search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அசரவைக்கும் திருக்கடையூர் அபிராமி அழகு
    X

    அசரவைக்கும் திருக்கடையூர் அபிராமி அழகு

    திருக்கடவூரில் தேவியை அழகு எனச்சொல்லத்தக்க வகையில் ‘அபிராமி’ எனும் அழகுப்பெயர் கொண்டு அன்னை திகழ்கிறாள்.
    ‘‘தனந்தரும், கல்வி தரும், ஒரு நாளும் தளர்வறியா
    இனந்தரும், தெய்வ வடிவுந்தரும், நெஞ்சில் வஞ்சமில்லா
    இனந்தரும், நல்லன எல்லாந்தரும், அன்பர் என்பவர்க்கே
    கனம்தரும் பூங்குழ லாள்அபிராமி கடைக்கண்களே.”

    - அபிராமி அந்தாதி

    திருக்கடையூர் ஆலயம் இரண்டு காரணங்களுக்காக விசேஷமானது. முதலாவது இங்கு வந்து கால சம்ஹார மூர்த்தியையும் அமிருதகடேஸ்வரரையும் தரிசனம் செய்பவர்கள் ஆயுள் விருத்தி அடையும். அடுத்து அவர் அருகிலேயே குடி கொண்டு உள்ள ஞான தேவியான அன்னை அபிராமியை தரிசித்து அபிராமி அந்தாதியை சொல்லி வந்தால் ஞானம் மட்டும் அல்ல செல்வத்தையும் வாரி வாரி அவள் வழங்குவாள். 

    ஆகவே ஆயுள் விருத்திக்காகவும், செல்வம் பெருகவும் வாழ்நாளில் ஒரு முறையாவது இங்கு செல்வது அவசியம். திருக்கடவூரில் தேவியை அழகு எனச்சொல்லத்தக்க வகையில் ‘அபிராமி’ எனும் அழகுப்பெயர் கொண்டு அன்னை திகழ்கிறாள். ‘அபிராமி’ என்றால் ‘அழகு’ என்று பொருள். அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவலில் என்று அபிராமி பட்டர் பாடுவார்.

    அன்னையின் அழகுத் தோற்றத்தை லலிதா சகஸ்ர நாமமும், சௌந்தர்ய லகரியும், கேசாரி பாதாந்தம் வர்ணிக்கின்றன. வாமா என்றால் அழகு என்ற பொருள். ‘வாமி’ என்றால் அழகி என்று பொருள். சிவபெருமானின் வாம பாகத்தில் விளங்குவதாலும் ‘வாமி’ ஆவாள்.
    மங்களமான அழகை உடைய திரிபுரசுந்தரியை அபிராமியின் வடிவில் பட்டர் கண்டு மகிழ்கிறார்.

    அபிராமி அந்தாதியில் அம்பிகையின் வடிவம் பற்றிய வர்ணனை நிறைந்து கிடக்கிறது. அம்பிகையின் திருவடிகளைத் தொழுவதால் அடைகின்ற பலன்கள் ஏராளம். 

    ‘அபிராமி’ பெயரிலும் அழகு, வடிவிலும் அழகு. ‘ரம்யம்’ என்றால் அழகு. ரம்யத்தை உடையவள் ‘ராமி’ (அழகுடையவள்), அபி&மேலான, எனவே ‘அபிராமி’ என்ற சொல்லுக்கு ‘மேலான அழகுடையவள்’ என்பது பொருள்.

    அபிராமி எப்படி தோன்றினாள் தெரியுமா? அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.
    மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள். 

    அன்னை அபிராமி கண்கண்ட தெய்வம், அழகுக்கொரு வரும் ஒவ்வாத செல்வி, சின்னஞ்சிறு பெண்ணுருவில் திகழும் உத்தமிழ், எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் ஈன்றருளும் வள்ளல் நாயகி, அபிராமி பட்டர் என்ற அன்பருக்கு அமாவாசையிலும் சந்திரோதயம் காட்டி, அபிராமி அந்தாதி என்னும் பாமாலை சூட்டிக் கொண்ட செல்வி. 

    அன்னை அபிராமியினிடத்தில் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் பட்டர் ஒருவர், பக்தி முற்ற முற்ற அவர் உன் மத்மராகவே ஆகிவிட்டார். அதைக் கண்ட அர்ச்சகர்கள், அவரை வெறுத்தது மட்டுமின்றி அவர் மீது பொறாமையும் கொண்டனர். ஒருநாள், தஞ்சை மன்னன் வந்த போது, பட்டர் அமாவாசையைப் பவுர்ணமி என்று கூறினார். 

    அதைக் கொண்டே அர்ச்சகர்கள் அவரைப் பற்றிப் பலவாறாகப் பேசினர். பட்டர் தமது தவறை உணர்ந்து, உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் என்று பாடத் தொடங்கி, எழுபத்தெட்டு பாடல்களைப் பாடி முடித்து, எழுபத்தொன்பதாவது பாடலை,

    விழிக்கே அருளுண்டு அபிராம
    லல்லிக்கு வேதம் சொன்ன
    வழிக்கே வழிபட நெஞ்சுண்டு
    எமக்கு, அவ்வழி கிடக்க 
    பழிக்கே சுழன்று வெம்
    பாவங்களே செய்து பாழ்நரகக்
    குழிக்கே அழுந்தும் கயவர்
    தம்மொடு என்ன கூட்டு இனியே

    என்று பாடினார். 

    தயவர் தம்மொடு என்ன கூட்டு இனியே என்று அவர் பாடி முடித்த வேளையில், அன்னை அபிராமி தன் திருச்செவியில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி வானத்தில் வீசி எறிந்தாள். அந்தத் தோடே வான வெளியில் முழு மதியாகக் காட்சியளித்தது. 

    அமாவாசையன்றே பவுர்ணமி நிலவு உதிப்பதைக் கண்டு மன்னர், அர்ச்சகர்கள் எல்லோரும் வியந்து நின்றனர். பட்டரின் திருவடியில் விழுந்து வணங்கி மன்னிப்பு வேண்டினர்.

    பட்டர் இவ்வாறு பாடிய அந்தாதிப் பாடல்களைக் கொண்டதே அபிராமி அந்தாதி, அபிராமியின் அருள் பெற்ற அந்தப் பட்டர், அபிராமி பட்டர் என்ற பெயரால் அதுமுதல் அழைக்கப்பெற்றார். அந்த அந்தாதிப் பாடல்கள் அன்னையை வழிபடுவதற்கேற்ற அற்புதப் பாடல்களாகும். 

    இன்னலற்று இடர்படுவோர் அப்பாடல்களை ஓதி அன்னையை வழிபட்டால் எல்லா நலன்களையும் பெற்று இன்புற்று வாழ்வர். அன்னையின் கடைக்கண் நோக்கினால் அன்பர்கள் பெறும் பேறுகள் பலவாகும்.
    Next Story
    ×