search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன்: நற்குணங்களின் தாயகம்
    X

    அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன்: நற்குணங்களின் தாயகம்

    குடும்பத் தலைவராக, போதகராக, போர்ப்படைத் தளபதியாக, அப்பழுக்கற்ற ஆட்சியாளராக, இறைவனின் இறுதித் தூதராக விளங்கிய நபிகளார், வாழ்வின் எல்லாத் துறைகளிலும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மீது அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள்.

    மக்களில் மிக உன்னதமான குணத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களிடம் எந்தக் கெட்ட குணமும் இருந்ததில்லை. அவர்கள் இயற்கையாகவோ செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவராக இருந்ததில்லை.

    “உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே” என்று அவர்கள் கூறுவார்கள். குழந்தைகள் முதல் அனைவருக்கும் அவர்களே முதலில் ஸலாம் கூறுவார்கள். பெரியவர் களுக்கு கண்ணியமும், சிறுவர்களுக்கு இரக்கமும் காட்டுவார்கள்.

    தேவையுடையோருக்கு உதவி செய்வார்கள். புதியவர்களுடன் நட்புடன் நடந்து கொள்வார்கள். தனது பணியாளரை ‘சீ’ என்ற சொல்லால்கூட சுட்டியதில்லை. ஒரு செயலைச் செய்ததற்காகவோ செய்யாமல் போனதற்காகவோ யாரையும் கண்டித்ததும் இல்லை; கடிந்து கொண்டதும் இல்லை.

    நபிகளார் தெள்ளத்தெளிவாக இலக்கிய நயத்துடன் பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு விஷயத்தைப் பேசு கிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாக கணக்கிட்டு) எண்ணக்கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். அந்த அளவுக்கு நிறுத்தி நிதானமாக பேசி வந்தார்கள். இதனால் மக்களில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள்.

    இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் அதில் நபிகளார் மிக எளிதானவற்றையே எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அது பாவமாக இருக்கக் கூடாது. அது பாவமானதாக இருந்தால் அதை விட்டு வெகுதூரம் சென்று விடுவார்கள்.

    நபிகளார் கணக்கிடமுடியாத அளவுக்கு தான, தர்மங்களை வழங்கி வந்தார்கள். வறுமைக்கு அஞ்சாமல், ஏழை எளியோருக்கும் தேவையுடையோருக்கும் செலவு செய்தார்கள். அவர்கள் மக்களில் மிகக் கொடைத் தன்மை உடையவர் களாக இருந்தார்கள்.

    நபிகளாரிடம் ஏதாவது ஒன்று கேட்கப்பட்டு, அவர்கள் அதை ‘இல்லை’ என்று சொன்னதில்லை. தன்னைப் பின்பற்றியவர்களை ‘தொண்டர்கள்’, ‘சீடர்கள்’ என்ற அடைமொழி களால் அழைக்காமல், ‘தோழர்கள்’ என்று வாஞ்சையோடு அழைத்தார்கள். அந்தத் தோழர்களுடன் அளப்பரிய நேசத்துடன் பழகுவார்கள்.

    அவர்களில் யாராவது மரணித்து விட்டால், அவர்களது ‘ஜனாஸா’க்களில் (இறுதி நிகழ்ச்சிகளில்) தவறாது பங்கேற்பார்கள். ஏழையை அவர்களது இல்லாமை காரணமாக இளக்காரமாகப் பார்க்க மாட்டார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாக்குறுதி கொடுத்தால் அதை மீற மாட்டார்கள். அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் அதை விரும்பினால் உண்பார்கள். இல்லையென்றால் விட்டு விடுவார்கள்.

    கல்வி, கண்ணியம், பொறுமை, சகிப்புத் தன்மை, வெட்கம், நம்பிக்கை அனைத்தும் நிறைந்ததாக நபிகளாரின் சபை இருந்தது. அங்கு உரத்த குரல்கள் ஒலிக்காது. கண்ணியத்திற்குப் பங்கம் வராது.

