search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தந்தைக்காக வரம் கேட்ட பிரகலாதன்
    X

    தந்தைக்காக வரம் கேட்ட பிரகலாதன்

    பிரகலாதனை அழிக்க முடியவில்லை. நாராயணன் துணையிருக்கும் போது, மரணம் எப்படி அருகில் வரும்.
    எதிரியின் மீது தன் மகன் பிரகலாதன் வைத்திருக்கும் பக்தியால் ஆடிப்போனான் இரண்ய கசிபு. முதலில் கெஞ்சிப் பார்த்தான். பிறகு பல வழிகளில் துன்பம் கொடுத்துப் பார்த்தான். ஆனாலும் பிரகாலாதன் மனம் மாறவில்லை. ஆகையால் அவனைக் கொல்லவும் துணிந்து விட்டான். பல முயற்சிகள் செய்தும், பிரகலாதனை அழிக்க முடியவில்லை. நாராயணன் துணையிருக்கும் போது, மரணம் எப்படி அருகில் வரும்.

    இறுதியாக இரண்யகசிபுக்கும், பிரகலாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தன் கதாயுதத்தால் அங்கிருந்த தூணை தகர்த்தான் இரண்யகசிபு. பெரிய கர்ஜனையுடன் அதில் இருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். அரண்மனை வாசலில் தன் மடி மீது இரண்யகசிபுவை கிடத்தி, தன் நகத்தால் வயிற்றை குத்தி கிழித்து வதம் செய்தார். கோபத்தின் வெளிப்பாடு காரணமாக அவரது முகம் மிகவும் பயங்கரமாக காட்சியளித்தது. எவரும் அவர் அருகில் செல்ல பயந்து நடுங்கினர்.

    இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும் கூட, நரசிம்மரின் உக்கிரம் குறையவில்லை. அவர் அடிக்கடி நாக்கை வெளியே நீட்டியபடியும், கர்ஜனை செய்த படியும் அங்கிருந்த சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தார். நரசிம்மரை எவ்வாறு சாந்தப்படுத்துவது என்னும் வழி தெரியாமல், தேவர்கள், பிரம்மா, சிவபெருமான் முதலானவர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் நரசிம்மரை போற்றி துதித்து பாடியும் பயன் இல்லாமல் போயிற்று.

    இதையடுத்து அனைவரும் மகாலட்சுமி தேவியை அழைத்து, நரசிம்ம மூர்த்தியை சாந்தப்படுத்தும்படி வேண்டிக் கொண்டனர். ஆனால் நரசிம்மரின் உக்கிரமான கோர உருவத்தை பார்த்த லட்சுமிதேவி, ‘அனைவரது இஷ்ட தெய்வமான திருமாலை இதுபோன்று பயங்கர தோற்றத்துடன் நான் பார்த்தது இல்லை. என்னால் அவர் அருகில் கூட செல்ல முடியாது’ என்று கூறினாள்.

    கடைசியில் பிரகலாதனிடம் சென்றார் பிரம்மதேவர். ‘பிரகலாதா! இந்த சிறப்பான அரிய செயலை உன்னால் மட்டுமே செய்ய முடியும்! நீ நரசிம்ம மூர்த்தியிடம் சென்று அவரை சாந்தப்படுத்து’ என்று கூறினார்.

    பிரகலாதனுக்கு ஏது பயம்?. அது மட்டும் இருந்திருந்தால் அவன் தன் தந்தையின் அரக்க குணத்திற்கு, என்றோ அடிமைப்பட்டு போயிருப்பானே!.

    பிரம்மதேவர் கூறியதும் நரசிம்ம பெருமாளின் அருகில் சென்ற பிரகலாதன், அவருக்கு முன்பாக விழுந்து பாதங்களை தொட்டு வணங்கினான். பக்தனின் பக்தியை பார்த்தபடி இருந்த நரசிம்மர், பிரகலாதனை அப்படியே தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டார். தான் ஈன்ற குட்டியை, நாவால் வருடிக் கொடுக்கும் ஆட்டினைப் போல, தன் பக்தனின் முகத்தை தன் திருக்கரங்களால் வருடிக் கொடுத்தார்.

    பின் கூறினார். ‘பிரகலாதா! உன் பக்தி மிகவும் உயர்வானது. இருப்பினும் நான் வர தாமதம் ஏற்பட்டு விட்டது. ஆகையால்தான் நீ மிகவும் துன்பப்பட நேர்ந்து விட்டது. என்னை மன்னித்து விடு. உனக்கு விருப்பமான வரம் கேள், தருகிறேன்’ என்றார்.

    ‘சுவாமி! எவனொருவன், ஏதாவது ஒன்றை பெறுவதற்காக தன் எஜமானுக்கு தொண்டு செய்கிறானோ, அவன் தொண்டனே இல்லை. தாங்கள் என்னை உய்விக்க வந்த எஜமான்; நான் உங்களை சரணடைந்த சேவகன். கண்டிப்பாக எனக்கு தாங்கள் ஏதாவது வரம் தர வேண்டும் என்று விரும்பினால், என் மனதில் எந்த விதமான ஆசையும் இல்லாதபடி செய்து விடுங்கள்’ என்றான் பிரகலாதன்.

    தன் பக்தனின் எண்ணத்தை பற்றி அறியாதவரா பகவான். ‘உன் விருப்பப்படியே ஆகட்டும்’ என்று கூறிய நரசிம்மர், மீண்டும் ‘ஏதாவது கேள் பிரகலாதா!’ என்று கூறினார்.

    ‘பகவான் இவ்வளவு தூரம் தன்னிடம் கூறுகிறார் என்றால், தன் மனதில் ஏதோ ஒரு ஆசை இருக்கத்தான் செய்யும். இல்லையெனில் பகவான் தன்னிடம் திரும்பத் திரும்ப கூறமாட்டார்’ என்பதை சிந்தித்த பிரகலாதன், ‘சுவாமி! என் தந்தை மோசமான முறையில் தங்களை நிந்தித்து விட்டார். உங்கள் பக்தனான என்னையும் துன்புறுத்தி விட்டார். இருப்பினும், அவர் செய்த பாவங்களை நீக்கி அவரை புனிதப்படுத்துங்கள். இதுவே என் விருப்பம்’ என்றான்.

    நரசிம்மர் புன்னகை செய்தபடி, ‘குழந்தாய்! உன் போன்று ஈடில்லா பக்தியுடைய பக்தனின் தந்தையானவன், தன்னாலேயே புனிதத் தன்மையை அடைந்து விடுவான். உன் போன்ற பக்தன் எந்த குலத்தில் பிறக்கிறானோ, அந்த குலத்தில் 21 தலைமுறையினர் தங்கள் பாவங்களில் இருந்து கடைத்தேறிவிடுகிறார்கள் என்பதை அறிந்துகொள்’ என்றார்.

    தனக்கு தீங்கிழைத்தவர்களுக்கும், எவ்வித துன்பமும் நேரக்கூடாது என்பது தான் பிரகலாதனின் மனதில் இருந்த ஆசையாகும்.
    Next Story
    ×