search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனர்பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய வாணியம்பாடி கோவில்
    X

    புனர்பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய வாணியம்பாடி கோவில்

    புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சிறப்பு மிக்க தலமாக வாணியம்பாடி தலம் உள்ளது.
    சரஸ்வதிதேவிக்கு தானே வாக்குக்கு அதிபதி என்ற கர்வம் சற்று தலைதூக்கியது. அதனால் ஒரு முறை அவர் பிரம்மதேவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார். இந்த வாக்குவாதத்தில் ஒரு கட்டத்தில் பிரம்மதேவருக்கு கோபம் ஏற்பட்டது. எனவே அவர் சரஸ்வதியை நோக்கி, ‘நீ உன்னுடைய வாக்கு (பேசும்) சக்தியை இழந்து போவாய்’ என்று சாபமிட்டார்.

    யாழை மூடினாள் :

    இதையடுத்து தன் தவறை எண்ணி வருந்திய சரஸ்வதி தேவி பூலோகத்தில் வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் (திரு மறைக்காடு) சென்று அங்குள்ள ஈசனை நோக்கி தவம் இருந்து வழிபட்டாள். அப்போது வேதாரண்யத்தில் உள்ள அம்பாளிடம் கலைவாணி தனது யாழை இசைத்து காண்பிக்க வந்தாள். அப்போது அம்பாளின் குரல், தனது யாழில் இருந்து வெளிவந்த இசையைக் காட்டிலும் மிகவும் இனிமையாக இருந்ததை உணர்ந்த கலைவாணி யாழை மூடி வைத்தாள்.

    இதன் காரணமாகவே வேதாரண்யத்தில் உள்ள அம்பாளின் திருநாமம், ‘யாழைப் பழித்த மென்மொழியாள்’ என்று மாறியது. வடமொழியில் ‘வீணாவாத விதூஷணி’ என்பதாகும்.

    வாணியம்பாடி தலம் :

    இந்த நிலையில் தன்னுடைய சாபத்தால் பேசும் சக்தியை இழந்த கலைவாணியைத் தேடி, சத்தியலோகத்தில் இருந்து பூலோகம் வந்தார் பிரம்மதேவர். அங்கே கலைவாணி சிருங்கேரி என்னும் தலத்தில் தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார். பின்னர் கலை வாணியை சமாதானம் செய்து, அங்கிருந்து நேராக வாணியம்பாடி என்னும் ஊரில் உள்ள சிவ தலத்திற்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் அந்த தலத்தில் இருந்த ஈசன் அதிதீஸ்வரரையும், அம்பாள் பெரியநாயகியையும் வழிபட்டு, கலைவாணிக்கு மீண்டும் வாக்குசக்தியை அருளும்படி கேட்டு பிரம்மதேவர் வழிபட்டார். அவருடன் கலைவாணியும் தன் சாபம் நீங்க வேண்டி தவத்தில் ஈடுபட்டார். இருவரின் வேண்டு தலையும் நிறைவேற்ற எண்ணிய அதிதீஸ்வரரும், பெரியநாயகி அம்பாளும் அவர்கள் முன்பாக தோன்றினர்.

    வாக்கு சக்தி அளித்த ஈசன் :

    தொடர்ந்து ஹயக்ரீவர் முன்னிலையில் வீணையை மீண்டும் சரஸ்வதி இசைக்க அருள்புரிந்தனர். மேலும் கலைவாணி இழந்த பேசும் சக்தியையும் திரும்ப அளித்தனர். வாணிக்கு அருள் செய்து அவளைப் பாடும்படி கூறினர். வாணியும் மீண்டும் யாழை இசைத்து, தனது இனியக் குரலில் கீதம் இசைத்தாள். வாணி பாடிய தலம் என்பதால் இந்தத் தலம் ‘வாணியம்மைபாடி’ என்றானது. பின்னர் காலப்போக்கில் மருவி ‘வாணியம்பாடி’ என்று அழைக்கப்படுகிறது.

    இந்த தலத்தில் உள்ள அதிதீஸ்வரர் சுயம்புவாய் தோன்றியவர். மேற்கு நோக்கி எழிலாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். அம்பாள் பெரியநாயகி தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு சரஸ்வதி தேவிக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதியில் சரஸ்வதிதேவி கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில், மடியில் வீணையுடன், வலது காலைத் தொங்க விட்டு, இடது காலை மடித்து ஒய்யாரமாக வீற்றிருக்கிறாள்.

    சங்கரநாராயணர் சன்னிதி :

    இந்தக் கோவிலில் சிவனும், விஷ்ணுவும் இணைந்த வடிவான சங்கர நாராயணர் சன்னிதியும் இருக்கிறது. சங்கர நாராயணரை பிரதோஷ காலங்களில் அபிஷேகித்து வழிபட்டால் கிடைக்கும் பலன் நூறு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இங்குள்ள பைரவர் எடுப்பான தோற்றத்தில் நாய் வாகனத்துடன் அருள்பாலித்து வருகிறார். இவரை ராகு காலங்களில் வழிபட்டு வந்தால் சர்ப்ப தோஷங்கள் அகலும். சனிக்கிழமைகளில் பைரவரை வழிபாடு செய்தால் ஏழரைச் சனி, கண்டச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டமத்துச் சனி ஆகிய சகல சனி தோஷங்களும் அகன்று நற்பயன் கிடைக்கும். நெய் தீபம் ஏற்றி பைரவரை வழிபடும் போது, அருகிலேயே எள்தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சிறப்பு மிக்க தலமாக இந்தத் தலம் உள்ளது.

    தீபம் ஏற்றி...

    இந்த தலத்தில் நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். சரஸ்வதி பூஜையன்று இந்த தலத்தில் ஈசனையும், அம்பாளையும், கலைவாணியையும் முறையே ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால் கல்வியறிவு ஊற்றெடுக்கும் என்பது இங்கு வந்து வழிபட்டு சென்ற பக்தர்கள் கூறும் மொழியாகும். ஞானம், தெளிவு பிறக்கவும், கல்வியிலும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெறவும், உயர்பதவிகள் கிடைக்கவும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வேலூரில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும், ஜோலார்பேட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது வாணியம்பாடி.
    Next Story
    ×