search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாழ்வில் வெற்றிபெற திட்டமிடல் அவசியம்
    X

    வாழ்வில் வெற்றிபெற திட்டமிடல் அவசியம்

    நாம் நமது அன்றாடப் பணிகளை செவ்வனே திட்டமிட்டு அமைத்துக்கொண்டால் நம் வாழ்வும் நிச்சயம் வளமாய், நலமாய் இருக்கும் என்பது திண்ணம்.
    ‘திட்டமிட்ட வாழ்க்கையே தெவிட்டாத இன்பம்’ என்பது அனுபவ மொழி. நாம் நமது அன்றாடப் பணிகளை செவ்வனே திட்டமிட்டு அமைத்துக்கொண்டால் நம் வாழ்வும் நிச்சயம் வளமாய், நலமாய் இருக்கும் என்பது திண்ணம். நாம் நமது செயல்பாடுகளை திட்டமிட்டு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

    நபிகள் நாயகம் தமது எந்த ஒரு பணியையும் திட்டமிட்டு செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்.

    ‘(நபியே) எல்லாக் காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (எதாவது செய்ய) நீங்கள் முடிவு செய்தால், அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள்! ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கிறான்’. (திருக்குர்ஆன் 3:159)

    நாம் எப்படி வாழவேண்டும் என்பதை நபியின் வழியாக இந்த வசனம் நமக்கு கற்றுக்கொடுக்கிறதல்லவா?

    ஆலோசனை என்பதும், திட்டம் என்பதும் ஒன்றுதான். இதை அரபி மொழியில் ‘மசூரா’ என்று கூறுகிறோம். எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கி வைப்பது தான் நமது தொடக்கப்பணியே தவிர அதைமுழுமையாக முடித்து வைப்பது என்பது இறைவனின் முடிவாகும். எனவே நாம் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்பது தான் இறைவனின் இனியதொரு நிறைவான திட்டம்.

    ஆதிமனிதர் ஆதம் முதல் இறுதித்தூதர் முகமதுநபி வரை இவ்வுலகில் தோன்றிய இறைத் தூதர்கள் அனைவரும் தங்களது ஓரிறைக் கொள்கைச் செய்தியை நன்கு திட்டமிட்டுத்தான் மக்களிடையே பரப்பினார்கள். அதனால் தான் அவர்கள் வெகு எளிதில் வெற்றி பெற்றார்கள்.

    ‘(நம்பிக்கையாளர்கள்) அவர்கள் தங்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் ஆலோசனைக்குக் கொண்டு வருவார்கள்’ (திருக்குர்ஆன் 42:38).

    இவ்வாறு இறை வசனம் கூறுவதில் இருந்து ஆலோசனைத் திட்டத்தின் அவசியத்தை நாம் நன்கு அளவீடு செய்து கொள்ள முடியும். இன்றைக்கு நமது திட்டமிடல் எப்படியிருக்கிறது? எதையும் நாம் திட்டமிட்டுச் செய்கிறோமா? இல்லை நமது மனம் போன போக்கிலா?

    யோசித்துப் பார்க்கையில் நாம் முன்யோசனை இல்லாமல், திட்டமிடாமல் செய்து அல்லல்பட்டு, அனுபவப்பட்ட காரியங்கள் பல நம் வாழ்வில் நடந்திருக்கக்கூடும்.

    நபிகள் நாயகம் அன்றாடம் தங்களது வீட்டுத்தேவைகளை திட்டமிட்டுத் தான் செயல்படுத்துவார்கள் என நபியுடன் இருந்த தோழர்கள் பலர் கூறியுள்ளனர். அது மட்டுமல்ல, நபியவர்கள் தங்களது பயணம், வணிகம், கொடுக்கல், வாங்கல், சொற்பொழிவு, இஸ்லாமிய அழைப்புக் கடிதங்கள், வணக்க வழிபாடுகள், இறைதியானப் பயிற்சிகள் என எந்தவொன்றையும் நன்கு திட்டமிட்டுத்தான் செயல்படுத்தினார்கள்.

