search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள செஞ்சேரி மலை
    X

    முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள செஞ்சேரி மலை

    கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில்... மேற்கே பதினெட்டு கி.மீ. தூரத்தில் செஞ்சேரி மலை அமைந்துள்ளது.
    முருகக்கடவுளை நினைத்து... மனமுருகப் பிரார்த்திக்கும்போது... உதடுகள் உச்சரிக்கிற எளிய சொற்களுக்கு கூட மந்திரசக்தி உண்டாகி விடும்! அதற்கு முழு முதற் காரணமாக இருப்பது அந்த இறைவனின் திருநாமத்தில் நிறைந்திருக்கிற மகிமையும், அருளுமேயாகும்! தனது பெயரையே மந்திரசால மூர்த்தியாக கொண்டு முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள செஞ்சேரி மலைக்கு நாம் சென்று வரலாமா...!

    கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில்... மேற்கே பதினெட்டு கி.மீ. தூரத்தில் செஞ்சேரி மலை அமைந்துள்ளது. சூலூரில் இருந்து சுல்தான்பேட்டை வழியாகவும் இந்த மலைக்கு செல்ல பாதை வசதி உண்டு.

    ‘தென்சேரி கிரி’ என்று பழம்பெயர் கொண்ட இத்திருத்தலமானது முருகக்கடவுள் அருள் புரியும் தலங்களில் முக்கியமானது. ‘மந்திரகிரி’ எனவும் இம்மலைக்கு சிறப்பு பெயர் குறிக்கப்படுகிறது. இங்கு கோயில் கொண்டிருக்கிற ஆறுமுகப்பெருமான் ‘மந்திராசல வேலாயுதமூர்த்தி’யாக விளங்குகிறார். தன்னை நினைப்பவரை காப்பாற்றும் மலை (மந்+திர+கிரி=மந்திரகிரி) என்றும் மூலவரான இறைவனுக்கு மந்திராசல மூர்த்தி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.

    அடிவாரத்தில் மலைப்பாளையம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து நூற்று ஐம்பது அடி உயரத்தில்தான் கோயில் அமைந்துள்ளது என்பதால் மிக எளிதில் சென்று விடலாம்.

    அடிவாரத்திற்கு சற்று மேலே... சந்தன வினாயகர் காட்சி தருகிறார். தனது தோற்றத்தினாலேயே உள்ளங்களில் குளிர்ச்சியை உண்டுபண்ணக்கூடிய இவர், சந்தனக் குளுமையாய்... இங்கே மணம் நிறைய வீற்றிருக்கிறார். அதிலிருந்து இன்னும் கொஞ்சம் சென்றதும்... இடும்பனைத் தரிசிக்கிறோம்.

    உச்சியில் கிழக்கு நோக்கி மந்திரகிரி வேலாயுத சுவாமியின் திருக்கோயில் துலங்குகிறது. கோவிலின் உள்ளே மூலவர் அழகுத் திருக்கோலமாய் விளங்ககிறார். ஆறுமுகத்துடன் வள்ளி தெய்வானை சமேதராய்க் காட்சி அளிக்கும்... அந்த அருட்பிரவாகத்தை மனமார வழிபடுகிறோம். இங்கேயுள்ள தனிச்சிறப்பு இவரின் ஆறுமுகங்களையும் ஒருசேர நாம் காணமுடிகின்ற ஒன்றாகும். மேலும் மயில் வாகனமானது இடதுபக்கம் தலையை வைத்திருக்கிற காட்சியையும் பார்க்க முடிகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள முருகப் பெருமான் திருத்தலங்களில் சிலவற்றில் மட்டுமே இந்த தனித்துவத்தை நாம் காண இயலும்! விண்ணில் மேகங்கள் குவிந்தால்... விரிந்தாடுகிற தோகையென எண்ணமெல்லாம்... இந்த இறைஇவனின் திருமேனியில் குவிந்து விடுகிறது...! உள்ளமோ -  வண்ண மயிலாக எழுந்து ஆடுகிறது.
    இடது பக்கத்து கரத்தில் சேவற்கொடிக்கு பதிலாக, சேவலையே கொண்டுள்ளவர் இந்த செஞ்சேரி மலை இறைவன், அருணகிரிநாதரின் பக்தியுள்ளம் இந்த எழிற்கோலத்தை கண்டு பரவசமடைந்திருக்கிறது.

    அருணகிரியார் தனது பயணத்தின்பாது இங்கு வழிபாட்டை முடித்த பின்னர் மேற்குத்திசையிலுள்ள பொன்மலைக்கு சென்றிருக்கிறார் என்றும் அறியப்படுகிறது.

    கர்ப்பக்கிரக முன்வாசல் மண்டபத்தின் இருபுறமும் கல்வெட்டுக்கள் சில உள்ளன. தலவிரு)ட்சமாக ‘கருநொச்சி’ உள்ளது. கர்ப்பக் கிரகத்தின் வெளியே உள்ள அர்த்த மண்டபத்தில் கிழக்கு நோக்கி வலதுபுறத்தில் வினாயகரும், பிரகநாயகியம்மையும், இடது புறத்தில்... கைலாயநாதரும் காட்சி அளிக்கின்றனர்.



