search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    யூதர்களின் இஸ்லாம் குறித்த அச்சத்திற்கான காரணம்
    X

    யூதர்களின் இஸ்லாம் குறித்த அச்சத்திற்கான காரணம்

    ஒற்றுமையைக் குலைத்து அதில் குளிர்காய்வதே யூதர்களின் வேலையாக இருந்ததால், அவர்களுக்கு இந்த மாற்றத்தில் கோபமும் வன்மமும் நிறைந்திருந்தது.
    முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு நாடு துறந்து வந்ததற்கான காரணம், அவர்களுக்கு மக்காவில் பாதுகாப்பின்மை மட்டுமல்ல அவர்களுக்குப் பாதுகாப்பான ஓர் இடத்தில் புதிய சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டுமென்பதற்காகவும்தான். இஸ்லாமிய அழைப்புப் பணி மதீனா மக்களை நல்வழிப்படுத்தியது. அவர்கள் தூய்மையாளர்களாக, ஒழுக்கசீலர்களாக மாறி ஒற்றுமையாக வாழ்ந்து திளைத்தார்கள். ஒற்றுமையைக் குலைத்து அதில் குளிர்காய்வதே யூதர்களின் வேலையாக இருந்ததால், அவர்களுக்கு இந்த மாற்றத்தில் கோபமும் வன்மமும் நிறைந்திருந்தது.

    மதீனாவிலிருந்த யூதர்கள் வெவ்வேறு அரபு குலத்தவர்களுக்கிடையில் சண்டையை ஏற்படுத்தி, போர்களைத் தூண்டி, அந்தப் போருக்குத் தேவையான பொருளாதாரத்தைக் கடனாகத் தந்து பயனடைந்து வந்தனர். அப்படியானவர்களுக்கு மதீனா மக்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களின் வியாபாரங்கள் நலிந்துவிடுமென்று பயந்ததோடு மட்டுமின்றி நபி முகமது (ஸல்) அவர்கள் தங்களது இனத்தில் அனுப்பப்படவில்லை என்பதாலும் யூதர்களுக்கு இஸ்லாமின் மீது கடும் கோபம் இருந்து வந்தது.

    அந்த நேரத்தில் யூதர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களுக்கு நபி முகம்மது மதீனாவுக்கு வந்த செய்தி எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விரைந்துவந்து, “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றைப் பற்றி ஓர் இறைத் தூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்.

    முதலாவதாக அவர் கேட்டது, இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது எது? என்று. அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து துரத்திக் கொண்டு வந்து மேற்குத் திசையில் ஒன்று திரட்டும்” என்றார்கள்.

    இரண்டாவதாகக் கேட்கப்பட்ட கேள்வியான, “சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?” என்பதற்கும் “சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்” என்று தாமதிக்காமல் நபிகளார் பதில் சொன்னார்கள்.

    அப்துல்லாஹ் இப்னு ஸலாம் , “குழந்தை தன் தாய் அல்லது தந்தையின் சாயலில் ஒத்திருப்பது எதனால்? சமயங்களில் குழந்தை தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?” என்று மூன்றாவது மற்றும் இறுதிக் கேள்வியைக் கேட்டார். புன்முறுவலுடன் நபிகளார் “சற்று முன்புதான் வானவர் ஜிப்ரீல் (அலை) என்னிடம் இவற்றைக் குறித்து விளக்கம் தெரிவித்தார்” என்று சொல்லி விட்டு, தொடர்ந்தார்கள். “குழந்தையிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின் சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் விந்து உயிரணு முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் கருமுட்டை உயிரணு முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது' என்று பதிலளித்தார்கள்.

    உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), “தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார். பிறகு, “இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றித் தவறாகப் பேசுவார்கள்” என்று கூறினார். அப்போது யூதர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் மறைந்து கொண்டார்கள்.

    இறைத்தூதர்(ஸல்) யூதர்களிடம், “உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?” என்று பொதுவாகக் கேட்பதுபோல் கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், மார்க்க அறிவு மிக்கவரும், மார்க்க அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்” என்று உற்சாகத்துடன் பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இப்னு ஸலாம் இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இறைவன் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!” என்று கூறினார்கள். உடனே வீட்டினுள் மறைந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வெளியே வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்” என்று கூறினார்கள்.

    உடனே யூதர்கள், “இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து இல்லாத குற்றங்களைச் சுமத்தி அவதூறு பேசி அங்கிருந்து வெளியேறினர்.

    எல்லாரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால், அவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால், விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டால் யூதர்களின் பொருளாதாரத்தின் அடைப்படையான வட்டித் தொழிலின் மூலம் அவர்களிடமிருந்து அபகரித்த சொத்துக்களை மீட்டுக் கொள்வார்கள் என்று அஞ்சினர்.

    ஸஹீஹ் புகாரி 4:60:3329

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×