search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தங்கக்கோவில் வளாகத்தில் சீனிவாச பெருமாள் கோவில்
    X

    தங்கக்கோவில் வளாகத்தில் சீனிவாச பெருமாள் கோவில்

    தங்கக்கோவில் வளாகத்தில் ரூ.10 கோடியில் கலைநயத்துடன் சீனிவாச பெருமாள் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வரலாற்றை பார்க்கலாம்.
    வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் தங்கக்கோவில் இந்தியாவின் அனைத்துப்பகுதி பக்தர்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவருகிறார்கள். தற்போது தங்கக்கோவில் வளாகத்தில் ரூ.10 கோடியில் கலைநயத்துடன் சீனிவாச பெருமாள் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீ என்றால் மகாலட்சுமி, புரம் என்றால் வாழும் இடம் மகாலட்சுமி வாழும் இடம் தான் ஸ்ரீபுரமாகும். இங்கு தினமும் இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து அன்னையை தரிசனம் செய்கின்றனர். ஸ்ரீபுரத்திற்கு மேலும், சிறப்பு சேர்க்கும் வகையில் மகாலட்சுமியின் மணாளனும், உலகத்தை காக்கும் கடவுளான மகாவிஷ்ணு என்று போற்றப்படும் சீனிவாசபெருமாளுக்கு தனி கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதன் மூலம் மகாலட்சுமி அன்னையுடன் சீனிவாசபெருமாளின் அருளையும் பக்தர்கள் பெற்று வாழ வேண்டும் என்ற நோக்குடன் 108 அடி நீளத்தில் 45 அடி அகலத்தில் அழகான, நூதனமான, பிரம்மாண்டமான, நுட்பமான கலை நயத்துடன் கோவில் கட்டப்பட்டது. இங்கு மூலஸ்தானம், அர்த்தமண்டபம், கர்ப்பகிரகத்து மகாமண்டபத்துடன் ஆனந்த விமானம், கஜப்ருஷ்டவிமானம், சுந்தர விமானம் மற்றும் மகா மண்டபத்துடன் மூலஸ்தானத்தில் 9 அடி உயரத்தில் ‘கிருஷ்ண சிலா’ என்ற கருப்பு கல்லில் சீனிவாச பெருமாளின் சிலை வடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபுரத்தில் அருள்புரியும் சீனிவாசபெருமாளுக்கு ஸ்ரீபுரசீனிவாசர் என்ற திருநாமம் சூட்டப்பட்டுள்ளது.

    கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சீனிவாசபெருமாள் சிலையானது 4 கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 2 கரங்களில் சங்கு, சக்கரமும், மற்ற இரு கரங்களில் அபயம் (காத்தல்), வரதம் (வரம் அளித்தல்) முத்திரைகளில் நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு அதிசயமாக, உலகில் இது வரையில் எந்த பெருமாளுக்கும் இல்லாத வகையில் அபயம், வரதம் ஆகிய இரு கரங்களில் மகாலட்சுமி தேவியின் யந்திரம் ரேகையாக சீனிவாச பெருமாளின் விக்ரகத்தில் வடிக்கப்பட்டுள்ளது. சீனிவாச பெருமாளுடன் உற்சவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீபுரம் ஸ்ரீமகாலட்சுமி மற்றும் ஜெயவிஜய, கருடாழ்வார் போன்ற விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தவறாமல் சீனிவாச பெருமாள் கோவிலுக்கும் சென்று பெருமாளையும் தரிசனம் செய்துவிட்டு செல்வதுடன் ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் திருவருளும் பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×