search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெற்றோர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும்
    X

    பெற்றோர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும்

    பெற்றோரைப் பேணுவதன் மூலம் இவ்வுலகில் உறவுகளையும், நன்மைகளையும் பெற்றுக்கொள்ளலாம். மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்ளலாம்.
    மனிதன் வாழ தகுதியானதாக பூமியை இறைவன் படைத்தான். வெப்பத்திற்காகவும் ஒளிக்காகவும் சூரியனைப் படைத்தான். பூமி உயிர் பெற்று மனிதன் வாழத்தேவையான அனைத்தையும் பெற மழையைத் தேர்ந்தெடுத்தான்.

    மனிதன் பூமியில் வாழ எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்த இறைவன், தன் மாபெரும் கருணையினால் மனிதனுக்கு பாச உணர்வும், இரக்க உணர்வும் மிகுந்த பெற்றோர்களைக் கொடுத்தான். அதிலும் குறிப்பாக அன்பு, இரக்கம், கருணை, பாசம், தியாகம் என்று அனைத்துக் குணங்களையும் ஒருங்கே தன்னகத்தே கொண்ட தாயை உலகுக்கு அளித்து பெருமைப்படுத்தினான்.

    தாய் தனது குழந்தையை ஏறக்குறைய பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, பல்வேறு இன்னல்களைச் சகித்துக் கொள்கிறாள். சுமப்பதைக்கூட சுகமாகவும், இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும் ஏற்றுக்கொள்கிறாள்.

    அல்லாஹ் கூறுகின்றான்: “நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி உபதேசித்தோம். அவனுடைய தாய் பலவீனத்தின் மீது பல வீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள்”. (திருக்குர்ஆன்-31:14)

    சிரமத்தோடு குழந்தையைச் சுமக்கும் தாய், தான் விரும்பி உண்ணும் உணவைக் கொண்டு தன் குழந்தைக்கு தீங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த உணவுகளைத் தவிர்த்து விடுவாள். தான் நினைத்தபடி உறங்கினால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி தூக்கத்திலும் குழந்தை பாதிக்காமல் பார்த்துக் கொள்வாள்.

    தன் குழந்தைக்காக உணவு, உறக்கம் என அனைத்தையும் மாற்றிக்கொள்வாள். இவ்வளவு இரக்கத்தையும், அன்பையும், தியாகத்தையும் வேறு எவராலும் வழங்க முடியாத உன்னத உறவாக ‘தாய்’ இருக்கிறாள்.

    “தன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்றும், பெற்றோர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்துள்ளான்” (திருக்குர்ஆன்-17:23).

    இதில் ‘இறைவன் ஒருவனே’ என்னும் ஏகத்துவத்திற்கு அடுத்தபடியாகச் சொல்லப்படும் கட்டளை, பெற்றோர்களுக்கு மனிதர்கள் கொடுக்க வேண்டிய கண்ணியம். மேலும் தந்தையை விட தாய்க்கு சேவை செய்வதில் இஸ்லாம் அதிக கவனம் செலுத்துகிறது.

    அல்லாஹ் கூறுகின்றான்: “மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும், அவனுக்கு பால்குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும்” (திருக்குர்ஆன்-46:15).

    தன் ரத்தத்தையே பாலாக குழந்தைக்கு ஊட்டுவதாலும், தந்தையை விட குழந்தைக்கு நெருக்கமாக இருப்பதாலும் அதிக உரிமை பெற்றவளாக தாய் இருக்கிறாள்.

    ஒரு தோழர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு?’ என்று கேட்டார். அதற்கு நபிகளார், ‘உமது தாய்க்கு’ என்றார்கள். ‘அடுத்த தகுதி யாருக்கு?’ என்றார், அந்தத் தோழர். நபி (ஸல்) அவர்கள் மீண்டும், ‘உமது தாய்க்கு’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என்று மூன்றாம் முறையும் கேட்டார்கள். ‘உமது தாய்க்கு’ என்பதே நபிகளாரின் பதில். மறுபடியும் அந்தத் தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என்று கேட்க, அண்ணல் நபி அவர்கள், ‘உமது தந்தைக்கு’ என்றார்கள். (அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்)

    “தாயாருக்குச் சேவை செய்வதை உமது கடமை ஆக்கிக் கொள்ளும்”, “தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்ற நபிகளாரின் வாசகங்கள் தாயின் மேன்மையை பறை சாற்றும் சொற்களாகும்.

    ஆனால் நம்மில் பலர் வளர்ந்து பெரியவன் ஆனதும், தாயை இழிவுபடுத்தியும், அதிகாரத் தோரணையுடனும் நடந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் வார்த்தைகளால் நோவினை செய்வதோடு மட்டுமல்லாமல், உறவைத் துண்டித்தும் வாழ்கிறார்கள்.

    தன் தேவைகளை தான் சுயமாக நிறைவேற்றிக் கொள்ள சக்தியற்றிருந்த அந்தக் குழந்தைப் பருவத்தில், தன்னுடைய தாயார் தன் மீது பாசத்தோடும், இரக்கத்தோடும் நடந்து கொண்டதை மறந்து விடுகிறார்கள்.

    கடுமையான பசியுடன் இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு தாய், ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தார். அவரிடம் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தார், ஆயிஷா (ரலி) அவர்கள்.

    அதைப் பெற்றுக் கொண்ட அந்தப் பெண், இரு குழந்தைகளுக்கும் இரண்டு பழங்களைக் கொடுத்து விட்டு ஒன்றைத் தான் சாப்பிட எடுத்தார். பசியோடு இருந்ததால் இரு குழந்தைகளும் வேகமாக பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு, தாயின் கையில் இருந்த பழத்தை நோக்கின. உடனே அந்தத் தாய், அந்தப் பழத்தை இரண்டாகப் பிரித்து, இரு குழந்தைகளுக்கும் வழங்கி மகிழ்ந்தாள்.

    இந்தச் செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள், நபிகளாரிடம் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அந்தத் தாய் தன் இரு குழந்தைகள் மீது காட்டிய இரக்கத்தால், அல்லாஹ் அந்தப் பெண் மீது இரக்கம் காட்டி விட்டான்’ என்றார்கள்.

    ‘நீ எனக்கு நன்றி செலுத்து; உன் தாய், தந்தைக்கும் நன்றி செலுத்து’ என்கிறது, திருமறை குர்ஆன். குழந்தைகள் மீது தாய் செலுத்தும் பாசம் அளவில்லாதது; நிகரற்றது.

    “அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகிறான். பெற்றோருக்கு மாறு செய்வதை மன்னிப்பதில்லை. அதற்கான தண்டனையை உலகிலேயே தந்து விடுவான்” என்று நபிகளார் கூறினார்கள். (ஆதாரம்: மிஷ்காத்)

    “பெற்றோரில் ஒருவரோ, இருவருமோ முதுமை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை ‘சீ’ என்றுகூட கூறாதீர். அவர்களைக் கடிந்து பேசாதீர். மேலும் அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக” என்று திருமறையில் (17: 23) இறைவன் கூறுகின்றான்.

    பெற்றோரோடு நல்லுணர்வைப் பேணும் மனிதனுக்கு, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் நன்மை எழுதப்படுகிறது. பெற்றோரைப் பேணுவதன் மூலம் இவ்வுலகில் உறவுகளையும், நன்மைகளையும் பெற்றுக்கொள்ளலாம். மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்ளலாம்.

    - ஆலிமா ஏ.ஆர்.கமருன்னிசா ஜாபர்அலி,

    கோவை.
    Next Story
    ×