search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தை பேறு வழங்கும் திருவேங்கடநாத பெருமாள் கோவில்
    X

    குழந்தை பேறு வழங்கும் திருவேங்கடநாத பெருமாள் கோவில்

    வடதிருப்பதிக்கு நேர்ந்த நேர்த்திக்கடன்களை இத்தலத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால் இத்தலத்தில் நேர்ந்த நேர்த்திக்கடன்களை வட திருப்பதியில்(திருப்பதி) செலுத்த இயலாது என்பது இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
    திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் குன்னத்தூர் குன்றுக்கு தெற்கே அமைந்துள்ளது மேலத்திருவேங்கடநாதபுரம். தாமிரபரணி ஆற்றின் வடகரை ஓரமாக ஒரு சிறு குன்றின் மீது ஊரும், ஊருக்கு நடுவே மேடான இடத்தில் வெங்கடாசலபதி கோவிலும் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மகிமைகளை உடைய இக்கோவில் தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    ஊரின் முகப்பில் காணப்படும் குளத்தின் கரையோரம் யானை சரிவு பாதை ஒன்று செல்கிறது. சரிவு பாதை வழியாக மேலே ஏறிச்சென்றால் கோவிலுக்கு முன்பாக உள்ள கீழ ரத வீதியை அடையலாம். இங்குதான் கோவிலுக்கு செல்லும் படிகள் தொடங்குகின்றன. இங்குள்ள பன்னிரண்டு படிகளும் பன்னிரு ஆழ்வார்களாக கருதப்படுகின்றன. இந்த படிகளை கடந்து சென்றால், திருக்கோவிலின் பெரிய முற்றத்தினை அடையலாம். இங்கு நின்று பார்த்தால் கோவிலின் நுழைவு வாசலின் மீது அமைந்துள்ள சிறிய கோபுரம் தென்படுகிறது. ஆலயத்தில் படிப்படியாக அமைந்துள்ள ஏழு மேடுகளை ஏறி கடந்த பின்னர்தான், கருவறையில் இருக்கும் வேங்கடவனை(பெருமாளை) காண முடியும். இந்த ஏழு நிலைகளின் மேல் ஏழு மண்டபங்கள் அமைந்துள்ளன. நுழைவு வாசல் மண்டபம் கல்லால் ஆனது. நுழைவு வாசல் மண்டபத்தின் இரு பாதைகளுக்கும் நடுவே பலிபீடம் இருக்கிறது. இதையடுத்து கொடிமரம். இதன் பின்புறம் உள்ள கருவறையை நோக்கிய சிறிய மண்டபம், ‘கருட மண்டபம்’ என்று அழைக்கப்படுகிறது.

    மூன்றாவது மண்டபமாகிய மணி மண்டபத்தில் இரண்டு பெரிய மணிகள் தொங்குகின்றன. இந்த மண்டபத்தை ஏழு கல்தூண்கள் தாங்குகின்றன. இந்த தூண்களில் கற்பக விநாயகர், நவநீதகிருஷ்ணன், துவார பாலகர்கள், மகாவிஷ்ணு, நரசிம்மன், ராமர், சீதை, லட்சுமணன், நடராஜர், முருகன், மன்மதன் சிற்பங்கள் மற்றும் பல்வேறு முனிவர்களின் திருவுருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

    ஐந்தாவது மண்டபமாகிய ஆஸ்தான மண்டபத்தின் நடுவில் உள்ள மேடையில் உற்சவர் சீனிவாச பெருமாள், இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் விற்றிருக்கிறார். மேலும் உற்சவருக்கு அருகில் தனியாக வடவேங்கத்திலே(திருப்பதி) எழுந்தருளியுள்ள, அதே அலர்மேலுமங்கை பிராட்டி இங்கேயும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்கின்றனர். கருவறையில் எழுந்தருளியிருக்கின்ற மூலவருக்கு ‘திருவேங்கடநாதர்’ என்று பெயர். இவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

    தல வரலாறு :

    புராண காலத்தில் இந்த பகுதி பெருங்காடாக இருந்தது. மகாபாரதம் அருளிய வியாசரின் முதன்மை சீடரான பைலர் என்ற முனிவர், இந்த தாமிரபரணி ஆற்றின் கரை ஓரம் அமர்ந்து சீனிவாச பெருமாளை நினைத்து தவம் செய்தார். அப்போது அங்கு கோவிலோ, பெருமாள் சிலையோ, பூஜை செய்ய சிலைகளோ கிடையாது.

    பைலர், தனது மனதிற்குள்ளே பெருமாளை மனதாலே பூஜை மலர்களை போட்டு அர்ச்சனை செய்து வழிபட்டார். மனதிற்குள்ளே ஒரு கோடி மலர்களை போட்ட பின்னர், ஏழாவது நாள் அர்ச்சனை பூக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிகப்பிரகாசமான ஒளியாக வானத்தில் எழுந்தது. அந்த ஒளி தீபத்திற்குள் சீனிவாச பெருமாள் தோன்றினார். அவர் காலடியில் தாமிர பரணி நதி தெய்வத்தையும் பைலர் கண்டார்.

