search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் - பரிக்கல்
    X

    அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் - பரிக்கல்

    பதவி உயர்வு, பதவி இழந்தவர்களும் இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் நிச்சயம் நிறைவேறும் என்று இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
    இத்தலத்துக்கான வரலாறு வருமாறு :

    தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து மூன்று புறங்களிலும் ஆண்டு வந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுமன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் இமையோர்களைத் துன்புறுத்தி வாழ்ந்து வந்தனர். மூன்று அசுரர்களையும் அவர்கள் முப்புரக் கோட்டைகளையும் சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கினார்.

    இத்திரிபுர தகனத்திற்கு திருமால் அம்பாக இருந்து உதவினார் என்கிறது திருவதிகைப்புராணம். இம்மூன்று அசுரர்களுக்கும் தளபதியாக இருந்த பரிகலாசூரன் மனித உடலும் குதிரை முகத்தையும் கொண்டவன். திரிபுர தகன நிகழ்ச்சியின் போது தப்பித்துச் சென்ற இவ்வசுரன் பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஓன்றான திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பகுதிக்குள் மறைந்து கொண்டான்.

    இப்பகுதியை திருமால் பக்தனான வசந்தராஜன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். பரிக்கல் பகுதியும் இம்மன்னனின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. நரசிம்ம மூர்த்தியின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த வசந்தராஜன் தன் படைகளின் ஓரு பிரிவினை நிறுத்தி வைத்திருந்த பரிக்கல் பகுதியில் நரசிம்மருக்கு திருக்கோயில் எழுப்புவதென்று முடிவு செய்து அதற்கான திருப்பணிகளை தொடங்கினான்.

    இத்தருணம் பார்த்து பரிகலாசூரன் தன் மாயப்படைகளுடன் வந்து பரிக்கல் பகுதியைத் தாக்கி அழிக்கிறான். மன்னனின் குதிரைப்படைகளும் கோயி லும் தாக்கி அழிக்கப்படு கின்றன. மன்னனின் பெற்றோர்கள் மரணமடைகின்றனர்.

    இதைப் பெரியதொரு அபசகுனமாகக் கருதிய மன்னன் அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைத்து சில காலங்கள் கழித்து மறுபடியும் நரசிம்மர் கோயிலுக்கான திருப்பணியை தொடங்கபோகும் சமயத்தில் தன்னுடைய ராஜகுருவான வாமதேவரிடம் உத்தரவும் அதற்குண்டான ஆலோசனைகளையும் கேட்டான்.

    முன்பு கோயில் எழுப்புவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடமும், கோயில் திருப்பணி தொடங்கிய நாளும், கோளும் சாத்திர முறையும் தவறானவை என்று எடுத்துரைத்த வாமதேவ முனிவர் வேறொரு இடத்தைத் தேர்வு செய்து, கோயில் எழுப்ப வேண்டிய சாத்திர நெறிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார்.

    மேலும் கோயில் திருப்பணி தொடங்குவதற்கு முன் மாபெரும் யாகம் ஓன்றை நடத்த வேண்டும் என அறிவுரை கூறி மூன்று நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். பரிகலாசூரனின் மாய வல்லமைகளை அறிந்த வாமதேவர் அவ்வசுரனால் யாகத்திற்கு இடையூறு ஏற்படாதிருக்கக் கங்கணம் ஓன்றைத் தயாரித்து அதை பூஜையில் வைத்து வசந்தராஜன் கையில் அணிவித்தார்.

    முனிவர்களுடன் அமர்ந்து வாமதேவர் யாகம் நடத்த தொடங்கும் முன்பு வசந்தராஜன் தனித்திருந்து யாகம் செய்ய வேண்டியிருந்ததால் அரசரின் பாதுகாப்புக் கருதி அராக்ஷ்ர அமிர்தராக்ஷ்ர என்ற மந்திரத்தை வசந்தராஜ னுக்கு போதித்து யாகம் நடைபெறும் இடத்திலிருந்து கூப்பிடும் தூரத்தே இருந்த புதருக்குள் மன்னனை அமர வைத்தார்.

    யாகத்தின்போது தனியாக இருந்து உச்சரிக்க வேண்டிய மந்திரங்களை இடையில் நிறுத்திவிடக்கூடாது என்பதற்காக ஓரே நினைவில் மனதை நிலை நிறுத்தி மந்திரத்தைக் கூறிக் கொண்டிருக்க அசம் பிரக்ஞம் என்ற ஞானநிலையை அரசனுக்கு போதித்தார்.யாகம் தொடங்கிய சில கணங்களில் தம் மாயப் படைகளுடன் அங்கு வந்த பரிகலாசூரன் வாமதேவரை நோக்கி தானே கடவுள் என்றும், என்னைத் துதித்து யாகம் செய்தால் மகிழ்ந்து இவ்விடம் விட்டு அகலுவேன் இல்லையேல் அனைத்தையும் அழிப்பேன் என்று பயமுறுத்தினான்.

