search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில் - திருவாரூர்
    X

    திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில் - திருவாரூர்

    சோழநாட்டு திருத்தலங்களில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில் முக்கியமானது. இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.
    10-4-2017 அன்று கோவில் கும்பாபிஷேகம்

    சோழநாட்டு திருத்தலங்களில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில் முக்கியமானது. இக்கோவில் ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகார தலமாகும். ஆதிசேஷன் தனது தோஷம் நீங்க வழிபட்டதால் இத்தலம் பாம்பு+புரம்= திருப்பாம்புரம் என்றானது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்றது.

    இத்தல இறைவன் சன்னிதி, மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகிய மூன்று பகுதிகளை கொண்டது. மகா மண்டபத்தில் தென்புறம் சோமாஸ்கந்தருக்கு தனி இடம் உள்ளது. இம் மண்டபத்தில் நடராஜரும் நடனம் புரிகிறார். இங்குள்ள முருகன், வள்ளி- தெய்வானையுடன் கையில் வேல் தாங்கி இடது காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார்.

    கருவறையில் பாம்புரேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஆதிசேஷன் (உற்சவர்) ஈசனை தொழுத வண்ணம் கருவறையில் எழுந்தருளியுள்ளார். கருவறையை சுற்றிலும் அகழி உள்ளது. இறைவன் சன்னிதிக்கு இடதுபுறமாக அம்மன் ‘வண்டுசேர் குழலி’யின் சன்னிதி அமைந்துள்ளது. அம்மை ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் ருத்திராட்ச மாலையும் கொண்டு வரத ஹஸ்தம், அபய ஹஸ்தம் விளங்க தோற்றம் அளிக்கிறார்.

    ராகுவும், கேதுவும் ஈசனை நெஞ்சில் நிறுத்தி ஏக சரீரமாகி அருள் பெற்றதாக புராண வரலாறு. ராகுவும், கேதுவும் கோவிலில் ஈசானிய மூலையில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். சிவனுக்கும், அம்பாளுக்கும் ராகு காலத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வணங்குபவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக ஐதீகம். மேலும் நினைத்த காரியம் நிறைவேறும்.

    தல வரலாறு :

    முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. வாயு பகவான் மலைகளை எல்லாம் தம் வலிமையால் புரட்டி வீசினார். ஆதிசேஷன் அதை தனது வலிமையால் காத்து நின்றார். இருவரும் சமபலம் காட்டி நின்றனர். திடீரென்று வாயு பகவான் உயிர் களுக்கு வழங்கும் பிராண வாயுவை நிறுத்தி விட உயிர்கள் அனைத்தும் சோர்ந்தன. இந்திரன் மற்றும் தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கி நின்றார். வாயு பகவான் வெற்றிக் களிப்புடன் மலைகளை புரட்டி வீசினார்.

    இதனால் கோபமுற்ற சிவபெருமான், வாயு பகவானையும், ஆதிசேஷனையும் பேயுருவாக போகும் படி சபித்தார். இருவரும் தங்கள் குற்றங்களை பொறுத்தருளும்படி வேண்டி நின்றனர். வாயு பகவானை வைகை நதிக்கு வடக்கிலும், மதுரைக்கு கிழக்கிலும் பூஜை செய்து வரவும், ஆதிசேஷனை திருப்பாம்புரத்தில் 12 ஆண்டுகள் தம்மை பூஜை செய்து வரவ உத்தரவிட்டார். அதன்படி ஆதிசேஷன் திருப்பாம்புரம் வந்து தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.

    கயிலாயத்தில் ஒரு முறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகர் தன்னை வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது. இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த சிவன், நாக இனம் முழுவதும் தேவசக்தியை இழக்கும் படி செய்தார். அதனால் உலகைத்தாங்கும் ஆதி சேஷனும், ராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தியை இழந்து துன்பப்பட்டன.



    நாக இனங்கள் சாப விமோசனம் வேண்டி ஈசனை துதிக்க இறைவனும் மனம் இரங்கி பூவுலகில் சேஷபுரி என்ற திருப்பாம்புரத்தில் சிவராத்திரி அன்று தன்னை வழிபட்டால் சாப விமோசனம் அடையலாம் என அருளினார். அதன்படி ராகு, கேது மற்றும் ஆதிசேஷன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்க பாலன், குளிகன் பத்மன், மகா பத்மன் ஆகிய அஷ்டமாநாகங்கள் திருப்பாம்புரம் வந்தன. அங்கு ஆல மர விழுதை நாராக கொண்டு அத்திப்பூவை அதில் தொடுத்து பூஜை செய்து வந்தன.

    மகா சிவராத்திரி அன்று ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திரு நாகேஸ்வரம் நாகேஸ்வரரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றன.

    பரிகார முறை :

    ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து கொள்ள விரும்புபவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் கோவிலுக்கு வந்து ஆதிசேஷன் தீர்த்தத்தில் நீராடி, விளக்கு ஏற்ற வேண்டும். சுவாமி, அம்பாளுக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

    ராகு, கேது சன்னிதியில் அமர்ந்து பூவும், குங்குமமும் வைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் மஞ்சள் துணியில் வைத்து எடுத்து வந்து அதை கோவில் உண்டியலில் போட வேண்டும்.

    தினமும் கோவிலில் 4 கால பூஜை நடைபெறும். புதன்கிழமை காலை 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், வியாழக்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் பூஜை நடைபெறும். மாசிமகம், ராகு, கேது பெயர்ச்சி, மகா சிவராத்திரி போன்ற விழாக்கள் நடைபெறும்.

    அமைவிடம் :

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அமைந்துள்ள திருப்பாம்புரத்துக்கு சென்னையில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வரை ரெயிலில் வந்து அங்கிருந்து பஸ், காரில் கோவிலுக்கு வரலாம். திருவாரூர் செல்லும் வழியில் கொல்லுமாங்குடி சாலையில் திருநாகேஸ்வரம், திரு நீலக்குடி வழியாக பயணித்தால் திருப்பாம்புரத்தை அடையலாம்.
    Next Story
    ×