search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கர்ம வினை தீர்க்கும் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில்
    X

    கர்ம வினை தீர்க்கும் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில்

    இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இதன் வரலாற்றை கீழே விரிவாக பார்க்கலாம்.
    இறைவனின் திருவிளையாடல்கள் ஏராளம். தன் பக்தர்களைக் காக்க அவர் எடுத்த உருவங்களும் எண்ணில் அடங்காதவை. சிவபெருமானும், பார்வதியும் மான் உருவெடுத்து தாயின்றி தவித்த மான் குட்டிகளுக்கு பாலூட்டிய வரலாறும் ஒரு திருவிளையாடல்தான்.

    இந்த திருவிளையாடல் அரங்கேறிய தலம் திருமாந்துறை. தற்போது மாந்துறை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆலயம் ஆம்பரவனேஸ்வரர் திருக்கோவில். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆம்பரவனேஸ்வரர். இவருக்கு ஆதிரத்னேஸ்வரர், சுந்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் போன்ற பெயர்களும் உள்ளன. இறைவியின் பெயர் வாலாம்பிகை. அன்னையின் மற்றொரு திருநாமம் அழகம்மை என்பதாகும்.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. எதிரே நந்தி மண்டபம் உள்ளது. கோபுரத்தைக் கடந்ததும் அழகிய நீண்ட பிரகாரம். ஆலயம் ஒரு திருச்சுற்றுடன் விளங்குகிறது. திருச்சுற்றின் தெற்கில் தல விருட்சமான மாமரம் உள்ளது. ஆம்ரம் என்றால் மாமரம் என்று பொருள். இந்த தலம் மாமரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் இத்தலத்து இறைவன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

    ஆலய திருச்சுற்றின் தென் மேற்கில் விநாயகர் சன்னிதி, மயில் வாகனத்தில் சாய்ந்தபடி வள்ளி- தெய்வானை சமேத முருகன் சன்னிதி, கஜலட்சுமியின் சன்னிதிகள் உள்ளன. திருச்சுற்றின் வடக்கில் சண்டிகேசுவரர் சன்னிதி இருக் கிறது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இங்கு நடுநாயகமாக சூரியன் தன் இரு தேவிகளுடன் மேற்கு நோக்கி இருக்க, மற்ற அனைத்து கிரகங்களும் அவரை பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான தோற்றமாகும்.

    ஆலயத்திற்குள் நுழைந்ததும் விசாலமான மகா மண்டபமும், வலதுபுறம் அன்னை வாலாம்பிகையின் சன்னிதியும் உள்ளது. அன்னை நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள். மகா மண்டபத்தின் கிழக்கு திசையில் நால்வர் திருமேனிகள் உள்ளது. மகாமண்டபத்தை அடுத்துள்ள இறைவன் கருவறையின் முன்பாக நந்தியும், இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டபாணியும் அருள்பாலிக்கிறார்கள்.

    கருவறை நுழைவு வாசலில் சுதை வடிவில் துவாரபாலகர்களின் திருமேனி காணப்படுகிறது. அர்த்த மண்டபத்தின் வலதுபுறம் விநாயகர், சந்திரசேகரர், ஆம்பரவனேஸ்வரர், வாலாம்பிகை, நடராஜர், சிவகாமி, மாணிக்க வாசகர், பிரதோஷ நாயகர் ஆகியோரின் உற்சவ திருமேனியில் கிழக்கு திசைநோக்கி அருள் பாலிக்கின்றனர். இறைவனின் தேவக்கோட்டத்தின் தென்புறம் ஆதிசங்கரர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தியும், மேல் திசையில் மகாவிஷ்ணுவும் வடக்கில் பிரம்மா, துர்க்கையும் வீற்றிருக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் பெரிய வில்வ மரம் உள்ளது.

    தல வரலாறு :

    அடர்ந்த காடாக இருந்த இந்தப் பகுதியில், ஏராளமான மிருகங்கள் வசித்தன. அதில் ஆணும், பெண்ணுமான இரண்டு மான்கள் தங்கள் இரு குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு வேட்டையாட வந்த வேடன் ஒருவன், ஆண் மானையும், பெண் மானையும் அம்பெய்து கொன்றான். பின்னர் அவற்றைத் தூக்கிக்கொண்டு இல்லம் திரும்பினான். ஆனால் தாய், தந்தையரைக் காணாத குட்டிகள் தவித்துப்போயின. உணவு கிடைக்காமல் பசியால் வாடின.

    இதைக்கண்ட மிருகண்டு முனிவரின் சீடர்கள், மனம் வெதும்பி இந்தச் சம்பவம் பற்றி முனிவரிடம் கூறினர். மிருகண்டு முனிவர், சிவபெருமானையும், பார்வதிதேவியையும் பிரார்த்தனை செய்தார். அவரது குரலைக் கேட்டும், கேட்காததுபோல் இருந்தார் சிவபெருமான். அவரைப் பார்த்த பார்வதிதேவி, ஈசனை நோக்கி, ‘சுவாமி! நாம் வசிக்கும் இந்த வனத்தில் தாய்- தந்தையரை இழந்து இரண்டு மான் குட்டிகள் துன்பப்படுகின்றன. தாங்கள் அவைகளை காப்பாற்ற வேண்டும்’ என்றாள்.