    நரசிங்கப் பெருமானே முழு முதற்கடவுள் என்றும் அப்பெருமானின் திருவடி தொழுது நின்றால் உமக்கு சாபவிமோசனம் உண்டு என்றும், அப்படித் தவிர்த்து இந்த யாகத்திற்கு இடையூறு விளைவித்தால் உனக்கு அழிவு நிச்சயம் என்றும் வாமதேவ முனிவர் பதிலுரைக்க கடுங்கோபம் கொண்ட பரிகலாசூரன் முனிவர்களையெல்லாம் தாக்கி யாகத்தைச் சிதைக்க ஆரம்பித்தான்.

    இறுதியாக தனக்கு ஆபத்து வரும் காலங்களில் பிரயோகிப்பதற்காக வைத்திருந்த சக்திபெற்ற கோடரி ஓன்றினை வரவழைத்து, அக்கோடரியால் வசந்த ராஜனின் தலையைப் பிளக்கிறான். அவ்வாறு பிளந்த தலையிலிருந்து உக்கிரம் கலந்த கோபக்கனல் பறக்க ஸ்ரீ நரசிங்கப்பெருமான் தோன்றி எதிர்நின்ற பரிகலாசூரனின் உடலை இரண்டாகப் பிளந்து எறிந்தார்.

    நரசிம்மப் பெருமானின் திருவருளால் வசந்தராஜன் உயிர்ப்பித்தெழுந்தான். வசந்தராஜன் நரசிங்கப் பெருமானின் அகோர விசுவரூபத்தைத் தரிசித்து மகிழ்ந்தான். பக்தர்களின் குறையகற்றும் எம்பிரானானே இந்த அடியோனை திருவருள் கொண்டு ஆதரித்தீர். இது இந்த எளியேன் பெற்ற மிகப் பெரும் பாக்கியம்.

    என்னோடு யாகத்தில் ஈடுபட்ட என் குருநாதர் வாமதேவ மாமுனிவரையும், மற்ற முனிவர் பெருமக்களையும் உயிர்த் தெழச் செய்து அருள்புரிய வேண்டும். மேலாக அடியவர்களின் மனங்களைக் கலங்கச் செய்யும் இந்த கோப உக்கிரம் பொதிந்த திருவுருவத்தை மக்கள் துதிப்பதும், ஆராதிப்பதும் அரியதாகிவிடும் இன்முகம் காட்டும் சாந்த சொரூபராக என் அன்னை திருமகளோடு எழுந்தருள வேண்டுகிறேன் என்று வசந்தராஜன் விழுந்து வணங்க ஸ்ரீ சிங்கப்பிரான் சாந்த சொரூபராக மாற்றம் கொண்டு ஸ்ரீலட்சுமி நரசிம்மராகக் காட்சியளித்தார்.

    வாமதேவரும் மற்ற முனிவர் பெருமக்களும் உயிர் பெற்றெழுந்து அக்காட்சியைக் கண்டு தொழுதனர்.மேலும் பரிகலாசூரனின் வரவாலேயே எனக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தது. எனவே இந்தப் பரிகலாசூரனின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பெற்று விளங்க அருள்புரிய வேண்டும் என வசந்தராஜன் வேண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மமூர்த்தி அவ்வாறே அருள்புரிந்தார்.

    பரிகலாசூரனை வதைத்த இடம் இதுவாதலால் பரிகலபுரம் என வழங்கி வந்து இன்று பரிக்கல் என மருவியுள்ளது. இக்கோயில் உற்சவமூர்த்தி திருவுருவச் சிலையின் அடிப்பாகத்தில் பரிகல ஸ்ரீ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

    நரசிம்மரும் லட்சுமி தாயாருடன் இணைந்து சாந்த நரசிம்மராக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். சில காலம் இந்த விக்கிரகத்திற்கு சிறப்பான பூஜை செய்யப்பட்டது. காலப்போக்கில் இது சரிவர பராமரிக்கப்படாமல், புற்று மறைத்து விட்டது.

