search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பேராத்து செல்வியம்மன் கோவில் - திருநெல்வேலி
    X

    பேராத்து செல்வியம்மன் கோவில் - திருநெல்வேலி

    நெல்லை மாநகரில் தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் உள்ள வண்ணார்பேட்டையில், பாளையங்குட்டத்துறையில் அமைந்துள்ளது பேராத்து செல்வியம்மன் கோவில்.
    நெல்லை மாநகரில் தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் உள்ள வண்ணார்பேட்டையில், பாளையங்குட்டத்துறையில் அமைந்துள்ளது பேராத்து செல்வியம்மன் கோவில். மூலவரான பேராத்து செல்வியம்மன், கருவறையில் வடக்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    கோவிலின் முன் மண்டபத்தில் பரிவார தேவதைகள் உள்ளனர். பிற சன்னிதிகளில் சங்கிலி பூதத்தார், நல்ல மாடசாமி, பைரவர், கன்னிமூலை கணபதி, தளவாய் பேச்சி, வேதாளம் முதலிய தெய்வங்களும் வீற்றிருக்கின்றனர். இக்கோவிலில் தினமும் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு கால பூஜைகள் நடை பெறுகிறது.

    தல வரலாறு :

    பல நூறு வருடங்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றின் மத்தியில், பேராத்து செல்வி அம்மனின் திருவுருவம் பக்தர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது. அதை அவர் ஆற்றின் கரையிலேயே பிரதிஷ்டை செய்தார்.

    துற்கன் என்ற அரக்கனை அழிக்க வேண்டி, தேவர்கள் அனைவரும் சிவ பெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான், தனது அருகில் இருந்த பார்வதி தேவியை பார்த்து, ‘ஆடலாற் காளி வருதி’ என்றார். உடனே ஆதிநாயகியிடம் இருந்த காளி, பேராற்றல் கொண்டவளாக வெளிவந்தாள். இவ்வாறு வெளிவந்த இவள் செல்வி என பெயர் பெற்றாள். பின்னர் அந்த தேவி, அரக்கனுடன் போரிட்டு அவனை அழித்தாள். பின்னர் பேராற்றின் நிலையானாள் என தல புராணம் கூறுகிறது.

    பாண்டிய மன்னனின் பொறுப்பாளர் ஒருவர், தாமிரபரணியில் நீராட வந்தார். அப்போது ஆற்றின் வேகத்தில் அடித்து செல்லப்படாமல் எலுமிச்சைப்பழம் ஒன்று, ஒரே இடத்தில் மிதப்பதைக் கண்டார். அந்த எலுமிச்சை பழத்தை அவர் எடுக்க முயன்றபோது, எண்கரம் கொண்ட அம்மன் சிலை ஒன்று தட்டுப்பட்டது. அதனை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்து, பின் பாண்டிய மன்னரால் ஆற்றங்கரையில் இத்திருக்கோவில் எழுப்பப்பட்டது என்றொரு செவிவழிச் செய்தியும் உள்ளது. பேராற்றில் கண்டெடுக்கப்பட்டதால், இந்த அம்மன் ‘பேராற்று செல்வி’ என்று பெயர் பெற்றாள். பின்னர் இதுவே மருவி பேராத்து செல்வி என்றானது.

    ஆலன் என்ற ஆங்கிலேயருக்கு தொழு நோய் இருந்தது. அவர் இந்த ஆலயத்திற்கு வந்து அம்பாளை இடைவிடாது வழிபட்டதால், அவரது நோய் குணமானது. குட்ட நோய் தீர்த்த தலம் என்பதால், இந்த இடம் குட்டத்துறை என சிறப்பு பெயர் பெற்றது.

    திருவிழா :

    சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய் மற்றும் நான்காவது செவ்வாய்க்கிழமைகளில், இந்த ஆலய கொடை விழா நடக் கிறது. ஆடி மாதம் நடைபெறும் ‘முளைக்கட்டும் திருவிழா’ விமரிசையான ஒன்றாகும். விஜயதசமி அன்று ‘தசரா திருவிழா’வும் வெகு விமரிசையாக நடைபெறும். தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் ஆண்டு வருசாபிஷேக விழா சிறப்பாக நடைபெறு கிறது.

    தொழு நோய் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து அம்மனை மனதார வேண்டி சென்றால், அவர்களுக்கு ஏற்பட்ட நோய் நீங்கும் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள், இத்தலத்து அம்பாளை வழிபடுவதற்காக வந்து செல்கிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் அம்பாளுக்கு செவ்வரளி மாலையிட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு பயபக்தியுடன் வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை இல்லாத பெண்கள் இத்தலத்து அம்பாளை வழிபட்டால் அவர்களுக்கு அம்பாள், அருள்பாலித்து குழந்தைபேறு வழங்குவதாக ஐதீகம்.

    திருநெல்வேலி சந்திப்பில் இருந்து பாளையங்கோட்டை செல்லும் சாலையில், வண்ணார்பேட்டையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். திருநெல்வேலி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை செல்லும் டவுன் பஸ்களில் ஏறி வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறங்கி, சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் கோவிலை அடைந்து விடலாம். ஆட்டோ, கார் போன்ற வாகனங்களிலும் சென்று வரலாம்.
    Next Story
    ×