    சுற்று வட்டாரத்து மக்கள் தங்களின் எதிர்காலப் பலன்கள் குறித்தும், துவங்கவிருக்கும் காரியங்கள் செவ்வனே நிறைவேற வேண்டும் என்பது குறித்தும் இந்த செவ்வேள் கந்தனின் கோயிலில் ‘பூக்கேட்டல்’ என்னும்ட வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

    ஆறுமுகப் பெருமானின் திருக்கரங்களில் வலக்கையில் ஒன்றும், இடக்கையில் ஒன்றும் என பூக்களை வைக்கின்றனர். ஐந்து நிமிடங்களுக்குள் வலக்கையில் இருந்து பூ விழுமாயின், எண்ணி வந்த காரியம் ஜெயமாகும் எனவும்... இடக்கையில் இருந்து பூவிழுமாயின் அந்த காரியத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் நேரம் கடந்தும் பூ விழவில்லை என்றால் காலதாமதமாகும் எனவும் அர்த்தங்கள் இதற்கு இருக்கின்றன.

    திருக்கோவிலின் வடபக்கத்தில் ‘சயிலோதகம்’ எனப்படும் ஞானதீர்த்தம், சுனை வடிவத்தில் காணப்படுகிறது. எந்த சூழலிலும் இந்த சுனை வற்றாமலிருப்பது சிறப்புக்குரியது. அபிஷேகத்திற்கும், பூஜைக்கும் இந்த நீரையே பயன்படுத்துகின்றனர்.

    தினமும் நான்கு காலப் பூஜைகளும், வைகாசி விசாகம், ஐப்பசி கந்தர்சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற சமயங்களில் சிறப்பு பூஜைகளும், விழாக்களுமாக இங்கு நிகழ்கின்றன. தையில் நடக்ஙகும் பிரம்மோற்சவமும், தேர்த் திருவிழாவும் மிகுதியான பக்தர்களை இங்கு வரவழைக்கின்றன. செஞ்சேரி மலைக்கு மேற்கே ஒரு கி.மீ. தூரத்தில் விண்டுமலை உள்ளது. இதனை சக்தியின் வடிவமாகக்கருதி ‘சக்திகிரி’ என்று அழைக்கின்றனர். திருமால் நினற திருக்கோளத்தில் இங்கு விளங்குகிறார்.

    தேவர்களைக் காப்பதற்காக, சூரபத்மனையும், அவனைத் தலைவனாகக் கொண்டிருக்கும் அசுரர்களையும் அழிக்க வேண்டிய சூழல் உருவானது. இதற்காகவே முருகக்கடவுள் தோன்றினார் என்பது பரவலாக அறியப்பட்டிருக்கும் வரலாறு. இந்த முருகனுக்குத் துணையாக பரமசிவன்... வீரபாகுவை அனுப்பினார். பார்வதியோ சக்திவேலினைத் தந்தார்.

    ஒரு கைக்கு சக்திவேலும், மீதமுள்ள பதினோரு கைகளுக்குப் பதினோரு ஆயுதங்களும் முருகப் பெருமானுக்கு தன் தாயாரால் இவ்விதம் வழங்கப்பட்ட பிறகு சூரபத்மனின் மாயச் சக்திகளில் இருந்து மீண்டு வர மந்திர உபதேசமும் செய்து வைக்கப்பட்டது. பார்வதிதேவியின் வேண்டுகோளுக்கேற்ப, பரமசிவனார்... முருகப் பெருமானை நோக்கி ‘‘நீ போகிற வழியில் பேரருளால்... மலையின் வடிவமாக யாம் உள்ளோம். உன் தாயின் வடிவமாக சக்திகிரி அங்கே தென்படும்.

    அந்தக் கிரியில் சென்று ஒரு தினம் சிவந்தனையோடு தவம் செய்வாயா! அங்கே வந்து மந்திர உபதேசத்தை உனக்குப் செய்தருளுகிறோம்’’ எனக் கூறினார்.
    அதன்படியே தவத்தை மேற்கொண்ட முருகனின் திருச்செவிகளில் மூந்திரத்தை உரைத்து சூரபத்மனை வென்றுவர தந்தையார் கட்டளையிட்டார். அப்படி அவர் கட்டளையிட்டது இந்த மலையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பொருட்டே இந்த மலை ‘மந்திராசலம்’ எனப் பெயர் பெற்றது.

    இந்த மலையின் குகையன்றில் யோக நிலையில் போகர் சிலகாலம் இருந்தார். அகத்தியர், வாமதேவர் முதலானோர் ஆசிரமம் அமைத்து அடிவாரத்தில் தங்கியிருந்தனர். பிரம்மன் தனது பாவம் நீங்க இங்கே நோன்பு மேற்கொண்டிருந்தான். போர் முடிந்து சூரனை வெற்றி கொண்ட நிலையில் திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை மணம் முடித்துக் கொண்டு திரும்பி வரும்பொழுது முருகப் பெருமான் இங்கே தங்கினார் என்பவனை எல்லாம் தலபுராணத்திலிருந்து நமக்கு அறியக் கிடைக்கின்றன.
    Next Story
    ×