search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருஞானசம்பந்தர் பசி போக்கிய சிவபுரி திருத்தலம் - கடலூர்
    X

    திருஞானசம்பந்தர் பசி போக்கிய சிவபுரி திருத்தலம் - கடலூர்

    தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் மூன்றாவது தலமாகவும், கடலூர் மாவட்டத்தில் உள்ள 19 பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் இத்தலம் விளங்குகிறது.
    சைவசமய குரவர்கள் நால்வரில், மிகவும் சிறுவயதில் இறையருளும், இறைதரிசனமும் கிடைக்கப்பெற்றவர் திருஞானசம்பந்தர். மூன்று வயதில் உமையவளிடம் ஞானப்பால் குடித்து பண்பாடிய இவர், பின்காலத்தில் ஒரு பசித்த பொழுதினில் சிவபெருமானின் திருக்கரத்தால் உணவைப் பெறும் பாக்கியத்தையும் பெற்றார். இந்த வரலாற்றின் நிகழ்விடமாக திகழ்வதுதான் திருநெல்வாயில் எனப்படும் சிவபுரி திருத்தலம். இந்த ஊர் திருவுச்சி என்ற பெயராலும் குறிப்பிடப்படுகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் 4 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

    ஆலய வரலாறு :

    சீர்காழியில் சிவபாத இருதயர்- பகவதி அம்மாள் ஆகியோரின் புதல்வராக பிறந்தவர் ஞானசம்பந்தர். தந்தையார் கோவிலுக்குச் செல்லும் போது, முரண்டு பிடித்து தானும் அவருடன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் சிவபாத இருதயர், குழந்தை சம்பந்தனை கோவிலின் பிரம்மதீர்த்தக் கரையில் அமரச் செய்துவிட்டு, சிவ மந்திரத்தை உச்சரித்தபடி நீரில் இறங்கி மூழ்கினார். ஏற்கனவே பசியிலிருந்த குழந்தை தந்தையை காணாத பயத்தில், ‘அம்மை.. அப்பா..’ என்று அழைத்து அழுதது. இதை செவியுற்ற உமையவள், அந்தக் குழந்தைக்கு ஞானப் பால் ஊட்டினாள். மேலும் அம்மையும், அப்பனும் தரிசனமும் அளித்தனர்.

    குளித்து முடித்து கரையேறி வந்த சிவபாத இருதயர், கடைவாயில் பாலொழுக நின்ற மகனைப் பார்த்து ‘என்ன நடந்தது?’ என்று கேட்டார்.

    குழந்தை சம்பந்தன் பாலருந்தியதைக் கூற ‘யார் பாலைக் கொடுத்தால் குடித்து விடுவதா?’ என்று கோபத்தில் அருகில் கிடந்த குச்சியை எடுத்து குழந்தையை அடிக்க முற்பட்டார். அப்போது அன்னையிடம் ஞானப்பால் பருகிய அந்த மூன்று வயது குழந்தை, சிவபார்வதி தரிசனம் தந்த இடத்தைக் சுட்டிக்காட்டியவாறு ‘தோடுடைய செவியன்...’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். இதனைக் கண்டு ஆச்சரியமுற்ற தந்தை இறைவனின் அருள் தன் குழந்தைக்கு கிடைத்ததை எண்ணி பரவசமடைந்தார்.

    அதன்பிறகு தந்தையின் உதவியுடனும், ஒரு கட்டத்தில் தந்தையின் துணையின்றியும் ஒவ்வொரு சிவாலயமாக சென்று வழிபடத் தொடங்கினார் திருஞானசம்பந்தர். இறைவனின் மீது மகன் பக்தி கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், திருமணம் செய்யாமல் இப்படியே இருந்து விடுவானோ என்ற அச்சமும் தந்தைக்கு இருந்தது. அதற்கேற்றாற்போல் திருஞானசம்பந்தரும், ‘இறைவனை பணிந்து பாடுவதற்கே என்பிறவி’ என்று கூறிவிட்டார்.

