search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூவனநாதர் திருக்கோவில் - பூவனூர்
    X

    பூவனநாதர் திருக்கோவில் - பூவனூர்

    விஷக்கடியால் அவதிப்படுபவர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
    மனிதன் இந்தப் பூவுலகில் வாழும் போது, விலங்குகள், புழு, பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றின் ஊடே தான் தனது வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்த வேண்டும்.

    அப்படி வாழும் போது கண்ணுக்குத் தெரியாத பூச்சி, புழு போன்ற உயிரினங்களாலோ சில தாவரங்களின் ஒத்து வராத தன்மையினாலோ மனித உடலுக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் உடல் தோல் தடிப்பு, மூச்சிரைப்பு, ஆத்மா போன்ற உபாதைகள் ஏற்படும். இதற்கு ஆங்கில மருத்துவத்தில் உடனடியாக மருந்து மாத்திரை ஊசி மூலம் தீர்வு உண்டு. நாட்பட்ட நோய்கள் சில சித்தா, ஓமியோபதி போன்ற மருத்துவத்திலும் குணமாவது உண்டு.

    ஆனால் இவைகளில் எல்லாம் குணம் காண முடியாத மக்கள் பலரும், இறுதியில் இறைவனைத் தஞ்சம் அடைகின்றனர். அந்த நம்பிக்கையே அவர்களை குணப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டு வருகிறது.

    பூவனூர் :  

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு தெற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்குடி செல்லும் சாலையில் இருக்கிறது பூவனூர் என்ற சிற்றூர். பாம்பணி ஆறு எனப்படும் பாமிணி ஆற்றின் மேல் கரையில் சாலையில் இருந்து பார்த்தாலே ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உயர்ந்து நிற்கும் திருக்கோவிலைக் காணலாம்.

    சுகப்பிரம்மர் என்னும் கிளி முகம் கொண்ட ரிஷி, முன்காலத்தில் இங்கு வந்து பூவனம் ஒன்றை உருவாக்கி, அதில் இறைவனை ஸ்தாபனம் செய்து பூஜித்துள்ளார். பூவனத்திற்கு நடுவே அமைந்த இறைவன் என்பதால், இத்தலத்தில் உள்ள மூலவர் பூவனநாதர் என்றும், புஷ்பவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கிளி முகம் கொண்ட சுகபிரம்ம ரிஷி வழிபட்ட இந்த தலத்தில் இன்றும் ஏராளமான கிளிகள் பறந்து கொண்டிருப்பதைக் காணலாம்.

    ஆலயத்தின் உள் பிரகாரத்தை வலம்வரும் போது, கோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி சுவாமியும், மேற்கே பிரம்மன், விஷ்ணு பகவான் சூழ அண்ணாமலையாரும், வடக்கே நான்முகனும் இருக்கின்றனர். துர்க்கையின் இருப்பக்கமும் அர்த்தநாரி, பிச்சாடனர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இவர்களுக்கு எதிரே சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.

    கன்னி மூலையில் பிரதான விநாயகரும், லட்சுமி நாராயணர், காசி விசுவநாதர் - விசாலாட்சி திரு உருவங்கள் உள்ளன. வாயு மூலையில் வள்ளி -தெய்வானையுடன் சுப்பிரமணியரும், ஈசான மூலையில் சனீஸ்வரரும், கால பைரவரும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர். சுவாமி சன்னிதிக்கும் பின்புறம் தலவிருட்சமான பலா மரம் பசுமையாக நிழல் தந்து நிற்கிறது.

    சுவாமி சன்னிதிக்கு எதிரே உள்ள பெரிய மண்டபத்தில் தெற்கு நோக்கி ராஜராஜேஸ்வரியும், கற்பகாம்பிகையும் இரு சன்னிதிகளில் இருந்து அருள்புரிகின்றனர். ஆலயத்திற்கு இரண்டு அம்மன் இருப்பது தனிச்சிறப்பாக உள்ளது.

    சாமுண்டீஸ்வரி :

    கொடிமரத்தின் எதிரே வடக்கு நோக்கிய தனிக் கோவிலில் சாமுண்டீசுவரி அம்மன் அமர்ந்து அருள்மழை பொழிகிறாள். மைசூர் மலையில் இருக்கும் அம்பிகை இங்கும் இருப்பது சிறப்பென கருதப்படுகிறது.

    ‘குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர்

    மற்றும் தீவினை செய்தன மாய்க்கலாம்

    புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர்

    கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே’

    தீவினை தீர பூவனூர் வந்து தரிசிக்கலாம் என்பது அப்பர் பெருமானின் அருள் வாக்கு.

    கயிறு கட்டுதல் :

    விஷக்கடியால் அவதிப்படுபவர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வழிபாடு என்ன என்று விசாரித்தோம்.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலையில் இங்கு வரும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், திருக்கோவிலின் எதிரில் உள்ள ஷீர புஷ்கரணி என்ற திருக்குளத்தில் மூழ்குகிறார்கள். பின்னர் அவர்கள் கோவிலுக்குள் சென்று சுவாமியையும், அம்பாளையும் வணங்குகின்றனர்.

    அதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னிதியில் முன்பாக நிறுத்தப்படும் அவர்களுக்கு, மந்திரித்த வேர்க் கயிறு கட்டி விடப்படுகிறது. பின்னர் அனைவரும் சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டு வீடு திரும்புகின்றனர். இவ்வாறு செய்வதால் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், விரைவில் குணமடைகிறார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆலயம் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடை திறந்திருக்கும்.
    Next Story
    ×