search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறைஷிகளின் தீராப் பகையும் செயல்களும்
    X

    குறைஷிகளின் தீராப் பகையும் செயல்களும்

    யூதர்களும் குறைஷிகளும் முஸ்லிம்களுக்கு அளவிலா இன்னல்களைக் கொடுக்க முற்பட்டு, தங்களின் செல்வங்களையும், உயிர்களையும் இழந்து கொண்டிருந்தனர்.
    யூதர்களும்  குறைஷிகளும் முஸ்லிம்களுக்கு அளவிலா இன்னல்களைக் கொடுக்க முற்பட்டு, தங்களின் செல்வங்களையும், உயிர்களையும் இழந்து கொண்டிருந்தனர். இஸ்லாமை வேரோடு அழிக்க வேண்டுமென்று சரியான தருணத்திற்காகக் குறைஷிகள் காத்திருந்தனர். மிகப் பெரிய அளவில் முஸ்லிம்கள் மீது போர் தொடுத்து தங்களது மதிப்பையும் மரியாதையும் திரும்பப் பெற வேண்டும் என்ற வெறி அவர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

    அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிரியான கஅப் இப்னு அஷ்ரப் என்பவன் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வெறுக்கத்தக்க செயல்களான நபித்தோழர்களின் வீட்டுப் பெண்களைத் தனது கவியில் இழிவுபடுத்திப் பழித்துப் பாடுவது, முஸ்லிம்கள் மீது வெறுப்பு கொண்டவனான அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இன்னல்களைத் தொடர்ந்து செய்வது என்று இருந்தான்.

    அபூ ஸுஃப்யானுடன் சேர்ந்து கொண்டு “நீங்களே சிறந்தவர்கள், நீங்கள்தான் நேர்வழி பெற்றவர்கள்” என்று கஅப் புகழ்ந்தார். அப்போது அல்லாஹ் அருளிய இறைவசனமானது “நபியே, வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்புகின்றனர், ‘இவர்கள்தாம் இறைநம்பிக்கையாளர்களைவிட மிக நேரான பாதையில் இருக்கின்றனர்’ என்றும் பொய்யாக நிராகரிப்பவர்களைக் கூறுகின்றனர். இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.”



    அப்படி சபிக்கப்பட்ட அல்லாஹ்வின் எதிரியான கஅப்பைக் கொலை செய்ய முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) என்பவர் திட்டம் தீட்டி, அவனிடம் சில உணவுப் பொருட்களைக் கடனாகக் கேட்டார்கள். “அடமானம் வைக்காமல் எப்படித் தருவது? உங்கள் வீட்டுப் பெண்களை என்னிடம் அடகு வையுங்கள்” என்று கூசாமல் கேட்டான். கோபத்தை அடக்கியவராக முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), “அரபிகளிலேயே அழகு மிக்கவனான உன்னிடம் எப்படி எங்கள் பெண்களை விட்டுச் செல்வது என்று புத்திசாலித்தனமாகத் தட்டிக் கழித்தார். கஅபும் விடாமல் ‘உங்கள் குழந்தைகளை என்னிடம் அடகு வைக்க முடியுமா?” என்றான்.

    அதற்கும் அவர், 'நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகளை அடகு வைக்க முடியும்? அப்படி அடகு வைத்தால் 'உணவுக்காக அடகு வைக்கப்பட்டவன்தானே இவன்' என்று அவர்களை மற்றவர்கள் இழிவாகப் பேசுவார்கள் அதனால், நாங்கள் உன்னிடம் எங்கள் ஆயுதங்களை அடகு வைக்கிறோம்' என்று கூறினார்கள். அவனும் அதற்குச் சம்மதிக்க, பின்னர் வருவதாக வாக்களித்துச் சென்று. பிறகு ஆயுதத்துடன் வந்து அதை அடகு வைக்கிற சாக்கில் அவனைக் கொன்றுவிட்டார்கள்.

    கஅப் கொல்லப்பட்டதை அறிந்த குறைஷிகள் மேலும் கொதித்து எழுந்தனர்.

    “நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருட்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்யச் செலவு செய்கின்றனர். அவர்கள் மேன்மேலும் இவ்வாறே செலவு செய்யும்படி நேர்ந்து, முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள். இத்தகைய நிராகரிப்பவர்கள் மறுமையில் நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள்” என்ற இறைவசனத்திற்கேற்ப குறைஷிகள் தங்களிடமுள்ள பொருட்களையெல்லாம் முஸ்லிம்களை எதிர்க்க, போரிட செலவு செய்யத் துணிந்தனர்.

    திருக்குர்ஆன் 4:51-52, 8:36, ஸஹீஹ் புகாரி 2:48:2510

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×