search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறைஷிகளின் பகையும் போருக்கான ஆயத்தங்களும்
    X

    குறைஷிகளின் பகையும் போருக்கான ஆயத்தங்களும்

    எதிரிகளைப் பார்த்து பயந்துவிட்டதால் நாம் நம் நகரத்தைவிட்டு வெளியில் செல்லவில்லை என்று அவர்கள் நினைக்கக் கூடும். மறுக்காதீர்கள், அவர்களை எதிர்கொள்வோம், போர் புரிவோம்” என்று வீராவேசமாக நபித்தோழர்கள் பேசி நபிகளாரை மறுத்தனர்.
    நபி மூஸா(அலை) காலத்தில் சூன்யம் மக்களிடையே பிரபலமாக இருந்ததால் அல்லாஹ் சூனியக்காரர்களுக்குச் சவாலான அற்புதங்களைச் செய்து காட்டும் சிறப்பை மூஸா நபிக்கு அளித்தான். அதே போல நபி ஈஸா(அலை) காலத்தில் மருத்துவ அற்புதங்கள் மேலோங்கி இருந்ததால் ஈஸா நபியின் பிறப்பே மருத்துவ அற்புதங்களுக்குச் சவாலாக இருந்ததோடு, ஈஸா நபிக்கு நோய் தீர்க்கும் அற்புதங்களையும் அல்லாஹ் அருளியிருந்தான்.

    நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் கவிதைகளில் மக்கள் மயக்கம் கொண்டிருந்தனர். கவிஞர்களையும் இலக்கியவாதிகளையும் கொண்டாடினர். அதனாலேயே தமது இறைத்தூதர் ஓரிறைக் கொள்கையைப் பரப்பிட இலக்கிய நயம் பொருந்திய, கவிதை வடிவமுள்ள திருக்குர்ஆனை அக்காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள் வாயடைக்கும் வகையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளியிருந்தான்.

    கவியைக் கவியால்தான் வெல்ல முடியுமென்று தப்புக் கணக்குப் போட்ட ஸஃப்வான் இப்னு உமைய்யா பெரும் கவிஞரான அபூ அஸ்ஸாவின் உதவியை நாடினான். பத்ருப் போரில் பொருள் மற்றும் உயிர் சேதத்தை எதிர்கொண்ட குறைஷிகள் மீண்டும் ஒன்றுகூடி தமது பொருட்களையெல்லாம் செலவு செய்து போர் தொடுக்க மக்களை மனதளவில் தயார்படுத்த, அவர்களின் உள்ளுணர்வுகளைத் தட்டியெழுப்ப அபூ அஸ்ஸாவின் கவிதைகளைப் பயன்படுத்தி, குறைஷிகளை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினான். அபூ அஸ்ஸா பத்ருப் போரில் கலந்து கொண்டு நபி முஹம்மது(ஸல்) அவர்களால் மன்னித்து விடுதலை செய்யப்பட்டவன். இருப்பினும் அவனுக்குப் பொருளாசையைக் காட்டி கவி எழுத வைத்தான் ஸஃப்வான்.

    அபூ ஸுஃப்யானும் போருக்காக மக்களை ஆர்வமூட்ட மற்றொரு கவியான முஸாஃபிஃ இப்னு அப்து மனாஃப் என்பரை அழைத்து வந்தான். அவனையும் கவி பாடச் செய்து ஒருவழியாகக் குறைஷிகளின் கோபத்தைத் தூண்டி அவர்களின் பழைய விரோதத்தோடு சமீபத்திய தோல்வியும் சேர்ந்து கொண்டதால் வெகு விரைவிலேயே அவர்களால் படையைத் திரட்ட முடிந்தது. படை வீரர்களுடன் பல்லாயிரக்கணக்கான ஒட்டகங்கள், குதிரைகள் சேர்ந்தன. இப்படையின் பொதுத் தளபதி பொறுப்பை அபூ ஸுஃப்யான் இப்னு ஹர்ஃபும், குதிரைப் படைக்குத் தலைவராகக் காலித் பின் வலீதும் பொறுப்பேற்றனர். எல்லோரும் மக்காவை விட்டுப் புறப்பட்டனர்.



    குறைஷிகளின் திட்டம் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது. உடனே தம் தோழர்களிலுள்ள தளபதிகளிடம் உரையாடினார்கள். துரித நடவடிக்கையெடுக்கப்பட்டு மதீனாவைச் சுற்றி ரோந்து படைகளை நிறுவினர். எந்நேரமும் ஆயுதங்களை ஏந்தியவர்களாக, பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    மக்கா படையினர் உஹுத் மலையின் அருகில் ‘அய்னைன்’ என்ற இடத்தில் தங்கினர். மக்காவினரின் நடவடிக்கைகளை மதீனாவில் இருந்தபடியே நபிகளார் தெரிந்து கொண்டு அதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்தார்கள். அப்போது நபி முஹம்மது (ஸல்) கனவு கண்டதை பற்றித் தோழர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். “நான் மக்காவைத் துறந்து அங்கிருந்த பேரீச்சந்தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கண்டேன்.

    அதுதான் மதீனா. என் வாள் ஒன்றை அசைக்க அதன் முனை உடைந்து விடுவதாகக் கண்டேன். சில காளை மாடுகள் அறுக்கப்படுவதுபோல் கண்டேன்" என்றார்கள். அதன் விளக்கம் அவர்களின் உள்மனதிற்குத் தெரிந்ததால் நபிகளார் தம் தோழர்களிடம் “மதீனாவிற்குள் இருந்து கொண்டே நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம். மதீனாவை விட்டு நாம் வெளியேறாமல் இருந்துவிடுவோம்.

    மக்கா படையினர் எவ்வளவு காலம்தான் முகாமில் தங்கியிருந்து நமக்காகக் காத்திருப்பார்கள். கட்டாயம் திரும்பச் சென்றுவிடுவார்கள். அல்லது அவர்கள் மதீனாவிற்குள் நுழைய முயன்றால், நமது தெரு முனையிலிருந்தே அவர்களை எதிர்க்கலாம்” என்று ஆலோசனை சொன்ன போது, பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் போனவர்கள் “நபிகளாரே! இப்படியான ஒரு நாளுக்காகத்தான் நாங்கள் காத்திருந்தோம்.

    அல்லாஹ்விடம் நாங்கள் பிரார்த்தனையும் செய்து வந்தோம். எதிரிகளைப் பார்த்து பயந்துவிட்டதால் நாம் நம் நகரத்தைவிட்டு வெளியில் செல்லவில்லை என்று அவர்கள் நினைக்கக் கூடும். மறுக்காதீர்கள், அவர்களை எதிர்கொள்வோம், போர் புரிவோம்” என்று வீராவேசமாக நபித்தோழர்கள் பேசி நபிகளாரை மறுத்தனர்.

    அர்ரஹீக் அல்மக்தூம், ஸஹீஹ் புகாரி 4:64:4081, 4:61:3622


    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×