search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவிக்குறை நீக்கும் அன்பில் ஆலந்துறை கோவில்
    X

    செவிக்குறை நீக்கும் அன்பில் ஆலந்துறை கோவில்

    செவிக் குறைபாடு நீங்க விரும்புபவர்கள் வழிபட்டு பிரார்த்திக்க வேண்டிய ஆலயம் ‘அன்பில் ஆலந்துறை’ என்று சொல்லப்படுகிறது.
    ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

    செல்வத்துள் எல்லாம் தலை’

    எத்தனை செல்வங்கள் இருந்த போதிலும் செவிப்புலன் நன்றாக செயல்படவில்லை என்றால், எந்த பயனுமில்லை என்பதுதான் இதன் உட்பொருள். மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களில் ஒன்றாக காது கேட்கும் திறனும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் குறைபாடு இருப்பின் மருத்துவ உலகில் இ.என்.டி துறை அதனைச் சரிசெய்கிறது.

    மருத்துவம் மட்டுமல்லாது, இறைவன் மீதும் நம்பிக்கை வைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறு செவிக் குறைபாடு நீங்க விரும்புபவர்கள் வழிபட்டு பிரார்த்திக்க வேண்டிய ஆலயம் ‘அன்பில் ஆலந்துறை’ என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயம் செவிக்குறைபாடு நீக்கும் திருத்தலமாக விளங்குகிறது.

    செவிசாய்த்த விநாயகர் :

    அப்பரும், திருஞானசம்பந்தரும் தேவாரப் பாடல்கள் பொழிந்த ஆலயம் இது. இந்தக் கோவிலின் தென் மேற்கு மூலையில் உள்ள விநாயகப் பெருமான், சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். ஒரு காலை சம்மணம் போட்டு, மற்றொரு காலை குத்துக்கால் வைத்துக் கொண்டு அமர்ந்து இருக்கிறார். முறம் போன்ற தனது காதுகளில் ஒன்றை, சற்றே சாய்த்து கூர்மையாக எதையோ கேட்பதைப் போன்ற திருக்கோலத்தில் இவர் அருள்பாலிக்கிறார். எனவே இவரை ‘செவி சாய்த்த விநாயகர்’ என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

    இதற்கு ஒரு கர்ண பரம்பரைக் கதையும் உலவுகிறது. அதைப் பார்க்கலாம்.

    சம்பந்தர் பாடல் :

    காவிரி நதி, அதை அடுத்து கொள்ளிடம் நதி ஓடுகிறது. கொள்ளிடத்தின் வடபுறத் துக் கரையில்தான் இந்தச் சிவாலயம் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், சிவாலயங்கள் தோறும் தரிசனம் செய்து, சிவபெருமானைப் பாடித் துதித்தபடி வந்து கொண்டிருந்தார். அப்போது இந்தத் தலத்திற்கும் வர எண்ணினார். ஆனால் அப்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அவர் அக்கரையில் இருந்தே சிவபெருமானை மனதால் எண்ணி பதிகங்களைப் பாடினார்.

    ‘கணைநீடெரி மாலர வம்வரை வில்லா

    இணையாஎயில் மூன்றும் உரித்த இறைவர்

    பிணையமயி லுங்குயில் சேர்மட அன்னம்

    அணையும்பொழில் அன்பில் ஆலந்துறை யாரே’

    என்று இனிய குரலில் காற்றில் மிதந்து வந்தது திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பாடல்கள். அந்த பாடல்களின் கீதங்களை மறுகரையில் இருந்தபடி இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமான், தன் காதினை கூர்மையாகத் தீட்டிக் கேட்டு இன்புற்றதாகவும், எனவேதான் அவருக்கு செவி சாய்த்த விநாயகர் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விநாயகப்பெருமானை வணங்கி வழிபட்டால் காது தொடர்பான குறைபாடுகள் நீங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

    காது புலன் குறை தீர, விநாயகப் பெருமானுக்கு எளிமையான முறையில் அருகம்புல் மாலை சாத்தி, சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் விநாயகப்பெருமானுக்கு பிடித்த ஜெய்மினி சாமவேதம் பிறந்த தலம் இதுதான் என்று கூறப்படுகிறது. விநாயகப்பெருமானோடு, ஆலயத்தில் உள்ள சுவாமி - அம்பாளுக்கும் சேர்த்து வழிபாடு செய்தால் மிகுந்த நன்மையுண்டு என்றும் சொல்கிறார்கள்.

    அன்பில் ஆலந்துறை :

    தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில், காவிரி வடகரையின் 57-வது தலமாக இது விளங்குகிறது. அன்பில் ஆலந்துறை என்பது ஆலயத்தின் பெயர். துறை என்றால் ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர் என்றும், ஆலந்துறை என்றால் ஆலமரங்கள் நிறைந்த வனமாக விளங்குகிற ஊர் என்பதும் பொருளாகும். ஆலயத்தின் தல விருட்சமும் ஆல மரம்தான். இது கோவிலுக்கு வெளியே இருக்கிறது.

    சுவாமி - அம்பாள் :

    ஐந்து நிலை ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால், அழகிய தோரண வாசல் உள்ளது. அதையும் கடந்து உள்ளே சென்றால் பழமையான இந்த ஆலயத்தை கண்டு தரிசிக்கலாம். இத்தல இறைவனின் பெயர் சத்தியவாகீஸ்வரர் என்பதாகும். சுயம்பு மூர்த்தியான இந்த சிவபெருமானை, வாகீச முனிவர் என்பவர் வழிபட்டுள்ளார். இதனால் இறைவனுக்கு வாகீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பிரகாரத்தில் விநாயகரை அடுத்து சப்தகன்னியர், லிங்கோத்பவர், பிச்சாடனர், விசுவநாதர், விசாலாட்சி அம்மன், வள்ளி - தெய்வானை சமேதராக மயில் மீது அமர்ந்து காட்சி தரும் ஆறுமுகப்பெருமான் ஆகியோர் சன்னிதிகள் வரிசையாக உள்ளன.

    கிழக்கு நோக்கி உள்ள சிவபெருமானின் சன்னதியை ஒட்டி, இடதுபுறம் சவுந்தரநாயகி அம்பாள் சன்திதியும் இருக்கின்றது. குழந்தைப் பேறுக்காக இந்த அம்பாளை பிரார்த்தனை செய்வதால் பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இத்தலத்து இறைவனை அம்பிகையும், பிரம்மனும், சூரியனும் பூஜை செய்துள்ளனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக சன்னிதி உள்ளது. சுவாமி கோவிலில் பிரம்மா பூஜை செய்யும் சிற்பம், அஷ்ட நாகங்கள் வழிபடும் புடைப்புச் சிற்பம் போன்றவை எழிலுற விளங்குகின்றன.

    இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள இந்த ஆலயம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவிலின் துணைக்கோவிலாகவும் விளங்குகிறது. நீர் வளமும், நிலவளமும் மிக்க, எழில் சூழ்ந்த ஊரில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோவில், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் இருக்கும் அன்பில் என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது. லால்குடியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது. திருச்சியில் இருந்து பஸ்வசதி உள்ளது.
    Next Story
    ×