    இவ்வூருக்கு அருகில் அக்ரஹாரத்தில் வாழ்ந்த வாய் பேசமுடியாத ஒருவன் கனவில் தோன்றிய பெருமாள், நரசிம்மர் சிலை புற்றில் மறைந்திருப்பதாகவும், அதை மீண்டும் பிரதிஷ்டை செய்யும்படியும் கூறி மறைந்தார். இதை அவன் ஊர்மக்களிடம் தெரிவித்தான். அதன்படி ஊர்மக்களும் லட்சுமி நரசிம்மரை எடுத்து, புதிதாக கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்கள்.

    மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மரும், தனி சன்னதியில் கனகவல்லித் தாயாரும் அருள்பாலிக்கின்றனர். பெருமாள் கிழக்கு பார்த்து உட்கார்ந்துள்ளார். அவரது இடப்பக்கம் தாயார் மடியில் உட்கார்ந்துள்ளார். பிரகாரத்தின் வாயு மூலையில் வாயுமைந்தனான அனுமன், வீர ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் இவருக்கு முன்னால் நவதானியம் மற்றும் நெல்லை கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதி வழிபாடு செய்கின்றனர். இதனால் தங்கள் கோரிக்கைகள் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை.

    பிரகாரத்தில் வடக்கே வரதராஜப்பெருமாள், தென்கிழக்கே விநாயகர், கோயில் எதிரே கருடன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரி இங்கும் வரதராஜ பெருமாள் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். ஊரின் வடமேற்கில் சக்கர தீர்த்தம் உள்ளது. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்ட கோணம் எனப்படும்.

    பொதுவாக நரசிம்மர் கோயிலில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார். ஆனால் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி மூர்த்தி உண்டு.

    இதிலிருந்தே நரசிம்மரின் உக்கிரம் முழுதும் தணிந்து வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் கிடைக்கும் என்பது நிச்சயம். வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் ஒரு சேர உள்ளது இத்தலத்தின் முக்கிய சிறப்பாகும். தினம் எள் எண்ணெய் தீபம் ஏற்றி, நவதானியங்களை இவர்கள் முன் பரப்பி, தாங்கள் கோரும் பிரார்த்தனைகளைக் கையால் எழுதுகிறார்கள். இதனால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். நவகிரகங்களினால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.

    இது, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று எல்லா மதத்தினரும் மதவேறுபாடு இல்லாமல் வந்து வழிபடும் சிறப்பு வாய்ந்த தலம் இது.
    வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு திருவிழா நடத்தப்படுகிறது. பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு என்று இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

    கை கால் ஊனம், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கல்யாணத் தடை உள்ளவர்கள், வழக்கு வம்புகளில் சிக்கி இருப்பவர்கள், பில்லி சூன்யங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு நல்ல தீர்வு கிடைக்கப் பெறுவார்கள். எண்ணெய், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் இவற்றோடு கூடிய நித்ய அபிசேகங்கள் செய்யலாம். நரசிம்மருக்கு வஸ்திரம் சாத்தலாம். பக்தர்களின் நேர்த்திகடன்களாக மொட்டை போடுதல், காதுகுத்துதல், மாவிளக்கு ஏற்றுதல், அங்கபிரதட்சணம் ஆகியவை பெருமாளுக்கு இத்தலத்தில் செய்யப்படுகின்றன.

    ஆனால் கொடிமரம் பகுதியில் வைக்கப்படும் பொங்கல் போன்றவை ஆலயத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.

    நெல்லைப் பரப்பி விருப்பத்தை எழுதுங்கள் :

    இரண்டு ஆஞ்சநேயர் சுவாமிகள் இக்கோவிலின் உட்பிரகாரத்திலுள்ளனர். வடக்குப் பிரகாரத்தில் ஓரத்தில் பக்த ஆஞ்சநேயரும் மற்றும் வீர ஆஞ்சநேயரையும் சேவிக்கலாம். மூல மூர்த்தியை வணங்கிய பிறகு ஆஞ்சநேயரை வணங்க வேண்டும். அவர் முன்பு நெல் தானியத்தை ஒரு தட்டில் பரப்பி ஆஞ்சநேயர் முன்பு வைக்க வேண்டும். பக்தர்கள் நெல்லை பரப்பி தங்கள் விருப்பத்தை கட்டை விரலால் நெல்லில் எழுதி பகவானிடம் பிரார்த்திக்கின்றனர். இவ்வாறு தங்கள் விருப்பதை நிறைவேற்ற வேண்டுகின்றனர்.

    எவரெவர் இந்த பரிக்கல் நரசிம்மரை சுவாமியை வணங்க வேண்டும் என்ற விரும்புகிறார்களோ அவர்கள் நவதானி யங்களைப் பரப்பி அதில் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகின்றனர். பக்தர்களின் பலமான நம்பிக்கை என்னவென்றால் இக்கோவிலின் முக்கியமான இடத்தில் நரசிம்மரிடம் வேண்டினால், தங்கள் கோரிக்கைகள், தொல்லைகள் நீங்கப் பெற்று, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அமைதியும் நல்ல தேக ஆரோக்கியமும் கிட்டும் என்பதாகும்.

