search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பத்ரு போருக்கான முன்னேற்பாடுகள்
    X

    பத்ரு போருக்கான முன்னேற்பாடுகள்

    மதீனா படையின் ஒற்றர்கள் மூலம் குறைஷிகளின் படையைப் பற்றி அறிந்த நபி முஹம்மது (ஸல்), தம் படையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று திரும்பிவிடவில்லை.
    மக்காவாசிகளுக்குப் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பாக முஸ்லிம்கள் பத்ர் பள்ளத்தாக்கிற்குப் புறப்பட்டனர். அதே சமயம் சிரியாவிலிருந்து திரும்பி மக்காவிற்குப் போகும் வழியில் நபி முஹம்மது (ஸல்) மற்றும் அவர்களது தோழர்கள் குறைஷிகளுக்குப் பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்துவார்கள் என்று புரிந்து கொண்டு மக்காவிலிருந்து ஆயுதம் ஏந்திய படையினர் 1000-க்கும் மேற்பட்டவர்கள் போருக்கு வெறியுடன் தயாராக வந்தனர்.

    வியாபாரக் கூட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த அபூஸுஃப்யான், மதீனாவாசிகள் வந்த வழித்தடத்தைக் கண்டறிந்து, தனது சாமர்த்தியதால் மதீனாவின் படையிடம் சிக்காமல் தப்பி வேறு வழியாகத் தனது கூட்டத்தைக் காப்பாற்றிக் கொண்டு சென்றுவிட்டு, வியாபார பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் தகவலையும், அவர்கள் பத்ர் பள்ளத்தாக்கிற்கு வரவேண்டாமென்றும் குறைஷிப் படையினருக்கு செய்தி அனுப்பினார்.

    குறைஷிகள் அனைவரும் திரும்பிவிடலாம் என்று எண்ணினர். ஆனால் மதீனாவாசிகள் குறைஷியின் படையைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதற்காகவே பத்ருக்குச் செல்வதில் அபூஜஹ்ல் திட்டவட்டமாக இருந்தான். கிட்டத்தட்ட 1300 பேர் கொண்ட படையில் அக்னஸ் இப்னு ஷரீகின் ஆலோசனையின் பேரில் ஜுஹ்ரா கிளையினர் மட்டும் பத்ருக்குச் செல்லாமல் மக்காவிற்குத் திரும்பி விட்டனர்.

    இதற்கிடையில் மதீனா படையின் ஒற்றர்கள் மூலம் குறைஷிகளின் படையைப் பற்றி அறிந்த நபி முஹம்மது (ஸல்), தம் படையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று திரும்பிவிடவில்லை. முஸ்லிம்கள் சண்டையிடாமல் தங்களின் ஊருக்குத் திரும்பிவிட்டாலும் மக்காவாசிகள் மதீனாவை நோக்கிப் படையெடுத்து வரமாட்டார்கள் என்பது நிச்சயமில்லை என்பதாலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, அந்தச் சூழல் குறித்துப் படை தளபதிகளுடனும், படையினருடனும் ஆலோசனை நடத்தினார்கள்.

    அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), ஸஅது இப்னு முஆது மற்றும் மிக்தாத் (ரலி) வீர உரையாற்றினர், படையின் தளபதிகளும் ஒரு சிலரையும் தவிர மொத்தப் படையினரும் மிகத்துணிவுடன் போருக்கு முன்னேற ஒப்புக் கொண்டனர். வழிப்போக்கர்களின் மூலம் குறைஷிகளின் படையிருக்கும் இடம் குறித்தும், அவர்களின் தயாரிப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டனர்.

    முஸ்லிம்களில் ஒரு படை வீரரின் ஆலோசனைப்படி, குறைஷிகளுக்கு மிக அருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்று அங்குள்ள சின்ன நீர்நிலைகளை அழித்து, ஒரேயொரு நீர் தடாகத்தை மட்டும் ஏற்படுத்தி, அதை தண்ணீரால் நிரப்பிப் போர் நடக்கும் போது அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் நிலையைத் தயார்படுத்தினர். மேலும், ஸஅது(ரலி) அவர்களின் ஆலோசனையின்படி போர் மைதானத்தின் வடக்கிழக்கில் உயரமான ஒரு திட்டின் மீது பரண் வீட்டைக் கட்டினர். அதில் நபி முஹம்மது (ஸல்) இருந்து கொண்டு போர் மைதானத்தைப் பார்க்கும்படியாக அமைத்தனர்.

    மறுநாள் பத்ர் போர் நடக்குமென்று நபிகளார் உறுதியாக இருந்தார்கள். நபி (ஸல்) ஒரு மரத்தருகில் தொழுதவர்களாக இரவைக் கழித்தார்கள். முஸ்லிம்களும் மிகுந்த மன அமைதியுடன் மறுதினம் காலையில் தங்கள் இறைவனின் நற்செய்திகளைக் கண்கூடாகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இரவைக் கழித்தார்கள்.

    ”நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்” என்ற திருக்குர்ஆனின் வசனம் அருளப்பட்டது.

    அர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 8:11

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×