    அவரை சம்மதிக்க வைக்கும் விதமாக, ‘இறைவனுக்காக குடும்பத்தார் சார்பில் நடத்தப்படும் மாபெரும் வேள்வியில் தம்பதி சமேதராக இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும்’ என்று பொய்யுரைத்து மகனின் சம்மதத்தைப் பெற்றனர்.

    திருநல்லூர் பெருமணம் எனப்படும் நல்லூரைச் சேர்ந்த நம்பாண்டார்நம்பி என்பவரின் மகளான தோத்திரபுரணி என்பவரை மணப்பெண்ணாக நிச்சயித்தனர். மேலும் அங்குள்ள சிவலோக தியாகேசர் ஆலயத்தில் திருமணம் செய்வது என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் திருஞானசம்பந்தர், திருவேட்களம் என்ற இடத்தில் சிவதரிசனம் செய்து கொண்டிருந்தார். எனவே அங்கிருந்தே திருமண நிகழ்ச்சிக்கு அனைவரும் புறப்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    பசி போக்கிய இறைவன் :

    திருமணத்தை நடத்தி வைக்க திருநீலநக்க நாயனாரும், திருமணத்தைக் காண முருக நாயனார், பெருமபாண நாயனார் உள்ளிட்ட அடியார்கள் பலரும் வருகை தந்திருந்தனர். அனைவரும் சிதம்பரம் நடராசரையும், திருவேட்களம் பாசுபதேசுவரரையும் தரிசித்து விட்டு, திருநெல்வாயில் என்ற ஊரை அடைந்த போது உச்சிப்பொழுது (மதியம்) வந்து விட்டது. வெயில் தாக்கம் காரணமாக அனைவரும் சற்று இளைப்பாற முடிவு செய்தனர்.

    அப்பொழுது அனைவருக்கும் பசி மேலிட, களைத்துப் போயினர். இதை உணர்ந்த இறைவன் கோவில் பணியாளர் உருவத்தில் தோன்றி, அனைவருக்கும் அமுது பரிமாறி பசி போக்கினார். பின்னர் அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார். உச்சிப் பொழுதில் அருள்புரிந்தவர் என்பதால் இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் ‘உச்சிநாதர்’ என்று பெயர் பெற்றார். திருஞானசம்பந்தருக்கும் அவருடன் வந்தவர்களுக்கும், சிவன் உணவளித்த வரலாற்றின் நிகழ்விடமே திருநெல்வாயில் எனப்படும் சிவபுரி திருத்தலம்.

    அருணகிரிநாதர் இவ்வாலயம் வந்து வழிபட்டு, இங்குள்ள முருகன் மீது ஒரு பாடல் பாடியுள்ளார். அப்பாடல் அவரின் திருப்புகழில் இடம்பெற்றுள்ளது. கண்வ மகரிஷியும் இவ்வாலய ஈசனை தரிசித்துள்ளார்.

    ஞானசம்பந்தர் மற்றும் அவருடன் வந்த பரிவாரங்களின் பசியை இறைவன் போக்கிய இத்தலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால் காலம் முழுமைக்கும் அவர்களது வாழ்வில் உணவு பிரச்சினை இருக்காது என்பதும், சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாத்தினால் நிம்மதியும் மன அமைதியும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய திருக்கோவில், ஐந்துநிலை ராஜகோபுரத்துக்கு முன்னால் கிருபா சமுத்திரம் என்னும் தீர்த்தக்குளம் உள்ளது. ஒரே ஒரு பிரகாரத்தைக் கொண்ட ஆலயத்தின் உட்புறத்தில் இடதுபக்கமாக அதிகார நந்தி வீற்றிருக்கிறார். பெரும்பாலான ஆலயங்களில் பிரகார சுற்றில் பரிவார தெய்வங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால் இவ்வாலயத்தில் பிரகாரச் சுற்றுக்கும், கருவறைக்கும் இடைபட்ட இடத்தில் பரிவார தெய்வங்களின் சன்னிதிகள் இடம் பெற்றுள்ளன. அதாவது அனைத்து மூர்த்தங்களையும் ஒருசேர சுற்றும் விதமாக பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆலய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள பெரிய மண்ட பத்தில் சுவாமி - அம்பாள் சன்னிதிகளும் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னிதிகளும் ஒருசேர இடம் பெற்றுள்ளன. இதே போன்ற அமைப்பை சிதம்பரம் அனந்தீஸ்வரர் ஆலயத்திலும் காண முடியும். இரண்டு ஆலய திருப்பணிகளும் நகரத்தார் சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இந்த ஒற்றுமை ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

