search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுகமான வாழ்வு அருளும் பொங்கல் வழிபாடும்.. விரத விதிமுறையும்..
    X

    சுகமான வாழ்வு அருளும் பொங்கல் வழிபாடும்.. விரத விதிமுறையும்..

    பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.
    பொங்கல் திருநாளான தை மாதத்தின் முதல் நாளில்தான், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பார். இதனால்தான் பொங்கல் திருநாளை, ‘மகரசங்கராந்தி’ என்றும் அழைப்பதுண்டு. மார்கழி மாதம் வரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தை மாதம் முதல் வடக்கு திசையை நோக்கி நகர்வார். இந்த காலத்தை ‘உத்திராயண புண்ணிய காலம்’ என்பார்கள். சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற காலமாக உத்திராயண காலம் உள்ளது. இது தேவர்களின் பகல் பொழுதாகும்.

    மருத நிலத்திற்கு உரிய தெய்வம் இந்திரன். வயலும், வயல் சார்ந்த இடத்தையே நாம் மருதநிலம் என்று அழைக்கிறோம். அந்த வயல் சார்ந்த பகுதியில் விளையும் பயிர்கள் செழிப்புற்று வளர தேவையான மழையைத் தருவது சூரியன். நிலத்தை உழுது பண்படுத்துவதற்கு பயன்படுபவை மாடுகள். ஆகையால்தான் இந்திரன், சூரியன், மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தை மாத தொடக்கத்தில் வரும் 3 நாட்களை, தமிழக மக்கள் திருநாளாக கொண்டாடுகிறார்கள்.

    பழைய கழிதலும், புதியன புகுதலுமே போகி. அதாவது, பழமையான தீமைகளை உள்ளத்தில் இருந்து அகற்றி விட்டு, புதிய நல்ல எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும். இந்திரனுக்கு ‘போகி’ என்று பெயர் உண்டு. இந்திரன் செய்த குற்றத்தை மன்னித்து அவரை பூஜிக்க வேண்டும் என கிருஷ்ணர் அருளினார். எனவேதான் பொங்கலுக்கு முன்தினம் இந்திரன் பெயரால் ‘போகி பண்டிகை’ கொண்டாடப்படுகிறது.

    தமிழர் திருநாளான பொங்கல் அன்று, சூரிய பகவானை, நாராயணராக கதி விரத வழிபாடு செய்யப்படுகிறது. இதுவே சூரிய நாராயண பூஜையாகும். பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.

    பொங்கல் வழிபாடும்.. விரத விதிமுறையும்..

    பொங்கல் திருநாளின் போது, சூரியன் உதிப்பதற்கு 5 நாளிகைக்கு முன்பாகவே எழுந்து விட வேண்டும். குளித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து முற்றத்தில் நீர் தெளித்து அரிசி மாவால் கோலம் போட வேண்டும். வீட்டு முற்றத்தில் ஒரு பகுதியை, பசுஞ்சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும். காவி நிறம் துர்க்கை தேவிக்கு உரியது. துன்பங்கள் விலகுவதுடன், மங்கள வாழ்வு மலரவும், வாழ்வில் இன்பம் நிலைத்திருப்பதற்காகவும் காவி பூசப்படுகிறது. பின்னர் அந்த இடத்தை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் பூக்களைக் கொண்டு அலங்கரிப்பதுடன், மஞ்சள் அல்லது சந்தனத்தில் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும்.

    அதன்பிறகு பூரண கும்பம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கள பொருட்களை வைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தொடர்ந்து விநாயகரை மனதில் நினைத்து, பின்னர் இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையில் மஞ்சள் இலை, மாவிலை கட்டி, பானையின் மேற்புறத்தில் திருநீறு குழைத்து பூசுவதுடன் சந்தனம், குங்குமத்தை திலகமாக இடுவதும் சிறப்பு தரும்.

    அத்துடன் பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்ட வேண்டும். பின்னர் கற்பூர தீபத்தினால் அடுப்பில் நெருப்பை பற்ற வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கிவரும் போது ‘பொங்கலோ, பொங்கல்’ என்று குரல் எழுப்ப வேண்டும்.

    பால் பொங்கியதும், பச்சரிசியை அள்ளி, சூரிய பகவானை வணங்கியபடி, பானையை மூன்று முறை சுற்றி, பானைக்குள் இட வேண்டும். பிறகு வெல்லம், கற்கண்டு, திராட்சை முதலியவற்றை இட வேண்டும். பொங்கல் தயாரானதும், 3 தலை வாழை இலையில் பொங்கலை வைத்து, பழங்கள மற்றும் கரும்பு படைத்து, தீபாராதனை காட்டி சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். கற்பூர தீபம் காட்டும் போது, குலதெய்வத்தையும், நம்முடைய முன்னோர்களையும் மனதில் நினைத்து வழிபடுவது சிறப்பான வாழ்வு தரும்.

    தவத்தில் சிறந்தவர்களான காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதீதிக்கும் விசுவான் முதலான 12 பேர் பிறந்தனர். அதீதி புத்திரர்கள் என்பதால், இவர்கள் பன்னிரண்டு பேரும் ஆதித்யர் என்று அழைக்கப்பட்டார்கள்.

    ஒவ்வொரு பூஜைக்கு முன்னரும், விக்னேஸ்வர பூஜை செய்வது அவசியம். புது மஞ்சளை அரைத்து அதனை பிள்ளையாராக பிடித்து வைக்க வேண்டும். மகர சங்கராந்தி அன்று சூரிய பகவானை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

    ராமபிரான், தினமும் சூரிய காயத்ரி மந்திரம், ஆதித்ய ஹிருத்ய ஸ்தோத்திரம் கூறி சூரிய பகவானை வழிபட்டார். அதன் பயனாக அவர் ராவணனை அழிக்கும் வல்லமை பெற்றார். இதே போல் மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் சூரிய வழிபாடு நடத்தியதன் பலனாக, வனவாசத்தின் போது அட்சயபாத்திரத்தை பெற்றனர். சூரிய வழிபாடு அனைத்து செல்வங்களையும் வழங்கும்.

    Next Story
    ×