search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாலட்சுமி பிருகு முனிவருக்கு புதல்வியான கதை
    X

    மகாலட்சுமி பிருகு முனிவருக்கு புதல்வியான கதை

    மகாலட்சுமி பிருகு முனிவருக்கு புதல்வியான கதை என்ன என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.
    சப்த ரிஷிகளில் பிருகு முனிவர் ஒருவராவார். கடும் தவங்கள் பல இயற்றி தெய்வ அருளையும் பெற்றவர். எந்த அளவுக்கு அவர் தவ வலிமை பெற்றிருந்தாரோ அந்த அளவுக்கு அவரிடம் முன் கோபமும் குடி கொண்டிருந்தது. அவருக்கு கோபம் வந்து விட்டால் சாமானிய மனிதனாக இருந்தாலும் சரி இறைவனாகவே இருந்தாலும் சரி எடுத்தெறிந்து பேசி விடுவார். அதோடு தகாத முறையில் அவர்களிடம் நடந்து கொள்வார்.

    ஒருமுறை பிருகு முனிவர் பிரம்மதேவனைக் காண்பதற்காக பிரம்மலோகம் சென்றார். பிரம்மதேவர் உடனே வந்து பிருகு முனிவரைச் சந்திக்காமல் சற்றுக் கால தாமதம் செய்யவே பிருகு முனிவருக்கு கடும் கோபம் வந்து விட்டது. பிருகு முனிவரை வரவேற்க விரைந்து வந்து பிரமனை நோக்கி, “உம்முடைய இருப்பிடம் தேடி வந்திருக்கும் என்னை முறையாக வரவேற்காதது ஏன் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றார்.

    அடுத்து பிருகு முனிவர் கயிலாய மலைக்கு சிவபெருமானை தரிசிக்கும் நோக்கத்துடன் சென்றார். அப்போது சிவபெருமான் கண்களை மூடியவாறு ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். ஆகவே அவர் பிருகு முனிவரை பார்க்கவில்லை.

    இதனால் கயிலையை விட்டுப் புறப்பட்ட பிருகு முனிவர் வைகுண்டம் வந்தார்.

    அப்போது மகாவிஷ்ணு லட்சுமிதேவியிடம் உரையாடிக் கொண்டிருந்தார். பிருகு முனிவரை அவர் கவனிக்கவில்லை. இதனால் கடும் கோபம் கொண்ட பிருகு முனிவர் தம்மை அவர் வேண்டும் என்றே அவமரியாதை செய்வதாக எண்ணிக் கொண்டு மகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார்.

    திடுக்கிட்ட மகாவிஷ்ணு எதிரே பிருகு முனிவர் நிற்பதைக் கண்டு பரபரப்படைந்தவராக எழுந்து பிருகு முனிவரிடம் “முனி சிரேஷ்டரே! தாங்கள் என்னை உதைத்ததன் காரணமாக தங்கள் கால் எவ்வாறு வலிக்கிறதோ” என்று வருந்திக் கூறினார்.

    ஆனால், தனது ‘கணவர் ஒரு சாமானிய பூலோகவாசியால் அவமானப்பட்டதை லட்சுமி தேவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
    தம்மை அவமானப்படுத்திய பிருகு முனிவரை சபிக்காமல் அவர் பாதம் பிடித்து வருத்தம் தெரிவித்த கணவர் மீது கடுங்கோபம் கொண்ட மகாலட்சுமி, ‘இனி இங்கு எனக்கு இடமில்லை. யாருமே காண முடியாதபடி என்னை மறைத்துக் கொண்டு வாழ்வேன்’ என்று கூறிவிட்டு புறப்பட்டாள்.

    பிருகு முனிவரின் சினம் தணிந்து அவருக்கு அறிவும் தெளிவும் ஏற்பட்டது. லட்சுமிதேவி இல்லாத மகாவிஷ்ணுவை அவரால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அவரை விட்டு லட்சுமிதேவி அகன்றுவிட்டால் மூவுலகமும் வளம் குறைந்து நிலைகுலைந்து தடுமாற்றம் அடைந்து விடுமே என்று அஞ்சி, ஓடிச் சென்று லட்சுமி தேவியின் பாதம் பணிந்து அவளைத் தடுத்து நிறுத்தினார்.

    “மகாதேவி! நான் மாபாதகம் செய்து விட்டேன். தேவை இல்லாத சினத்தால் மதியிழந்து நான் செய்த செயலால் மூவுலகமும் நிலை குலைந்துவிடுமே! நான் செய்த தவறை மன்னித்து என்னை ஆட்கொள்ள வேண்டும்” என வேண்டிக் கொண்டார்.

    மகாலட்சுமி நிதானமடைந்து திரும்பவும் மகாவிஷ்ணுவிடம் வந்து அமர்ந்தாள்.

    பிருகு முனிவர் மகாலட்சுமியின் பாதம் பணிந்து, “லோகமாதா! நான் செய்த மகாபாதகத்துக்கு கடும் தண்டனையாக தாங்களே என் மகளாக பிறக்க வேண்டும். என் மார்பில் எட்டி உதைத்து என்னைப் புனிதப்படுத்த வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். அதை ஏற்று மகாலட்சுமி அவர் மகளாக பிறந்து அருள்பாலித்தாள்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    Next Story
    ×