய்களாக்கி அழைத்துக் கொண்டு வந்தார். இறைவி வேடுவச்சியாக தலையில் கள்ளுப் பானையை சுமந்து வந்தார். விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் வேடுவச் சிறுவர்களாக, அந்தணர்கள் வேள்வி நடக்கும் இடத்துக்கு அச்சமூட்டும் தோற்றத்தில் வந்தனர். பின்னர் சோமாசி மாற நாயனாருக்கு, இறைவன் தனது உண்மையான உருவத்தை காண்பித்து அருளினார் என்பது இவ்வாலய புராணக் கதை.

    துர்க்கைக்கு சமர்ப்பணம் :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளியாடி என்ற இடத்தின் அருகே, ‘வாள்வச்சகோஷ்டம்’ என்ற பேரூரில் மகிஷாசுரமர்த்தினி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் பரசுராமரால் நிறுவப்பட்டு வழிபடப்பட்ட இந்த ஆலயம் நாளடைவில் பாழடைந்து போனது. தற்போதுள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் அதிலிருந்து சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது. பரசுராமர் தன் தந்தையைக் கொன்ற ஏராளமான சத்திரியர்களை, தன் கோடரியால் வெட்டிக் கொன்றார். பின்னர் அந்த கோடரியை இந்தக் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனிடம் சமர்ப்பணம் செய்து விட்டு, இமய மலை நோக்கிச் சென்றதாக தல புராணம் தெரிவிக்கிறது.

    பாண லிங்கம் :

    சிவ பக்தனான பாணாசுரன் என்பவன், சிவபெருமானிடம் இருந்து வரங் களைப் பெறுவதற்காக யமுனை நதிக்கரையில் கடும் தவம் செய்தான். அவ்வாறு தவம் இருந்த ஒவ்வொரு நாளும், புதிய புதிய சிவலிங்கங்களை சிருஷ்டித்து வணங்கினான். ஒரு நாள் வழிபட்ட லிங்கத்தை நதியில் வீசிவிட்டு, மறு நாள் பூஜைக்கு வேறு லிங்கத்தை செய்து வைத்து வழிபடுவான். இந்த லிங்கங்கள் சிறிது கூட சேதம் இல்லாமல், முழு வடிவுடன் தக, தகவென்று ஜொலிப்பதாக இருந்தன. இவ்வாறு அவனால் செய்யப்பட்டு, யமுனை நதியில் வீசப்பட்ட லிங்கங்களே ‘பாணலிங்கம்’ எனப்படுகிறது.

    இரட்டை அம்மன் :

    சேலம் மாவட்டம் கண்ணூரில் மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த ஆலயத்தின் கருவறையில் ஒரே பீடத்தில் வலதுபுறத்தில் மாரியம்மனும், இடதுபுறத்தில் காளியம்மனும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், இந்த அம்மனின் முன்னிலையில் தொட்டில் கட்டி, இங்குள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளித்து, அருகிலிருக்கும் தொட்டிலை ஆட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள், அம்பாளுக்கு மணி கட்டி, மாவிளக்கு எடுத்தால் குறைகள் நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.

    பார்வையின் உயரம்.. லிங்கத்தின் உயரம் :

    தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ளது பூலாநந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் திருநாமம் சிவகாமி அம்மன் என்பதாகும். இந்த அம்மனின் முகம் எப்போதும் வியர்த்துக் கொண்டே இருக்குமாம். அதே போல் இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் பார்ப்பவர்களின் பார்வை எந்த உயரமோ, அந்த அளவுக்கு உயரமாக காட்சி தருவதும் அதிசயங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

    குகைக் கோவில் :

    கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கவியூர் என்ற ஊர் உள்ளது. இங்கு நான்கு ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய பாறையைக் குடைந்து கோவில் கட்டப்பட்டிருக்கிறது. குகைக்குள் 21 அடி உயர சிவலிங்கமும், முன்புறம் ஒரு விநாயகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர். கோவிலும், சிலைகளும் ஒரே பாறையில் இருந்து உருவாக்கப்பட்டவை. புராணங்களின் படி சிவனின் பூதகணங்களால் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மிகச் சிறந்த குகைக் கோவில்களில் இதுவும் ஒன்று.

    Next Story
    ×