search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கடையூர் தலத்தில் அமிர்தகடேசுவரர் - அபிராமி அன்னை எதிர் எதிரே நிற்பது ஏன்?
    X

    திருக்கடையூர் தலத்தில் அமிர்தகடேசுவரர் - அபிராமி அன்னை எதிர் எதிரே நிற்பது ஏன்?

    திருக்கடையூர் திருத்தலத்தில் அமிர்தகடேசுவரர் மேற்கு திசை நோக்கியும், அபிராமி அன்னை கிழக்கு திசை நோக்கியும் எதிர் எதிரே தனி சன்னதியில் உள்ளனர்.
    திருக்கடையூர் திருத்தலத்தில் அமிர்தகடேசுவரர் மேற்கு திசை நோக்கியும், அபிராமி அன்னை கிழக்கு திசை நோக்கியும் எதிர் எதிரே தனி சன்னதியில் உள்ளனர். இதன் பின்னணியில் ஒரு சிறப்பம்சம் கூறப்படுகிறது.

    திருக்கடையூர் கோவில் கம்பீரமாக உயர்ந்து விளங்கும் ராஜகோபுரத்துடன் அமைந்த பெரிய கோவிலாகும். கோவிலின் மூன்று பிரகாரங்களையும் கடந்து சென்றால் மகாமண்டபம் வரும். இம்மண்டபத்தில் கால சம்கார மூர்த்தி தனி சன்னதியில் உள்ளார். அங்கு அவரது செப்புத் திருமேனியைக் கண்டு வழிபடலாம். காலனை சம்ஹாரம் செய்த அவசரத்தில், தம் திருக்கரங்களில் சூலம், மழு, பாசம், தர்சனி தரித்தவராய்த் தெற்கு நோக்கி எழுந்தருளி நிற்கிறார். உதைபட்ட காலன், திருவடியின் கீழ் உருண்டு கிடக்கிறான்.

    வரம் பெற்ற மார்க்கண்டன் கை கூப்பி வணங்கி நிற்க, அன்னை சாட்சியாகக் கருணைக்கண் கொண்டு அருகில் நிற்க கண்டு வழிபடலாம். கால, சங்காரப் பெருமானைக் கண்டு வழிபடுவோர் நமனுக்கு அஞ்சாது நெடுங்காலம் வாழலாம். இம்மகா மண்டபத்தை அடுத்து உள்ளது சங்கு மண்டபம். இம்மண்டபத்தில் தான் அமுதகடேசுவரருக்கு 1008 சங்கு அபிஷேகம் நடைபெறும். மார்க்கண்டன் இங்கு இறைவனுக்கு 1008 வலம்புரிச் சங்குகளில் நீர் நிறைத்து அபிஷேகம் செய்ததாக ஐதீகம்.

    இச்சங்கு மண்டபத்தை அடுத்த கருவறையுள் மேற்கு நோக்கியவாறு அமுதகடேசுவரர் மகாலிங்கத் திருமேனியராகக் காட்சி தருகின்றார். நீண்ட ஆயுளைப் பெற்று வாழ விரும்புவோர் இப்பெருமானை வணங்கி வழிபடுதல் வேண்டும்.

    மேற்கு நோக்கிய இறைவன் திருச்சன்னதிக்கு எதிரில் வெளிப்பிரகாரத்தில் அன்னை அபிராமி கிழக்கு நோக்கித் கோவில் கொண்டு திகழ்கின்றாள். அன்னையின் உருவம் மிகவும் அழகு வாய்ந்தது. மூன்றடி (90 செ.மீ) உயிர பீடத்தில் நான்கு திகரங்களோடு நின்று அன்னை காட்சி அருள்கின்றாள். 

    இரண்டு கரங்கள் அபயவரத முத்திரைகள் தாங்க, இரண்டு கரங்கள் மலரும் மாலையும் தாங்கித் திகழ்கின்றன. அன்னையின் முகம் அருளை வாரிப் பொழிகின்றது.

    நீண்ட ஆயுளைப் பெறுவதோடு, இன்னலற்று இன்புற்று வாழ்தல்வேண்டும் என விரும்புவோர், அபிராமியை வணங்கி வழிபடுதல் வேண்டும். 

    இவற்றை ஒரு நேர வழங்கி அருளுவதற்காகவே இறைவனும் அன்னையும் இத்தலத்தில் எதிர் எதிராக எழுந்தருளித் திகழ்கின்றனர்.
    அமிர்தகடேசுவரரை வணங்கி வழிபட்டுத் திரும்பும் அந்நிலையிலேயே அபிராமியையும் வழிபட வேண்டும் என்பதன் பொருட்டே அன்னையும் அப்பனும் எதிர் எதிரே நின்று பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
    Next Story
    ×