search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்
    X

    அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்

    மக்காவாசிகளுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்திவிட்டால் அத்தோடு குறைஷிகள் முஸ்லிம்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று முஸ்லிம்கள் நம்பினர்.
    மக்காவாசிகளுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்திவிட்டால் அத்தோடு குறைஷிகள் முஸ்லிம்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று முஸ்லிம்கள் நம்பினர்.

    ஷாமிலிருந்து மக்காவிற்குத் திரும்பும் வியாபாரக் கூட்டத்தைப் பிடிக்க வேண்டுமென்று முஸ்லிம்கள் புறப்பட்டனர். கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கம் இருந்ததே தவிர அவர்கள் அதனைப் பெரும் போராகக் கருதவில்லை, அதனால் நபி முஹம்மது (ஸல்) எவரையும் அதில் கலந்து கொள்ளக் கட்டாயப்படுத்தவில்லை.

    மிகப் பெரிய வியாபாரக் கூட்டத்தைக் கைப்பற்ற பெரிய தயாரிப்புகளெல்லாம் இல்லாமல் வெறும் 300 அல்லது அதைவிடக் கொஞ்சம் அதிகமானோர் மட்டுமே, எந்தச் சலனமும் இல்லாமல் மதீனாவிலிருந்து வெளியேறினர். ஆனால் அந்தச் சிறிய கூட்டத்திற்கும் நபிகளார் தளபதியாக இருந்து, இரண்டு அணியாகப் பிரித்து அதற்குத் தலைமைப் பொறுப்பைத் தகுந்தவர்களுக்குத் தந்து, படையின் கொடியைப் பறக்கவிட்டு, அவர்களிடமிருந்த இரண்டு குதிரைகள், எழுபது ஒட்டகங்களில் மாறிமாறி பயணம் செய்து பத்ர் பள்ளத்தாக்கை அடைவதை திட்டமாகக் கொண்டிருந்தனர். அந்த இடத்தை முஸ்லிம் படையினர் நெருங்கும் முன்பு வியாபாரக் கூட்டத்தின் நிலவரத்தை ரகசியமாகத் தெரிந்து செய்தி அனுப்ப இருவரை இவர்களுக்கு முன்பே அங்கு அனுப்பி வைத்தனர்.

    அதே போல வியாபாரக் கூட்டத்தின் பொறுப்பாளர் அபூஸுஃப்யானும், மக்காவிற்குச் செல்லும் பாதையில் தடங்கலிருக்கும் என்று மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாவலர்களுடன் சென்றாலும், அவரும் உளவு பார்க்க ஆட்களை அனுப்பியிருந்தார். அப்போது அபூஸுஃப்யானுக்கு, முஸ்லிம் படையினருடன் முஹம்மது (ஸல்) வியாபாரக் கூட்டத்தைக்கைப்பற்ற வருகிறார் என்ற செய்தி எட்டியது. உடனே அவர் மக்காவிற்கு ஓர் ஆளை அனுப்பி, குறைஷிகளிடம் தங்களின் வியாபாரக் கூட்டத்தைக் காப்பாற்றிக் கொள்ள விரைந்து வருமாறு பணித்தார். ஆனால் அபூஸுஃப்யான் அனுப்பியவர் தமது சட்டையைக் கிழித்துக் கொண்டு, ஒட்டகத்தின் மீது ஏறி நின்று “முஹம்மது நமது செல்வங்களைச் சூறையாடப் பார்க்கிறார், திரண்டு வந்து காப்பாற்றுங்கள்” என்று பீதியைக் கிளப்பிவிட்டார்.

    இதைக் கேட்டு ஆத்திரமடைந்த குறைஷிகள் திரளாகக் கிளம்பினர். கிட்டத்தட்ட 1300 வீரர்கள், எண்ணில் அடங்காத அளவிற்கு ஒட்டகங்கள், 100-க்கும் மேற்பட்ட குதிரைகள், கவச ஆடைகளுடன் வீரர்கள், படையின் பொதுத் தலைவராக அபூஜஹ்லை ஏற்று மாபெரும் போருக்கு புறப்படுவதுபோல் தயாரிப்புகளுடன் மக்காவின் வடப்புற வழியாகப் பயணித்தனர்.

    “பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி முஸ்லிம்களுக்கு எதிராக ‘பத்ர்’ போருக்குப் புறப்பட்டனர். மேலும் மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்கின்றனர். அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்” என்ற இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.

    அர்ரஹீக் அல்மக்தூம், அல்குர்ஆன் 8:47

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×