search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபாவளி அன்று அதிகாலையில் நீராடுவது எதற்கு?
    X

    தீபாவளி அன்று அதிகாலையில் நீராடுவது எதற்கு?

    எல்லா நாட்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னால், அதாவது விடியல் வேளையில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என்று கூறும் அறநூல்கள் தீபாவளி நாளில் மட்டும் விடியல் வேளையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று கூறுகின்றன.
    நரகாசுரன் மறைந்த நாள் ஐப்பசி மாதம், அமாவாசைக்கு முதல் நாளாகிய சதுர்த்தசி பொருந்திய விடியல் வேளையாகும்.

    அந்த அசுரன் இறப்பதற்கு முன் நல்அறிவு பெற்று தான் உயிர்விடும் இத்திருநாளில் எண்ணெய் தேய்த்து, புத்தாடை உடுத்தி, கடவுளை வழிபடுபவர்களுக்கு பாவங்களை தவிர்த்து அனைத்து நன்மைகளையும் செய்து தருமாறு இறைவனிடம் வேண்டினான். இறைவனும் அருளினார். தீயது அழிந்த நாளாக நல்லது தொடங்கும் நாளாக, இருள் நீங்கி ஒளிபிறக்கும் நாளாகவும், தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் அனைத்து தேவர்களும் எல்லா அம்சங்களிலும் நிறைந்து வேண்டிய வரம் தருவார் என்று பகவானும் வரம் தந்தார்.

    தீயகுணங்கள் அழிக்கப்படுவதே இவ்வரலாற்றின் தத்துவமாகும். தீபாவளி நாளில் செய்யப்படும் பூஜை உயிர்களை நரகத்தில் இருந்து காக்க முடியும் என்பதால் நரக சதுர்த்தசி என பெயர் பெற்றது. தீபாவளி அன்று நீரில் கங்கையும், எண்ணெயில் மகாலட்சுமியும், புதுதுணியில் பார்வதி அம்சமும், விளக்கில் விஷ்ணுவும், பட்டாசில் சிவனும், உணவில் அன்னபூரணியும், தீபாவளி லேகியத்தில் பிரம்மாவும், புதுக்கணக்கில் சரஸ்வதியும், பலகாரங்களில் தேவர்களும் அம்சமாக நிறைந்து நம்மை மகிழ்விப்பதாக ஐதீகம்.

    செல்வ செழிப்பை அளிக்கும் மகாலட்சுமியை போற்றி வழிபடும் நாளாகவும், லட்சுமி குபேர பூஜை செய்து வழிபடும் நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி அன்று வாழ்த்து கூறும் போதே ‘கங்கா ஸ்நானம் ஆச்சா’? என்று ஒருவருக்கு ஒருவர் கேட்டுக்கொள்ளும் நிகழ்வுகளையும் நாம் காணமுடியும்.

    ஐப்பசி துலாம் ராசியில் சூரியன் தன்பலத்தை இழக்கிறார். இந்த மாதத்தில் 30 நாளும் நீர்நிலைகளில் துலாஸ்நானம் செய்து சூரியனை வழிபடுவது சிறப்பாகும். இந்த மாதத்தில் காவிரியில் கங்கை கலப்பதாக நம்பிக்கை இருப்பதால், காவிரி, கங்கையில் நீராட முடியாதவர்கள் நம் வீட்டிலேயே தீபாவளி அன்று அதிகாலை நீராடுவதன் மூலம் கங்கை ஸ்நானம் செய்வதுடன், சூரியனின் பலனையும் பெறலாம் என்பது நம்பிக்கையாகும்.

    ஐப்பசியில் துலாம் ஸ்நானம் என்று காவிரியில் நீராடி வழிபட்டால் நமக்கான பலனை சூரியன் அளிப்பார். இதனால் தான் கங்கா ஸ்நானம் முக்கியமாகும்.

    எல்லா நாட்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னால், அதாவது விடியல் வேளையில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என்று கூறும் அறநூல்கள் தீபாவளி நாளில் மட்டும் விடியல் வேளையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று கூறுகின்றன.

    திருபாற்கடலில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அப்போது நாராயணன் திருபாற்கடலில் உள்ள திலத்தீவில் மறைந்து கொண்டார். ‘திலம்’ என்றால் எள். நாராயணனை தேடி லட்சுமி தேவியும் அத்தீவிற்கு வந்தார். தீவில் நாராயணனை பார்த்ததும் இருவரும் அங்குமிங்கும் ஓடிவிளையாடினர்.

    அப்போது அத்தீவில் உள்ள எள்செடிகள் அனைத்தும் நசுங்கின. செடியில் உள்ள எள் அனைத்தும் எண்ணெயாகி அவர்கள் மீது ஒட்டிக்கொண்டது. இதனால் தான் நாமும் எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) தேய்த்துக் குளித்து தீபாவளியை கொண்டாடுகிறோம்.

    கேதாரேசுவரரான சிவபெருமானை குறித்து பார்வதி விரதம் அனுஷ்டித்ததால் இவ்விரதம் கேதார கவுரி விரதம் எனப்படுகிறது. விரதத்தின் மகிமையால் தனது, உடம்பின் இடப்பாகத்தை பார்வதி தேவிக்கு தந்தார் ஈஸ்வரன். கணவரின் அன்பை பெறுவதற்காகவும், மாங்கல்யம் பலம் பெறுவதற்காகவும் புரட்டாசி மாதம் சுக்லபட்சம் தசமி அன்று தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரை பெண்கள் விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

    அவ்வாறு செய்ய முடியாதவர்கள் இறுதி நாளன்றாவது விரதத்தை மேற்கொள்ளலாம். பூரண கும்பகலசம் வைத்து சிவபெருமானை எழுந்தருள செய்து 21 இழை கொண்ட நூலை ஒன்றாக முறுக்கிகொள்ள வேண்டும். 21 பட்சணங்களுடன் இறைவனை பூஜை செய்தால் கணவன்-மனைவியிடையே ஒற்றுமையும், அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
    Next Story
    ×