    நபிகளார் நன்மையானவற்றைத் தவிர வேறெதையும் பேச மாட்டார்கள். அவர்கள் பேசினால் சபையோர் அமைதி காப்பார்கள். நபிகளார் அமைதியானால் தோழர்கள் பேசுவார்கள். அப்போது தோழர்கள் பேசுவதற்குப் போட்டி போட மாட்டார்கள். யாராவது பேசத் தொடங்கினால் அவர் முடிக்கும் வரை அவருக்காக அமைதி காப்பார்கள். சபைகளில் கண்ணியத்திற்குரியவர்களாகக் காட்சியளிப்பார்கள்.

    தங்களது உடல் உறுப்புகளில் எதையும் வெளிக்காட்ட மாட்டார்கள். தேவையற்றதைப் பேச மாட்டார்கள். அதிகமதிகம் மவுனம் காப்பார்கள். அவர்களின் பேச்சு தெளிவானதாக இருக்கும். தேவையை விட அதிகமாகவோ குறைவானதாகவோ இருக்காது.

    சகித்துக் கொள்வதும், பொறுத்துப் போவதும், சக்தியிருந்து மன்னிப்பதும், இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக் கொள்வதும் நபிகளாருக்கு இறைவன் வழங்கிய இயற்கைப் பண்புகளாகும்.

    அவர்கள் வீரமும் ஈர நெஞ்சமும் கொண்டவர்கள். போர்க் களத்தில் மலை குலைந்தாலும், நிலைகுலையாதவர்களாக இருந்தார்கள். தடுமாற்றம் இல்லாமல், புறமுதுகு காட்டாமல் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள்.

    திரை மறைவில் உள்ள கன்னிப் பெண்களை விட அதிக நாணம் உள்ளவர்களாக நபிகளார் இருந்தார்கள். எவரது முகத்தையும் அவர்கள் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பார்வையைக் கீழ் நோக்கி வைத்திருப்பார்கள். வெட்கத்தினாலும் உயர் பண்பின் காரணத்தாலும் யாரையும் வெறுப்பூட்டும்படி பேச மாட்டார்கள்.

    ஒருவரைப் பற்றி விரும்பாத செய்தி கிடைத்தால், ‘அவர் ஏன் இவ்வாறு செய்கிறார்?’ என்று கேட்பார்கள். அவரது பெயரை குறிப்பிட்டு சங்கடப்படுத்த மாட்டார்கள்.

    உயர் பதவியில் இருப்போர் தனது குடும்ப உறுப்பினர் களுக்கும், உறவினர்களுக்கும் சலுகைகள் வழங்குவது என்பது காலங்காலமாக இருந்து வரும் நடைமுறையாகும். உயர் பதவியில் இருந்தாலும் பொது நிதியில் இருந்து ஒரு பேரீச்சம்பழத்தைக்கூட எடுக்கக் கூடாது என்ற கொள்கையில் நபிகளார் உறுதியாக இருந்தார்கள்.

    ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்த்தப்பட்ட ஜாதி, முஸ்லிம்-முஸ்லிம் அல்லாதோர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமநீதி வழங்கினார்கள். மொத்தத்தில் நபிகள் நாயகம், நற்குணத்தின் தாயகமாகவே திகழ்ந்தார்கள்.

    “அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக் கிறது” (திருக்குர்ஆன்-33:21) என்பது இறை வாக்கு.

    குடும்பத் தலைவராக, போதகராக, போர்ப்படைத் தளபதியாக, அப்பழுக்கற்ற ஆட்சியாளராக, இறைவனின் இறுதித் தூதராக விளங்கிய நபிகளார், வாழ்வின் எல்லாத் துறைகளிலும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.

    ‘குர்ஆன் கூறும் அனைத்துப் போதனைகளுக்கும் அவர்களது வாழ்க்கையே ஒரு சான்றாக இருந்தது’ என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை ஆகும்.

    Next Story
    ×