search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்
    X

    துன்பங்கள் போக்கும் வைகாசி விசாகம்

    வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும்.
    சிவபெருமானின் பெருமையை உணராத பிரம்ம தேவர் மற்றும் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், தட்சனுக்கு பயந்து அவன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டனர். அதனால் அவர்கள் அனைவரும் பெரும் துன்பத்தில் துவளும் நிலை ஏற்பட்டது.

    ‘உங்கள் அம்சம் பொருந்திய சக்தியை தவிர வேறு எந்த சக்தியாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது’ என்று சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்த சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் அந்த துன்பம் தேவர்களுக்கு வந்து சேர்ந்தது.

    சூரபத்மனால் தேவர்கள் அனைவரும் வெற்றி கொள்ளப்பட்டனர். தாங்கள் ஏவிய பணிகளை செய்ய பல பணியாளர்கள், தேவலோக வாழ்வு என்று இன்ப களிப்பில் மிதந்து வந்தவர்கள் அனைவரும் சூரபத்மனுக்கு ஏவல் புரியும்படி ஆயிற்று. இந்த ஏவல் பணி செய்யும் தேவர் குழாமில் பிரம்மதேவரும் கூட தப்பவில்லை.

    பல ஆண்டுகாலமாக சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் துன்பம் அனுபவித்து வந்த தேவர்கள், சிவ பெருமானை நோக்கி தவம் இயற்றினர். அவரை சந்திக்க நந்தி எம்பெருமானிடம் அனுமதி கேட்டு கயிலையின் கதவு அருகே காத்திருந்தனர். எதற்கும் பலனில்லாமல் போயிற்று. செய்த பாவங்கள் அவர்களை துரத்தி வந்தன.

    இறுதியாக ‘சிவபெருமானை தரிசித்து தங்கள் துயரங்களை போக்கும்படி கூறி மன்றாடுவது எப்படி’ என்று விஷ்ணுவிடம் தேவர்கள் அனைவரும் சென்று கேட்டனர். அதற்கு அவர், ‘சிவபெருமானின் அம்சத்தில் உருவாகும் குமாரனால் தான் சூரபத்மனுக்கு அழிவு நேரும். இமயனிடம் வளர்ந்து வரும் பார்வதியின் மீது சிவபெருமானுக்கு மையல் வரும் வகையில், மன்மதனை கொண்டு காம பாணம் தொடுக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார்.

    அதன்படி பிரம்மதேவர், மன்மதனை அழைத்து, சிவ பெருமான் மீது மன்மத அம்பு தொடுக்கும்படி கூறினார். நெருப்பே வடிவான ஈசனின் கோபத்தைப் பற்றி தெரிந் திருந்ததால், பயந்து போன மன்மதன் எவ்வளவோ மறுத்தும், பிரம்மதேவர் விடவில்லை. இறுதியில், ‘என் சாபத்திற்கு ஆளாவாய்!’ என்ற பிரம்மதேவரின் மிரட்டலுக்கு அடிபணிந்தான் மன்              மதன்.

    நந்தி தேவரிடம் அனுமதி பெற்று உள்ளே சென்ற மன்மதன், யோக நிலையில் இருந்த சிவனின் மீது காம பாணத்தை தொடுத்தான். அந்த அம்பு அவரை தொடும் முன்பாகவே, அனைத்தும் அறிந்த ஈசன் தன் நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். தேவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிப் போய்விட்டனர்.

    அவர்கள், ஈசனின் முன்போய் அவரை துதித்து பாடத்தொடங்கினர். சாந்த நிலைக்கு வந்த ஈசன், இமயமலை சென்று பார்வதியை மணம் முடித்து கயிலாயம் திரும்பினார்.

    அப்போது தேவர்கள் அனைவரும், ‘சர்வேஸ்வரா! இவ்வுலகில் தங்களுக்கு சமமானவர் எவரும் இல்லை. ஆயினும், சூரபத்ம அசுரர்களை அழிக்கும் வகையில், உங்களுக்கு நிகரான மைந்தனை தாங்கள் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினர்.

    தேவர்களுக்கு மேலும் துன்பம் அளிக்க விரும்பாத சிவபெருமான், தனது பழமையான ஆறு திருமுகங்    களையும் கொண்டார். ஈசானம், தத் புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், அதோமுகம் என்னும் அந்த ஆறு முகத்தில் இருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. சூரியனைக் காட்டிலும் பன்மடங்கு ஒளி பொருந்திய அந்த தீப்பொறிகள் வெளிக் கொணர்ந்த சத்தமும், வெப்பமும் அம்பிகை, தேவர்கள் அனைவரையும் நடுநடுங்கச் செய்தன.

    பின்னர், அந்த ஆறு தீப்பொறிகளையும் கங்கையில் விடும்படி அக்னி மற்றும் வாயு தேவர்களுக்கு சிவபெரு மான் உத்தரவிட்டார். அவர்கள் அதனை கங்கையில் சேர்த்தனர். கங்கை அந்த ஆறு தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்ப்பித்தது. அங்கு ஆறு தீப்பொறிகளும் ஆறு அழகிய திருவுருவம் கொண்ட குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை ஆறு தாமரை மலர்கள் தாங்கின. (ஆறுமுகப் பெருமான் அவதரித்த இந்நாள் வைகாசி விசாகம் ஆகும்)

    விண்ணை முட்டும் அளவுக்கு முழக்கம். ‘வானவர்களுக்கும், வையகத்தில் அனைவருக்கும் வாழ்வளிக்க வந்து விட்டான் ஆறுமுகப் பெருமான்‘ என்று எங்கும் ஒரே முழக்கம். சிவ பெருமான், அம்பிகையுடன் சரவணப் பொய்கைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அம்பிகை ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக்கி தன் கையில் அள்ளி, ஞானப்பால் பருகக் கொடுத்தார்.

    அன்னையின் கையில் தவழ்ந்து, ஞானப்பால் குடித்து தாகம் தணிந்ததும் ஆறுமுகக் கடவுள் சிரித்த அழகு வர்ணிப்புக்குள் அடங்காதது. தேவர்களுக்கு அந்த அழகு சிரிப்பில், சூரபத்மனின் அழிவு கண்கூடாக தெரிந்தது.
    Next Story
    ×