    மாசிமகத்தன்று பவுர்ணமி அன்று 10 கி.மீ. தொலை தூரத்தில் உள்ள கடிலம் நதிக்கு ஊர்வலமாகப் புறப்பாடு கண்டருளுகின்றார் ஸ்ரீநரசிம்மர். பங்குனி உத்திரத் தன்று ஸ்ரீநரசிம்மர் ஊர்வலமாக ஓரத்தூர் கிராமத்திற்கு எழுந்தருளுகின்றார். எல்லா மாதங்களிலும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமுஞ்சனம் நடைபெறும். மாலை வேளையில் திருக்கோவில் உட்பிரகாரத்தில் ஸ்ரீநரசிம்மர் புறப்பாடு கண்டருளுவார்.

    ஸ்ரீபரிக்கல் கோவிலுள்ள சுவர்களில் கல்வெட்டுக்கள் :

    சரித்திர புகழ் பெற்ற கல்வெட்டுக்கள் பரிக்கல் கோவிலின் வெளிச்சுவர்களில் உள்ளன. பல்லாயிரக்கணக்கான புகழ் பெற்ற மீன் வடிவக் குறியீடுகள் உள்ள கல்வெட்டுக்கள், (பாண்டிய அரசர்களின் சின்னம் மீன் சின்னம்) இங்கே காணப்படுகின்றன.

    13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோப்பெருஞ்சிங்கம் என்ற பாண்டிய அரசனுடைய பெரும் பங்களிப்பை இது குறிக்கிறது. 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருபுவனம் சக்கரவர்த்தி கோனிர்மாய் கொண்டானுடைய பங்களிப்பைப் பற்றியும் நாம் அறிகிறோம்.

    மற்றொரு கல்வெட்டின் மூலம் அருகிலுள்ள கிராமங்களான திருவெண்ணை நல்லூர், அனத்தூர், சித்தனூர் முதலிய கிராம மக்களுக்கு வரி தள்ளுபடியை வழங்கியதாகவும், அக்கிராம மக்கள் அந்த தொகையை இத்திருக்கோவிலைப் பராமரிக்கவும், விளக்கு ஏற்றவும் மற்றும் கோவில் திருப்பணிக்காகவும் பயன்படுத்தியதாகச் சாசனம் இங்கே உள்ளது.

    முதலாம் ராஜராஜ சோழன் பரிக்கல் கோவிலின் திருக்குளத்தை வெட்டி இத்தலத்தில் திருப்பணி செய்துள்ளான். இத்திருக்கோவிலின் குடமுழுக்கை பல்லவ அரசர்கள் நாயக்க மன்னர்கள் நிறைவேற்றியதாகவும் கல்வெட்டில் குறிப்புகள் உள்ளன.

    வியாசர் நிறுவிய ஆஞ்சநேயர் :

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் இரண்டு நதிகளுக்கு இடையில் (தென்பெண்ணை, கடிலம் ஆறுகளுக்கு) அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் போல் இந்த இடமும் சிறப்பு மிகுந்தது. இதனுடைய சரித்திரப் பெயர் பரிக்கல். கிராமத்தின் நடுவில் இக்கோவிலுள்ளது. விமானத்தின் மேற்கூரை அஷ்டாங்க விமானம் எனப்படும்.

    பக்தர்கள் நுழைவயிலில் ஆஞ்ச நேயரையும், விநாய கரையும், நாகர்களையும் பிரகாரத்திலும் சேவிக்கலாம். கருடனை சேவித்த பிறகு மூலவர் சந்நிதியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடலாம்.

    ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார். ஸ்ரீகனகவல்லி தாயாரைத் தம்முடைய மடியில் இருத்திக் கொண்டுள்ளார். இவர் சுயம்பு மூர்த்தியாவார். ஸ்ரீவியாசராயர் ஆஞ்சநேயரின், 732 சிலை களை தென் இந்தியாவில் நிறுவினார். அவற்றில் இங்குள்ள ஆஞ்சநேயரும் ஒருவராவார்.

