search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காமதேனுவின் மகளான நந்தினி பசு பெற்ற சாபம்
    X

    காமதேனுவின் மகளான நந்தினி பசு பெற்ற சாபம்

    காமதேனுவின் மகளான நந்தினிப் பசுவிற்கு ஆணவத்தால் கிடைத்த சாபத்தையும் அதிலிருந்து விமோசனம் பெற்றதையும் பார்க்கலாம்.
    ஜாபாலி முனிவரிடம் காயத்ரி மந்திரத்தைக் கற்றுக் கொண்ட அருணாகரா எனும் அரக்கன், பிரம்மாவை வேண்டி தவமிருந்தான். அவனது தவத்திற்கு மனமிரங்கிய பிரம்மா, அசுரனின் முன்பாகத் தோன்றினார்.

    அவரிடம், ‘சாகா வரம் வேண்டும்’ என்று கேட்டான் அசுரன். பிரம்மாவோ, பிறந்தவர் அனைவரும் இறந்தே ஆக வேண்டும். ஆகையால் அழியாத வரம் தர இயலாது’ என்று கூறிவிட்டார்.

    ஆனால் அசுரனோ, ‘அப்படியானால் சரி.. நான் காயத்ரி மந்திரம் சொல்லும் வேளையில் தேவர்கள், மனிதர்கள், பெண்கள், இரண்டு கால்கள் மற்றும் நான்கு கால்களைக் கொண்ட விலங்குகளால் எனக்கு அழிவு ஏற்படக் கூடாது’ என்ற வரத்தைக் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தார்.

    இதையடுத்து அந்த அசுரன் தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள், விலங்குகளை கொடுமைப்படுத்தினான். தன்னையே அனைவரும் வணங்க வேண்டும் என்று வற்புறுத்தினான். தன்னை வணங்காதவர்களை சிறையில் அடைத்தான். அப்படி சிறையில் அடைபட்டவர்களின் வருண பகவானும் ஒருவர். அவர் சிறைபட்டதால், பூலோகத்தில் மழை பொய்த்துப் போனது. மனிதர்கள், விலங்குகள் மழை இல்லாமல் அழிந்தன.

    உலக உயிர்களைக் காப்பாற்ற தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் போய் வேண்டி நின்றனர். அவர், ‘பார்வதி தேவி பூமியில் தோன்றி அந்த அசுரனை அழிப்பார்’ என்று ஆறுதல் கூறினார்.

    இந்த நிலையில், தன்னிடம் காயத்ரி மந்திரத்தைக் கற்றுக் கொண்ட அரக்கனால், பலரும் துன்பப்படுவதை கண்டு ஜாபாலி முனிவர் வருந்தினார். பூலோகத்தில் ஏற்பட்டிருக்கும் பஞ்சத்தைப் போக்க சிறப்பு வேள்வி செய்ய முன்வந்தார். வேள்விக்கு, நீரும், மற்ற பொருட்களும் கொண்டு வர வேண்டுமே, ஆகையால் இந்திரனிடம் சென்று கேட்டதைத் தரும் காமதேனுப் பசுவை தனது வேள்விக்கு அனுப்பும் படி வேண்டினார்.

    சாபம் :

    ஆனால் அந்த நேரத்தில், காமதேனுப் பசு, வேறொரு வேள்விக்காகச் சென்றிருந்தது. எனவே இந்திரன், காமதேனு பசுவுக்கு இணையான சக்தியைக் கொண்டிருக்கும், காமதேனுவின் மகளான நந்தினிப் பசுவைப் பூமிக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினான்.

    ஜாபாலி முனிவர் மனம் மகிழ்ந்தார். பின்னர் நந்தினிப் பசுவிடம், பூலோகத்தில் உள்ள பஞ்சத்தையும், மக்கள் படும் துயரத்தையும் எடுத்துரைத்து தன்னுடன் வந்து வேள்விக்கு உதவும்படி அழைத்தார்.

