search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகதோஷம் போக்கும் வடநாகேஸ்வரர் திருக்கோவில்
    X

    நாகதோஷம் போக்கும் வடநாகேஸ்வரர் திருக்கோவில்

    நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கோவிலுக்கு வந்து ராகு காலத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் என்ற திருத்தலத்தில் உள்ளது நாகேஸ்வரர் திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள மூலவரை பிரதிஷ்டை செய்தவர், பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் ஆவார். இந்த ஆலயத்தின் வரலாற்றைப் பார்க்கலாம்.

    சோழ மன்னன் அனபாயன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, அவரது அரசவையில் சிறந்த சிவ பக்தரான ஒரு அமைச்சர் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழிராமதேவர். குலத்தின் பெயரால் சேக்கிழார் என்று அழைக்கப்பட்டார்.

    சிறு வயதிலேயே மிகந்த புலமையுடன் இருந்த சேக் கிழாரை, மன்னன் தனது அரசவையில் அமைச்சராக பணியமர்த்தினான். சேக்கிழாரின் சிறந்த பணியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த மன்னன், அவருக்கு ‘உத்தமசோழ பல்லவர்’ என்ற சிறப்பு பெயரிட்டு அழைத்தான். தந்தையைப் போலவே சிறந்த சிவ பக்தரான சேக்கிழார், சிவனருள் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை ‘பெரிய புராணம்’ என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார்.

    ஒரு முறை சேக்கிழார் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்றார். அங்கு ராகு பரிகார தலமான நாகேஸ்வர பெருமானை வழிபட்டார். அதன்பிறகு சேக் கிழாருக்கு, நாகேஸ்வர சுவாமியின் மீது அதீத அன்பு ஊற்றெடுத்தது. அந்த இறைவனை தினமும் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார்.

    அதே சமயம் திருநாகேஸ்வரத்திற்கு அடிக்கடி செல்ல முடியாது என்பதால், நாகேஸ்வரருக்கு, தனது ஊரிலேயே கோவில் கட்ட வேண்டும் என்று விருப்பம் கொண்டார். அதன்படியே நாகேஸ்வரரின் அமைப்பில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, இங்கு ஒரு கோவிலை எழுப்பினார். இத்தல ஈசனுக்கும் ‘நாகேஸ்வரர்’ என்றே பெயரிட்டு, தினமும் வழிபாடு செய்து வந்தார். இந்த ஆலயம் வட நாகேஸ்வரம் என்று அழைக்கப்படலாயிற்று.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவரான நாகேஸ்வரர், ராகுவின் அம்சமாகவே காட்சி தருகிறார். இவருக்கு தினமும் காலை 6.30 மணி, 10 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய வேளைகளில் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அபிஷேகத்தில் கலந்துகொண்டும், ராகு காலத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தும், உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக வைத்தும் வழிபாடு செய்யலாம். இதனால் நாகதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஆலயத்தில் சேக்கிழார் பிரதிஷ்டை செய்த நாகேஸ்வரர் லிங்கம் சேதமடைந்தது. இதையடுத்து மூலவரான அந்த லிங்கத்தை, இந்த ஆலயத்தில் உள்ள சூரிய தீர்த்தத்தில் போட்டு விட்டு, புதியதாக ஒரு லிங்கம் செய்து மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தார்கள். ஆனால் அன்றைய தினம் இரவு, கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய சிவபெருமான், பழைய லிங்கத்தையே கருவறையில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினார்.

    அதன்பின்பு, சூரிய தீர்த்தத்தில் போடப்பட்ட லிங்கம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை, ஈசன் சன்னிதியின் பின்புறம் வழிபாட்டிற்காக வைத்துள்ளனர். இந்த லிங்கத்திற்கு, ‘அருணாசலேஸ்வரர்’ என்று பெயர். பக்தர்கள் அனைவரும், இந்த லிங்கத்தையும் மூலவராக பாவித்தே வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோவில் சோழர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள அம்பாள், காமாட்சி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். தெற்கு நோக்கிய சன்னிதியில் எதிரில் சிம்ம வாகனத்துடன் தனிச் சன்னிதியில் அம்பாள் இருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. விழாவின் 8-ம் நாளில் சிவன், அடியாருக்கு காட்சி தரும் வைபவம் நடைபெறும். அப்போது சுவாமிக்கு முன்புறம் செல்லும் ஒரு சப்பரத்தில், அவரைப் பார்த்தபடி சமயக்குரவர்கள் நால்வர் மற்றும் சேக்கிழார் ஆகியோர் உலா வருவார்கள். சித்ரா பவுர்ணமி அன்று அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவின் ஒரு நாள், இத்தல இறைவன் நாக வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிப்பார்.

    ஆலயத்தின் பிரகாரத்தில் சேக்கிழாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இவர் மூலவரான சிவ பெருமானை தரிசித்தபடி மேற்கு நோக்கி நின்றபடி அருள்புரிகிறார். வலது கையில் சின் முத்திரை, இடது கையில் ஏடு வைத்திருக்கிறார். பூசம் நட்சத்திரம் அன்று இவருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும்.

    வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி, சேக்கிழாருக்கு 10 நாட்கள் குருபூஜை நடைபெறுகிறது. குரு பூஜை தினத்தன்று, காலையில் சேக்கிழார் உற்சவமூர்த்தி, இங்கிருந்து தேரடி வீதிக்குச் செல்வார். அவரை பொதுமக்கள் சிவபெருமான் சார்பில் வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச் செல்வார்கள். அதன் பிறகு சேக்கிழார், கருவறைக்குள் சென்று மூலவரை தரிசிக்கும் நிகழ்வு நடைபெறும். அன்றிரவு சேக்கிழார் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா செல்வார். பின்னர் மறுநாள் காலையில் கோவிலுக்குத் திரும்புவார். அப்போது இரவு முழுவதும் கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ஆலயத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள சேக்கிழார் பிறந்த ஊரிலும், அவருக்கு தனிக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் 11 நாட்களுக்கு சேக்கிழார் குருபூஜை நடைபெறும். அவ்விழாவின் நான்காம் நாள் அன்று சேக்கிழார், இந்த ஆலயத்திற்கு எழுந்தருளி, நாகேஸ்வரரை தரிசித்துச் செல்வார்.

    இங்குள்ள விநாயகர், ‘அனுக்ஞை விநாயகர்’ என்று பெயர் பெற்று விளங்குகிறார். 5 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலய முகப்பு. கோவில் பிரகாரத்தில் பரவை நாச்சியாருடன் சுந்தரர் வீற்றிருக்கிறார். மேலும் நாகத்தின் வடிவில் சத்தியநாராயணர், நாகேந்திரர் மற்றும் நாகநாதேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இந்த மூன்று நாகங்களுக்கு மத்தியிலும் லிங்க வடிவம் இருக்கிறது. காசி விஸ்வநாதர், லட்சுமி, சரஸ்வதி, வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான், கற்பக விநாயகர், சனீஸ்வரர் சன்னிதிகளும் உள்ளன. ஆலயத்தின் தல விருட்சம் செண்பக மரம் ஆகும். தல தீர்த்தம் சூரிய புஷ்கரணி.

    சென்னை தாம்பரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், பல்லாவரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது குன்றத்தூர். பஸ்நிலையத்தின் அருகிலேயே கோவில் இருக்கிறது. தென் மாவட்டங்களில் இருந்து செல்பவர்கள், தாம்பரம் அல்லது பல்லாவரத்தில் இறங்கி, அங்கிருந்து வேறு பஸ்களில் ஆலயத்திற்குச் செல்லலாம்.
    Next Story
    ×