search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெற்றி தரும் புரட்டாசி பவுர்ணமி விரதம்
    X

    வெற்றி தரும் புரட்டாசி பவுர்ணமி விரதம்

    புரட்டாசி பவுர்ணமி (15.10.2016) தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள்.
    புரட்டாசி மாதத்தில் நவராத்திரியில் அன்னை கொலு விருந்து 10-வது நாள் விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்தாள்-. அதனால் எழுந்த கோபத்தினால் அன்னை உக்கிரமாக இருந்தாள்.

    பவுர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர். அதன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பவுர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சி அளித்தாள். நவராத்திரி விரதமிருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.

    மகாளயபட்சம் நாளை ஆரம்பமாவதால் பித்ருக்கள் சந்திரனின் அமுத பானத்தைப் பருகத் தயாராக இருப்பார்கள். அத்துடன் தங்களின் சந்ததியினர் கொடுக்கும் தர்ப்பனங்களையும் ஏற்றுக் கொள்ள காத்திருப்பார்கள்.

    புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடைய அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா’ என்ற திருநாமம் உண்டு. ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும்.

    நடுநிசியான புரட்டாசி மாதத்தின் பவுர்ணமி என்பது அம்பிகையின் பிரகாசம் ஆகும். இந்தக் கோடி சந்திர பிரகாசத்தை சவுந்தர்ய லஹரியில் அம்பிகையின் சவுந்தர்யத்தை “உன்னுடைய புன்முறுவல் அமுதம் போன்றது. உன் முகமாகிய சந்திரனிடமிருந்து பெருகும் அந்த அமுதம் போன்ற நிலவுக் கதிர்களை உண்ணும் பறவைகளுக்கு அந்த அமுதத்தின் தித்திப்பு திகட்டவே அவற்றை அலகுகள் உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டன.

    ஆகையால் அப்பறவைகள் ருசி மாற்றம் வேண்டி புளிப்பில் ஆசை கொண்டு குளிர்ந்த கதிர்கள் கொண்ட சந்திரனின் நிலவாகிய அமுதப் பெருக்கைப் புளித்த கஞ்சு என்று எண்ணி வேண்டிய மட்டும் இரவு தோறும் நிறைய பருகுகின்றன” என்று ஜகத்குரு ஆதிசங்கரர் கூறியிருப்பதாக தெய்வத்தின் குரலில் மகா பெரியவர் குறிப்பிட்டுள்ளார்கள்.

    புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.

    இந்நாளில் விரதம் இருப்பவர்கள் இரவில் குறைவான எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும். இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும். இந்தச் சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும். இப்படிபட்டவர்களுக்கு நல்ல தேஜசும் நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியும் கிடைக்கும். இவர்கள் எந்த காரியத்தைத் தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும்.
    Next Story
    ×