    பெருமாளின் அருள்வடிவத்தை கண்ட முனிவர், இருவரையும் வணங்கி இருவருக்கும் பூஜை செய்தார். பின்னர், ‘சீனிவாச பெருமாளே! உன் ஆனந்த வடிவத்தை காண நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். வடக்கே வேங்கடமலையான திருப்பதியில் குடிகொண்ட வெங்கடாசலபதி பெருமாளே, தாங்கள், தங்கள் புடை சூழ எப்போதும் இங்கு இருந்து அருட்செய்ய வேண்டும்’ என்று வேண்டினார்.

    சுமார் 650 ஆண்டுகளுக்கு முன், மதுரை திருமலை நாயக்கரின் ஆட்சியின் கீழ் சிற்றரசராக வெங்கடப்ப நாயக்கர் ஆண்டு வந்தார். அவர் குழந்தைபேறு இல்லாமல் பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்தார். அப்போது இங்கு வந்து தாமிரபரணி ஆற்றில் மூழ்கி எழுந்ததும் ஒரு அசரீரி ஒலி கேட்டது. ‘மன்னா! நீ ஆயிரம் குழந்தைகளுக்கு கோவிலில் வைத்து, அவர்கள் பசியை போக்கினால் உனக்கு குழந்தை பேறு கிடைக்கும்’ என்றது அந்தக் குரல்.

    மன்னனும் பெருமாளை வணங்கி எழுந்து ஒரு பெரிய உருளி பானையில் பொங்கலிட்டு பெருமாளுக்கு படைத்து ஆயிரம் குழந்தைகளின் பசியை போக்கினான். அவனுக்கு குழந்தை செல்வம் கிடைத்தது. தன் மகனுக்கு சீனிவாசன் என்று பெயர் வைத்தான். மன்னன் நீராடிய இடம், அசரீரி ஒலித்த இடம் “சீனிவாச தீர்த்த கட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. தனக்கு குழந்தைசெல்வம் கிடைத்த மகிழ்ச்சியில் மன்னன் இக்கோவிலை மிகப்பெரிதாக கட்டினான். கோவிலுக்கு வருகின்றவர்களின் பசியை போக்க நிலங்கள் பலவற்றை தானம் செய்து கோவிலுக்கு எழுதி வைத்தான். தன் பெயரால் வேங்கடநாதபுரம் என்ற ஊரை கோவிலை சுற்றி அமைத்தான்.

    இக்கோவிலில் சித்திரை பிரமோற்சவம், புரட்டாசி சனி, மார்கழி திருப்பள்ளி எழுச்சி, வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறும். இக்கோவிலுக்கு நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதியும், நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ் வசதியும் உண்டு.

    கோவில் தல விருட்சம் :

    இக்கோவில் மணி மண்டபத்திற்கெதிரே மதிற்சுவரின் உட்புறம் தென் கிழக்கு மூலையில் ஒரு நெல்லி மரம் உள்ளது. இதற்கு பூஜைகள் நடைபெறுகின்றன. சிலர் இதனை தலவிருட்சம் என்கின்றனர். வேறு சிலர், இத்திருத்தலம் முன்பு மூங்கில் காடாக(வேணுவனம்) இருந்ததால் நெல்லையப்பர் கோவிலைப்போன்று இங்கும் மூங்கில் மரமே தல விருட்சம் என்கிறார்கள்.

    மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரும் இந்த பெருமாள் மீது பெரும் பக்தி கொண்டு இருந்தார். இவரும், விசுவநாத நாயக்கரும், இந்த கோவிலுக்கு வந்து தாமிரபரணி ஆற்றில் உள்ள ஸ்ரீனிவாச தீர்த்த கட்டத்தில் நீராடி பெருமாளை வழிபட்டு சென்றதுடன் இக்கோவிலுக்கு பல மானிய உதவிகளையும், கட்டளைகளையும் செய்துள்ளனர்.

    வடவேங்கடமாகிய திருப்பதிக்கு செல்ல இயலாத பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து இங்குள்ள வெங்கடேச பெருமாளை தரிசித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வணங்கி செல்கிறார்கள். ஒவ்வொரு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து பெருமாளின் கருட சேவை காட்சியை கண்டு தரிசித்து செல்கிறார்கள்.

    வடதிருப்பதிக்கு நேர்ந்த நேர்த்திக்கடன்களை இத்தலத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால் இத்தலத்தில் நேர்ந்த நேர்த்திக்கடன்களை வட திருப்பதியில்(திருப்பதி) செலுத்த இயலாது என்பது இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

    கோவிலுக்கு வெளியே கொடிமரம் :

    பொதுவாக எல்லா கோவில்களிலும் கொடிமரமானது கோவிலுக்கு உள்ளேயே இருக்கும். ஆனால் இக்கோவிலில் கொடிமரம் கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது. இக்கொடிமரத்தில் ‘கம்பத்தடியான்’ என்ற தெய்வம் இருப்பதாக சொல்லப்படுகிறது. உயரமான கட்டிடங்களில பணி செய்வோர் இத்தெய்வத்தினை வழிபட்டால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேராது என்று அவர்கள் நம்புகின்றனர்.

    குழந்தை இல்லாத தம்பதியினர் திருவோண நட்சத்திரத்தன்று பாயசம் நிவேதனம் செய்து கம்பத்தடியானுக்கு படைத்து பின்பு அந்த நிவேதனத்தை கோவிலுக்கு வருபவர்கள், குழந்தைகளுக்கு கொடுத்து பாயசம் செய்த உருளியை கொடிமரம் அருகில் கவிழ்த்து வைத்தால் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்றும் பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது.
    Next Story
    ×