    ராஜகோபுரம் கட்ட உதவுங்கள் :

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். எந்த ஒரு ஆலயத்துக்கும் அழகையும், கம்பீரத்தையும் கொடுப்பது கோபுரங்கள்தான்.
    அதிலும் ராஜகோபுரத்துக்கு தனித்துவமும், ஆற்றலும் உண்டு. ஆலயத்துக்கு சென்று வழிபட இயலாதவர்கள், தூரத்தில் இருந்து ராஜகோபுரத்தை பார்த்து கைக்கூப்பி தரிசனம் செய்தாலே போதும், ஆலயத்துக்குள் சென்று வழிபட்ட முழுப் புண்ணியமும் கிடைத்து விடும்.

    இதைக் கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் ஆலய ராஜகோபுரத்தை மிகவும் உயரமாக பல அடுக்குகளாக கட்டினார்கள். சில ஆலயங்களின் ராஜகோபுரம் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும். இறைவனின் ஸ்தூல வடிவமான கோபுரம் முன்பு நாம் மிகவும் சிறியவர்கள் என்ற எண்ணம் வர வேண்டும். அப்படி வந்தால்தான் “நான்” என்ற அகந்தை அகன்று பணிவு தோன்றும். இப்படி மனப் பக்குவத்தையும் ராஜகோபுரம் தரவல்லது.

    எனவேதான் ஒவ்வொரு ஆலயத்திலும் ராஜகோபுரம் முக்கியமானதாக கருதப்படுகிறது. சிங்கிரிக்குடி, பூவரசன் குப்பம் இரு தலங்களிலும் அழகான ராஜ கோபுரம் உள்ளது. அதிலும் பூவரசன் குப்பம் தலத்து ராஜகோபுரம் வர்ணங்கள் பூசப் பட்டு கண்ணுக்கு குளுமையாக ஜொலிக்கிறது.

    ஆனால் பரிக்கல் தலத்தில் தற்போதுதான் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. பல தடவை அனுமதி கேட்டும் சமீபத்தில்தான் ராஜகோபுரம் கட்டுவதற்கு உரிய உத்தரவை இத்தலத்து லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு வழங்கினார். இதையடுத்து உரிய விதிப்படி பூஜைகள் போடப்பட்டு ராஜகோபுரம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மொத்தம் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரமாக கட்டும் திட்டத்துடன் திருப்பணி தொடங்கியுள்ளது.

    தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை, இங்கு ராஜகோபுரம் கட்டும் திட்டத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளது. ஆனால் 5 நிலைகளையும் கட்டி முடிக்க இத்தொகை போதுமானதாக இல்லை. எனவே பக்தர்கள் அளித்து வரும் நன் கொடையைக் கொண்டே இத்தலத்து ராஜகோபுரம் கட்டும் பணி அந்த லட்சுமி நரசிம்மரின் அருள் பார்வையால் தங்கு தடையின்றி நடந்து வருகிறது. பக்தர்கள் அன்பளிப்பை கொடுக்க, கொடுக்க கோபுரம் உயர்ந்து வருகிறது. இந்த ஆலயத்திருப்பணியில் உங்களையும் இணைத்துக் கொள்வது மிகப்பெரும் புண்ணியத்தைத் தரும்.

    நீங்கள் கொடுக்கும் தொகை சிறியதோ, பெரியதோ... அது பற்றி எதுவும் நினைக்காதீர்கள். முதலில் கோபுரம் கட்ட நாம் உதவ வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். நான் கொடுக்கும் இந்த சிறு தொகையா.... அங்கு போய் நிறையப் போகிறது என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். சிறுதுளி பெரு வெள்ளம் என்பார்கள்.

    ஆகையால் பரிக்கல் ஆலய ராஜகோபுரம் கட்டுவதற்கு உங்களால் முடிந்த தொகையை கொடுங்கள். ராஜகோபுரம் கட்டுவதற்கு நாமும் உதவி செய்தோம் என்ற ஆத்மதிருப்தி உண்டாகும்.

    நம்மால் தனிநபராக ஒரு ஆலயத் திருப்பணியை நிச்சயம் செய்ய இயலாது. இந்த நிலையில் நம்மால் முடிந்த உதவியை செய்யும்போது அதற்கான புண்ணிய பலன்கள் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் சந்ததிகளுக்கும் கிடைக்கும். லட்சுமி நரசிம்மரே இந்த வாய்ப்பை உங்களுக்கு தந்து இருப்பதாக கருதி ராஜகோபுர திருப்பணிக்கு உதவுங்கள். உங்கள் அன்பளிப்பை அனுப்ப வேண்டிய

    முகவரி :

    செயல் அலுவலர்,
    அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில்,
    பரிக்கல் - 607 204
    உளுந்தூர் பேட்டை தாலுகா, விழுப்புரம் மாவட்டம்.
    தொடர்புக்கு: 9943530122 (மணி, செயல் அலுவலர்).
    Next Story
    ×