search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சரஸ்வதி தேவிக்குரிய வசந்த பஞ்சமி விரதம்
    X

    சரஸ்வதி தேவிக்குரிய வசந்த பஞ்சமி விரதம்

    வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த விரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    தமிழகத்தைப் பொறுத்தவரையில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மாகமாதத்தில் (ஜனவரி- பிப்ரவரி) வருகின்ற சுக்ல பட்ச (வளர்பிறை) பஞ்சமி திதி பசந்த் (வசந்த) பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதி தேவிக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப்புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவியைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது.  

    வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணா வாதினி, வாணி தையானி என்றும் போற்றப்படுகிறாள் சரஸ்வதிதேவி. நல்லொழுக்கம், அறிவு, ஞானம், இசை, அறிவு, வாக்கு வன்மை, கவித்திறன் போன்ற குணநலன்கள் மக்களுக்குக் கிட்ட இந்த நாளில் வட மாநிலத்தவர் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர்கூட இந்த வசந்த பஞ்சமி நாளில்தான் சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்து பதினாறு கலைகளைக் கற்றதாகக் கூறப்படுகிறது.

    தென்மாநிலங்களில் விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்குவது போன்று, மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாளன்றுதான் வித்யாரம்பம் துவக்கப்படுகிறது. இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக, பென்சில், பேனா, சிறிய இசைக் கருவிகள், தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர்.

    குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் எதிர்காலம் அமையும் என்று நம்பிக்கை. உதாரணமாக பேனாவை எடுத்தால் பெரிய அறிவாளியாக ஆவர் என்றும், சங்கீத உபகரணங்களை எடுத்தால் சங்கீத மேதையாவான் என்றும், தொழிற் கருவியினை எடுத்தால் தொழில் முனைவராக ஆவான் என்றும் நம்பப்படுகிறது.
     
    இந்த வசந்த பஞ்சமி நாளன்று பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் சிலை அல்லது படம் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. மஞ்சள் சாமந்தி மலர்கள் வட மாநிலங்களில் பூஜைக்கும், மலர் மாலைகளுக்கும் உரிய முக்கிய மலராகத் திகழ்கிறது. சரஸ்வதிதேவி சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்கப்படுகிறது. வீடுகளில் மக்களும் அன்று மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். பூஜையில் வைக்கும் விநாயகர் கூட மஞ்சள் பிள்ளையார்தான்! மஞ்சள் நிறச் சேலைகள், சல்வார் கமீஸ், துப்பட்டாக்கள், ஜரிகை மற்றும் கோட்டாவினால் அலங்கரிக்கப்பட்டு, பளிச்சென்று எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறம் கண்களைப் பறிக்கிறது.

    பஞ்சாப் மாநிலத்தில் மிகச்சிறப்பாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்தப் பருவத்தில் எங்கு பார்த்தாலும் கடுகுச் செடிகள் மஞ்சள் நிற மலர்களைப் பூத்துச் சொரிய, அதற்குப் பொருத்தமாக மக்கள் மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து பாங்க்ரா நடனம் ஆடுகின்றனர்.

    பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர்.

    "வசந்த பஞ்சமி' என்றாலே வட மாநிலங்களில் இது சரஸ்வதிதேவியை வழிபடும் நாள் என்பதோடு பங்குனி உத்திர நாளில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகின்ற வண்ணமயமான ஹோலிப் பண்டிகைக்குக் கட்டியம் கூறும் ஒரு இனிய விழாவாக இந்த பஞ்சமி விளங்குகிறது.
    Next Story
    ×