    எனவே நாமும் நமது அன்றாடப்பணிகள் எதுவாயினும் அவற்றை திட்டமிட்டுத்தான் செய்ய வேண்டும். அதில் தான் மனநிம்மதியும், மட்டற்ற மகிழ்ச்சியும் இருக்கிறது என்பது நாம் அனுப வித்துப்புரிய வேண்டிய ஒன்று.

    நபிகளாருக்கு மக்கா நகரில் ஓரிறைச் செய்திகளை பரப்ப முடியாத நிலை ஏற்பட்டபோது, அங்கிருந்து நானூறு மைல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு நகர்ந்து செல்ல அவர்கள் தீட்டியிருந்த அற்புதத்திட்டம் வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அப்படிச் செல்லும் போது தமது அருமை மருமகனாரிடம், தன்னிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த யூதர்களின் அமானிதப் பொருட்களை அவரவர்களிடம் உரியமுறையில் கொடுத்துவிட்டுத்தான் நீங்கள் மதீனா நகருக்கு வரவேண்டும் என கட்டளை பிறப்பித்தார்கள்.

    இக்கட்டான இச்சூழ்நிலையிலும், அவை எதிரி களின் பொருள்தானே என்று பாரபட்சம் பார்க்காமல் அதை ஒப்படைப்பதற்கான முழுஏற்பாட்டையும் திட்டமிட்டுச் செய்து கொடுத்துவிட்டுத்தான் சென்றார்கள் என்றால், அவர்களது திட்டமிடல் எந்த அளவுக்கு மிகத்துல்லியமாய் இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் நன்கு தெரிந்து கொள்ளமுடியும்.

    நாம் எதையும் சரியான முன்திட்டமின்றி செய்யும் போதுதான் வசமாய் மாட்டிக்கொள்கிறோம். இது ஒரு இறை விசுவாசிக்கு நல்லழகல்ல என்பதால் அவன் எந்தவொன்றையும் திட்டமிட்டுத்தான் செயல்படுத்திட வேண்டும் என நபிகளார் நமக்கு எச்சரிக்கிறார்கள்.

    ‘நீங்கள் நல்லது செய்தால் அது உங்களுக்குத்தான் நல்லது’ (17:07) என திருக்குர்ஆன் அழுத்தமாகக் கூறுகிறது.

    ‘எண்ணங்கள் சரியாக இருந்தால் எல்லாமே மிகச்சரியாக இருக்கும்’ என்பது நபிகளாரின் நன்மொழி. இதில் நமது அன்றாடத் திட்டங்களும் உள்ளடங்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை

    இன்றைக்கு நமது பல்வேறு திட்டங்கள் நிறைவேறாமல் போவதற்கு முழு முதற்காரணம் நமது நம்பிக்கையற்ற தீய எண்ணங்கள் தான் என்றால் அது மிகையல்ல. நமது திட்டங்களின் பின்புலத்தில் இறையச்சமும், நல்லெண்ணமும் இருப்பின் நிச்சயம் அவைநிறைவாக, வெகு விரைவாக நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.

    ஆனால் நாம் தான் எந்தவொரு நலத் திட்டங்களை தொடங்கும் போதும் மாறுபட்ட எண்ணத்துடன் தான் தொடங்குகிறோம். அதனாலேயே அவை வெற்றி இலக்கை எட்டாமலேயே துவண்டுபோய் தோல்விநிலை கண்டு நின்று விடுகின்றன.

    எனவே முதலில் நாம் நமது நல்லெண்ணங் களுக்கும் நற்திட்டமொன்றை வகுக்க வேண்டும். இல்லையெனில் நமது திட்டங்கள் யாவும் வெற்றி இலக்கை அடையாது வெற்றுத்திட்டங்களாகிப் போய்விடும்.

    திட்டங்கள் தீட்டுவது பெரிதல்ல. அவை அனைத்தும் வெற்றிபெறவேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை. அதற்கு நல்லெண்ணமும் வேண்டும். கூடவே நற்செயல் திட்டங்களும் வேண்டும்.

    வாருங்கள்! தூய திட்டங்களை ஆற்றுவோம்! தீய திட்டங்களை மாற்றுவோம்!

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
    Next Story
    ×