search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிள்ளைப்பேறு வழங்கும் பேரையூர் நாகநாத சுவாமி கோவில்
    X

    பிள்ளைப்பேறு வழங்கும் பேரையூர் நாகநாத சுவாமி கோவில்

    பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், பேரையூர் நாகநாத சுவாமி கோவிலுக்கு வந்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்து உள்ள முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது பேரையூர் நாகநாத சுவாமி கோவில். புதுக்கோட்டை-பொன்னமராவதி வழித்தடத்தில் புதுக்கோட்டையில் இருந்து 13-வது கிலோ மீட்டரில் அமைந்து உள்ளது இக்கோவில். மெயின் ரோட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் வடக்கே பயணித்து கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    தற்போது உள்ள மூலக்கோவில் கி.பி. 12-13-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். கருவறையின் வெளிச்சுவற்றில் உள்ள மாடங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தியும், மேற்கே லிங்கோத்பவரும், வடக்கே பிரம்மாவும் அலங்கரிக்கின்றனர். கோவில் விமானம் பிற்காலத்தில் செங்கல்லினால் கட்டி புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

    கோவில் அமைப்பு : 

    கருவறையின் முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சுரங்கப்பாதை எங்கே செல்கிறது என்பது தெரியவில்லை. இது, போர்க்காலங் களில் கோவில் சிலைகளையும், சொத்துக்களையும் மறைத்து வைக்க தரைமட்டத்திற்கு கீழ் கட்டப்பட்ட சிறிய அறையாக இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.

    இந்த கோவில் வளாகத்தில் காலத்தால் முற்பட்டது மேலக்கோபுரமாகும். இதன் கட்டுமான அமைப்பைக்கொண்டு இது கி.பி.11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதலாம். மேலும் இங்கு ராஜேந்திர சோழன் காலத்து (கி.பி.1012-44) கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. ஆகவே இங்குள்ள (மூல) கோவிலும், இக்காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் 12-13-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். கிழக்கு கோபுரம் காலத்தால் பிற்பட்டதாகும். இது பிற்கால பாண்டியர்கால கட்டுமானமாகும். கோவிலில் உள்ள பிற மண்டபங்களும் காலத்தால் பிற்பட்டவையாகும்.

    இங்குள்ள அம்மன் சன்னிதியின் அமைப்பைக்கொண்டு இது விஜயநகர மன்னர்களின் ஆட்சி காலத்தில் (15-16-ம் நூற்றாண்டு) கட்டப்பட்டதென தெரிய வருகிறது. அம்மனின் பெயர் ஸ்ரீபிரகதாம்பாள். கோவிலில் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், அறந்தாங்கி தொண்டமான் மன்னர்கள், பல்லவராயர் ஆகியோரது கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. காலத்தால் முற்பட்ட கல்வெட்டு ராஜேந்திர சோழன் காலத்தை சேர்ந்ததாகும்.

    பல்லவராயர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தபோது இவ்வூர் ‘பேரையூர் நாடு’ என சிறப்புடன் விளங்கியது. பல்லவராயருள் புகழ்மிக்க சிவந்தெழுந்த பல்லவராயர் இக்கோவில் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார்.

    நாகநாதர் சுவாமி :

    பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் இக்கோவிலுக்கு வந்து தாங்கள் அணிந்துள்ள ஆடைகளுடன் நீராடி அந்த ஆடைகளை அங்குள்ள தீர்த்த குளத்தில் விட்டு விட்டு வேறு ஆடை அணிந்து கொண்டு நாகநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஐந்து தலைகளுடன் கூடிய நாகச்சிற்பங்களை(கல், வெள்ளி, தங்கத்தில்) காணிக்கையாக வைத்து செலுத்துகின்றனர். பக்தர்கள் இவ்வாறு வைத்துள்ள ஆயிரக் கணக்கான கல்லினால் ஆன நாக சிற்பங்கள் கோவில் வளாகம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது.

    இந்த கோவிலில் ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் பங்குனி மாதத்தில் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் மட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும். அப்போது கடவுள் வழிபாட்டின்போது இசைக்கப்படும் இசைக்கருவிகளின் ஒலி கேட்பதாக சொல்லப்படுகிறது. பூமிக்கு கீழ் ஆதிசேஷன் நடத்தும் வழிபாட்டு நிகழ்ச்சியின் ஒலியாகும் இது என கோவிலின் கர்ண பரம்பரை கதை தெரிவிக்கிறது.

    கோவிலின் அமைப்பை பொதுவாக காணும்போது இது பல முறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிகிறது. 1995-ல் தொண்டைமான் மன்னர் ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி தெரிவிக்கிறது.

    திருவிழாக்கள் :

    வழக்கமான சிவன் கோவில்களில் நடைபெறும் பூஜைகள் இந்த கோவிலிலும் நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வந்து நாகருக்கு பால் அபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்து தங்களது தோஷம் நிவர்த்தியாக வேண்டி வழிபட்டு செல்கிறார்கள்.

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் பஸ்சில் ஏறி பேரையூர் விலக்கு என்ற இடத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து ஆட்டோக்களின் வாயிலாக கோவிலுக்கு செல்லலாம். மெயின் ரோட்டில் இருந்து கோவில் அமைந்துள்ள 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தும் செல்லலாம். இதேபோல் காரைக்குடி, மதுரை பகுதிகளில் இருந்து இக்கோவிலுக்கு பஸ் மற்றும் ரெயில் மூலம் வரும் பக்தர்கள் நமணசமுத்திரத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து பேரையூர் கோவிலுக்கு செல்லலாம். ஆட்டோ, டவுன் பஸ் வசதியும் உண்டு. 

    கோவில் முகவரி :

    அருள்மிகு நாகநாதர் கோவில் 
    பேரையூர் - 622422
    புதுக்கோட்டை மாவட்டம்

    கோவில் பற்றிய தகவல்களை பெற இந்த +91-4322-221084, 9486185259 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    Next Story
    ×