    ஆனால் நந்தினிப் பசுவோ, ஆணவம் கொண்டு, ‘பாவிகள் நிறைந்த பூலோகத்திற்கு என்னால் வர முடியாது’ என்று மறுத்து விட்டது.

    அதனைக் கேட்டுக் கோபமடைந்த முனிவர், ‘பூலோக மக்களின் துன்பத்தைப் போக்குவதற்காக என்னுடன் வர மறுத்த நீ, பூலோகத்தில் நதியாக பிறப்பாய்’ என்று சாபமிட்டார்.

    சாபம் பெற்ற நந்தினிப் பசு, தன்னுடைய தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்பு கேட்டது.

    மனமிரங்கிய முனிவர், ‘நந்தினிப் பசுவே! கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற முடியாது. பூமியில் நதியாகப் பிறந்து ஓடிக் கொண்டிருக்கும் உன்னிடம் இருந்து, பார்வதி தேவி தோன்றும்போது, உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்’ என்றார்.

    விமோசனம் :

    பூலோகம் வந்த நந்தினிப் பசு, கனககிரி என்ற மலைப்பகுதிக்குச் சென்று, அங்கிருந்து நேத்ராவதி நதியாக மாறிப் பூமியில் ஓடத் தொடங்கியது. ஜாபாலி முனிவர் புதிதாகத் தோன்றிய அந்த நதிக்கரையில் தன்னுடைய வேள்வியைச் சிறப்பாக செய்து முடித்தார். அதன் பயனாகப் பூமியில் பஞ்சமும், பட்டினியும் மறையத் தொடங்கியது.

    மீண்டும் அசுரன் ஏதாவது செய்யும் முன் அவனை அழித்துவிடும்படி, பார்வதியிடம் கூறினார் சிவபெருமான்.

    ‘இறைவா! பிரம்மதேவர் கொடுத்த வரத்தின்படி, காயத்ரி மந்திரத்தை அவன் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவனை அழிக்க முடியாது. நான் பூமியில் தோன்றுவதற்கு முன்பாக, அவன் காயத்ரி மந்திரத்தைச் சொல்லாமல் இருக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவனை அழிக்க முடியும்’ என்றாள் பார்வதிதேவி.

    இதைக் கேட்ட சிவபெருமான், உடனடியாக பிரகஸ்பதியை அழைத்து, ‘அருணாகர அசுரன், காயத்ரி மந்திரத்தை சொல்லாமல் இருக்க ஏதாவது செய்யுங்கள்’ என்று கூறி அனுப்பினார்.

    பிரகஸ்பதி நேராகச் சென்று அசுரனைச் சந்தித்தார். அவனைப் புகழ்ந்து பேசினார். பின்னர், ‘அனைத்து உலகங்களுக்கும் இறைவனாகிவிட்ட நீங்கள் ஏன், வீணாகக் காயத்ரி மந்திரம் சொல்லி இன்னொருவரைப் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும்’ என்று கேட்டார்.

    அதைக் கேட்ட அசுரனும் ஆணவம் கொண்டு, ‘ஆமாம்.. நான் ஏன் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்’ என்று நினைத்து, காயத்ரி மந்திரம் சொல்வதை நிறுத்தி விட்டான். இதற்காகவே காத்திருந்த பார்வதிதேவி பூமிக்கு வந்தார்.

    பின் அசுரனின் அரண்மனைத் தோட்டத்தில் அழகிய மங்கை உருவத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்ட அசுரன் அருகில் நெருங்கி வந்தான். அவனைக் கண்டதும் அன்னையானவள் விலகி ஓடினாள். அவரைத் தொடர்ந்து சென்றான் அசுரன். மலை உச்சிக்கு சென்ற பார்வதிதேவி, ஒரு பாறை இடுக்கிள் நுழைந்து அங்கிருந்த தேன் கூட்டில் தேனீயாக மாறி அமர்ந்து கொண்டாள். விரட்டி வந்த அசுரனும் பாறை இடுக்கிள் கையை விட்டு தேடினான். அப்போது தேன் கூடு கலைந்து, தேனீக்கள் அனைத்தும் அசுரனை கொட்டின. தேனீயாக மாறி இருந்த பார்வதியும் கோபத்துடன் அசுரனை கொட்ட, அவன் சுருண்டு விழுந்து இறந்தான்.

