search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வினை அகற்றும் விஜயதசமி விரதம்
    X

    வினை அகற்றும் விஜயதசமி விரதம்

    விஜயதசமி நாளில் விரதமிருந்து வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    மகிஷன் என்னும் அசுரன், பிரம்மதேவரை நோக்கி தவம் இருந்தான். இதையடுத்து அவன் முன் தோன்றினார் பிரம்மன். அவரிடம், அழிவில்லாத வரத்தைக் கேட்டான் மகிஷன். அதற்கு பிரம்மன் மறுக்கவே, பெண்ணால்தான் அழிவு வரவேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான்.

    பெண்கள் மென்மையானவர்கள். எனவே அவர்களால் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் மகிஷன் அந்த வரத்தைக் கேட்டுப் பெற்றிருந்தான். வரம் கிடைத்ததும் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். அவர்கள் விஷ்ணுவிடம் தங்கள் நிலையை எடுத்துரைத்தனர்.

    விஷ்ணுவோ, ‘மகிஷனுக்கு பெண்ணால்தான் ஆபத்து என்ற நிலை இருக்கிறது. எனவே பராசக்தியிடம் போய் வேண்டுங்கள்’ என்று அனுப்பிவைத்தார். இதையடுத்து அனைவரும் பராசக்தியை நோக்கி தவம் இருந்தனர். அவர்களுக்கு அன்னை காட்சி கொடுத்தாள். அவளிடம் தேவர்கள் தங்கள் துன்பத்தைக் கூறியதுடன், அவர்களுக்கு உதவும் பொருட்டு, அசுரனுடன் போருக்கு தயாரானாள் அம்பிகை.

    சிவபெருமான், அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணு பகவான் சக்கரத்தை கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.

    போர்க்களம் புகுந்ததும் தன் முன் நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது. அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி தன் வசப்படுத்த நினைத்தாள். ஆனால் அது முடியாமல் போனது. ஏனெனில் தீயவை எதுவும் நல்லதை விரும்பாது. என்ன செய்தாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். அதற்கு அழிவு மட்டுமே முடிவு என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10–ம் நாளில் மகிஷாசுரனை அழித்தாள். அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் இருந்துதான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது.

    எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அந்த வெற்றியை தந்தருளும் நாளாக விஜயதசமி தினம் திகழ்கிறது. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந் நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது அனைவரது நம்பிக்கை. படிப்பு மட்டுமில்லாமல் சுப விஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

    பொதுவாக கோவில்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை வலம் வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. 

    அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றின் கீழ் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் விரதமிருந்து வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    Next Story
    ×