    ‘தேவி! உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் அவர்களின் கர்ம பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். இந்த மான் குட்டிகளும், அதன் தாய், தந்தையரும் முற்பிறவியில் மானிடராய் பிறந்தவர்கள். தங்கள் வீட்டு கன்றுகுட்டியை அவிழ்த்து விட்டு விட்டு, அது பால் குடிக்கும் முன்பாகவே, பசுவின் மடியில் இருந்து பால் முழுவதையும் கறந்துவிடுவார்கள். பசுவிற்கும் சரியான உணவு கொடுப்பதில்லை. மாடு மேய்க்கும் இடையனுக்கும் கூலி கொடுப்பதில்லை. அந்தப் பாவங்களால்தான் இவர்கள் இங்கு மான்களாக பிறந்துள்ளனர். வேடனாக வந்து மான்களை வேட்டையாடியவன், முற்பிறவியில் இவர்களிடம் இடையனாக இருந்தவன். தன்னுடைய கூலியின் நிமித்தம், இரு மான்களையும் வேட்டையாடிச் சென்று உணவாக்கிக் கொண்டான்’ என்றார் இறைவன்.

    பார்வதிதேவிக்கு இன்னொரு சந்தேகம் எழுந்தது. ‘சரி.. சுவாமி! இடையன் ஏன் வேடனாகப் பிறந்தான்?’ என்று கேட்டாள்.

    இடையன், பசுக்களை மேய்க்கும் போது அவைகளை அடித்து துன்புறுத்தினான். அந்தப் பாவத்தால் வேடனாகப் பிறந்தான்’ என்றார் இறைவன்.

    ‘ஆனால் இந்த புனித வனத்தில் பிறப்பவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டுமே?. இவர்கள் பாவம் அல்லவா செய்திருக்கிறார்கள்?’ என்றாள் தேவி.

    இறைவன் பதிலளித்தார். ‘உண்மைதான். எனது சிறந்த பக்தரான உக்ரதபஸ், ஒருமுறை யாத்திரையாக இங்கு வந்து தங்கினார். என்னை பூஜிக்க அவருக்கு மலர்கள் கிடைக்கவில்லை. உடனே போன பிறவியில் சிறுவர்களாக இருந்த இந்த மான் குட்டிகளிடம், பூஜைக்கு மலர் வேண்டும் என்று கேட்டார். அந்த இரண்டு சிறுவர்களும் தூய்மையானவர்களாக மாறி, தொலைவில் இருந்த தோட்டத்தில் இருந்து மலர்களை பறித்து, அதை தாமரை இலையில் வைத்து உக்ரதபஸிடம் கொடுத்தனர். அவருக்கு ஏற்பட்ட மகிழ்வுக்கு அளவே இல்லை. அந்த மலர்களால் என்னை பூஜித்து மகிழ்ந்தார். என்னை பூஜித்த எனது பக்தனுக்கு மலர் கொடுத்ததால், இந்த சிறுவர்களின் பாவங்கள் கரைந்து போய், இந்த புண்ணிய வனத்தில் மான் குட்டி களாய் பிறந்தனர்’ என்றார்.

    ‘பிள்ளைகளைப் பற்றிச் சொன்னீர்கள். அவர்களின் தாய் தந்தையர் பாவிகள் தானே. அவர்கள் எப்படி இந்த புண்ணிய வனத்தில் பிறக்க அருள்புரிந்தீர்கள்?’ என்று பார்வதி தனது சந்தேகத்தைக் கேட்டாள்.

    ‘பிள்ளைகள் செய்யும் புண்ணியம், அவர்களைப் பெற்ற வர்களுக்கும் நற்பயனைத் தரும். அவர்களது பிள்ளைகள் செய்த புண்ணியத்தால் அவர்களது தாய், தந்தையரும் இங்கு பிறந்தனர்’ என்றார் இறைவன்.

    சிவபெருமானின் விளக்கத்தால் பார்வதி தேவி தெளிவு பெற்றார். பின்னர் இருவரும் மான் உருவம் கொண்டு, மான் குட்டிகளிடம் சென்றனர். பார்வதிதேவி, குட்டிகளுக்கு பால்கொடுத்து அதனைக் காத்தார் என்பது இந்த ஆலயத்தின் தல வரலாறு.

    ஆலயம் காலை 6 மணி முதல் 11½ மணி வரையிலும், மாலை 4½ மணி முதல் இரவு 7½ மணி வரையிலும் திறந்திருக்கும். தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில், ஐப்பசி பவுர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். மாதப் பிரதோஷங்களும் இங்கு வெகு சிறப்பாக நடைபெறுகிறது. "

    ஆராதனைகள் :

    சித்திரை முதல் நாள், நவராத்திரி, தீபாவளி, சோமவாரம், கார்த்திகை தீபம், மார்கழியின் 30 நாட்கள், தை மாதப் பிறப்பு, பொங்கல், மகாசிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பங்குனி மாதத்தில் முதல் மூன்று நாட்கள் கருவறை இறைவன் மேல் சூரிய ஒளி படுவது இங்குள்ள சிறப்பு அம்சமாகும்.

    அமைவிடம் :

    திருச்சி - லால்குடி சாலையில் திருச்சியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது மாந்துறை. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து லால்குடி செல்லும் நகரப் பேருந்துகளில் சென்றால், இந்தக் கோவிலின் அருகே இறங்கிக் கொள்ளலாம். ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் பேருந்துகளும் இந்த தலம் வழியாகவே செல்கின்றன.

    Next Story
    ×