    வசந்தமண்டபத்தில் பலிபீடமும், நந்தியம் பெருமானும் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு நேரெதிரில் துவாரபாலகர்கள் காவல் புரிய, மூலவர் உச்சிநாதர் கருவறையில் சுயம்புலிங்கமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு இடது புறத்தில் அர்த்த மண்டபத்திலிருந்து தென்முகமாக ஆடிய கோலத்தில் அருள்புரிகிறார் நடராசபெருமான். பலிபீடத்தையும், நந்தியம் பெருமானையும் ஒட்டினார் போல, தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார் கனகாம்பிகை. வசந்த மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பள்ளியறையும், நவக்கிரக சன்னிதியும் அமையப்பெற்றுள்ளன. மண்டபச்சுற்றில் விநாயகர் மற்றும் தனி சுப்ரமணியர் சன்னிதிகள் உள்ளன.

    இவ்வாலய முருகப்பெருமான் ஒருமுகம், நான்கு திருக் கரங்களுடனும் காட்சியளிக்கிறார். கருவறைச் சுற்றில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜதுர்கை இடம்பெற்றுள்ளனர். சுவாமி சன்னிதியின் கோமுகம் அருகே சண்டிகேஸ்வரரும், அம்பாளின் கோமுகம் அருகே காசி விசுவநாதரும் இடம் பெற்றுள்ளனர். பிரகாரத்தின் வடகிழக்கில் மதில்சுவரை ஒட்டி பைரவரும், பஞ்சலிங்கம் எனப்படும் ஐந்து லிங்கங்களும், சனீஸ்வரன் மற்றும் சந்திரன் சன்னிதியும் உள்ளன. தென்கிழக்கு மூலையில் சூரியன் சன்னிதியும், மடப்பள்ளியும் இருக்கிறது.

    தினமும் ஐந்துகால புஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், காலை 6 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும். சிதம்பரத்திலிருந்து இவ்வாலயத்திற்குச் செல்ல குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து வசதியும், எல்லா நேரங்களிலும் ஆட்டோ வசதியும் உள்ளன.

    அகத்தியர் வழிபட்ட தலம் :

    தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் மூன்றாவது தலமாகவும், கடலூர் மாவட்டத்தில் உள்ள 19 பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் இத்தலம் விளங்குகிறது. இத்தல இறைவன் உச்சிநாதர், மத்யானேஸ்வரர் என்றும், இறைவி கனகாம்பிகை, கனகாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். தலவிருட்சம் நெல்லி, தலதீர்த்தம் கிருபாசமுத்திரம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட கற்றளி கோவிலாகும்.

    கயிலாயத்தில் சிவனுக்கும்- பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது அனைத்து தேவர்களும், முனிவர்களும் அங்கு கூடினர். இதனால் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. இதையடுத்து அகத்தியரை தென்திசைக்கு சென்று உலகை சமநிலைக்கு கொண்டு வரும்படி பணித்தார் சிவபெருமான்.

    ‘தங்களது திருமணத்தைக் காணும் பாக்கியம் எனக்கில்லையா?’ என அகத்தியர் முறையிட்டார் அகத்தினர். அதற்கு ஈசன், ‘நீ என்னை எங்கெங்கிருந்து வழிபடு கிறாயோ, அங்கெல்லாம் உமக்கு எனது திருமணக்காட்சியை காட்டியருள்வேன்’ என்று கூற, அகத்தியர் மன நிறைவுடன் தென்திசை நோக்கி புறப்பட்டார்.
    Next Story
    ×