search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

    வெம்மையால் உடலில் தோன்றும் முத்துகளை ஆற வைப்பதால் முத்தாரம்மன் என்றும், முத்துகளை ஆரமாக அணிந்தவள் என்பதால் முத்தாரம்மன் என்றும் பலவாறாக அன்னை பெயர் காரணம் பெறுகின்றாள். அன்னை முத்தாரம்மன், சுவாமி ஞானமூர்த்தீசுவரர் சமேதராய் அம்மையும், அப்பனுமாக ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி மற்ற திருக்கோவில்களில் காண இயலாத அற்புத காட்சியாகும். வினை மற்றும் மன நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு தம் குறைகள் நீங்க பெறுகின்றனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 1-ந் தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா நடக்கிறது. காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மதியம், மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மதியம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், மகுட இசை போன்றவை நடக்கிறது. இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் திருநாளான வருகிற 10-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.

    11-ம் திருநாளான 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் நடக் கிறது. 3 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவில் அபிஷேக மேடையில் அபிஷேக, ஆராதனைகள் முடிந்து திருத்தேரில் பவனி வருகிறார். அதிகாலை 5 மணிக்கு சவுந்திரபாண்டிய நாடார்-தங்ககனி அம்மாள் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் நடக் கிறது.

    காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதி உலா புறப்படுதல், மாலை 5.30 மணிக்கு அம்மன் திருக்கோவில் வந்து சேர்தல், மாலை 6 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    12-ம் திருநாளான 12-ந்தேதி(புதன்கிழமை) காலையில் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான அன்னக்கொடி, இணை ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×