    இந்தக் காட்சியை சிறிது தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜாபாலி முனிவரும், இந்திரனும் பார்வதி தேவியை வணங்கியபடி, அங்கிருந்த பார்வதி சிலைக்கு இளநீரைக் கொண்டு நீராட்டி, அவளுடைய கோபத்தைக் குறைத்துக் கொள்ளும்படி வேண்டினர்.

    இதனால் கோபம் குறைந்த பார்வதிதேவி, அந்தப் பகுதியில் ஓடிக் கொண்டிருந்த நேத்ராவதி நதியில் இறங்கி நீராடி, பின்னர் லிங்க வடிவில் தோன்றினாள். நதியினிடையே, லிங்க வடிவில் தோன்றிய பார்வதி தேவியை, இந்திரனும், ஜாபாலி முனிவரும் வணங்கினர்.

    நேத்ரா நதியில் பார்வதி தேவி இறங்கிய வேளையில், நந்தினிப் பசுவின் சாபமும் நீங்கியது. நதியாக ஓடிக் கொண்டிருந்த தனக்குச் சாப விமோசனமளித்த பார்வதி தேவிக்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக நந்தினிப் பசு அவளை வணங்கியது. பின்னர் நந்தினிப் பசு இந்திரலோகம் புறப்பட்டுச் சென்றது. நேத்ரா நதி, நந்தினிப் பசுவை நினைவுபடுத்தும் விதமாக இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.

    பொதுநலன் கருதிச் செய்யப்படும் செயல்களுக்கு உதவி என்று ஒருவர் கேட்கும் நிலையில், நம்மால் முடிந்த உதவியைச் செய்திட முன் வர வேண்டும். அதை மறுக்கும் நிலையில், நமக்குப் பெருந்துன்பமே வந்து சேரும் என்பதை நந்தினிப் பசு பெற்ற சாபமும், விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன.

    கடில் துர்கா பரமேஸ்வரி கோவில் :

    அருணாகராவைக் கொன்றதும் பார்வதி தேவி, நேத்ராவதி நதியில் இறங்கி லிங்க வடிவில் தோற்றமளித்தார். அவளை வணங்கி இந்திரனும், ஜாபாலி முனிவரும், அந்த இடத்திலேயே கோவில் கொண்டு அருள வேண்டும் என்று பார்வதிதேவியை வேண்டினர். அவளும் அந்த இடத்தில் துர்க்கா பரமேஸ்வரி எனும் பெயரில் கோவில் கொண்டாள்.

    நதியின் இடையில் லிங்க வடிவத்தில் அன்னை இருந்ததால், பார்வதி தேவியின் பாதி உடல் மட்டும் நீரில் மூழ்கி இருந்தது. அவள் நதிக்கு இடையில் தோன்றியதால் அந்த இடத்திற்கு ‘கடிலா’ என்று பெயர் வந்தது. நடு என்பதற்கு ‘கடி’ என்றும், இடம் என்பதற்கு ‘லா’ என்றும் பொருள். கடிலா என்பதே காலப்போக்கில் மருவி ‘கடில்’ என்றாயிற்று.

    கர்நாடகா மாநிலம், மங்களூருவில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கடில் என்னும் ஊர். இந்தத் திருத்தலத்தின் பின்பகுதியில் நேத்ராவதி நதி இரண்டாகப் பிரிந்து கோவிலுக்கு மாலை அணிவித்தது போல் ஓடிக்கொண்டிருக்கிறது. நதியின் இடையில் ஆலயக் கருவறை அமைந்திருப்பதால், இங்கு தரப்படும் குங்குமம் ஈரமாகவே இருக்கிறது.
    Next Story
    ×