search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அறிவோம் இஸ்லாம்: நபிகளாரின் இறுதி நாட்கள்
    X

    அறிவோம் இஸ்லாம்: நபிகளாரின் இறுதி நாட்கள்

    ஹஜ் கடமையை நிறைவேற்றிய பிறகு இந்த உலக வாழ்க்கையில் இருந்தும், அதில் வாழ்பவர்களிடம் இருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபிகளாரின் உள்ளத்தில் தோன்றின.
    ஹஜ் கடமையை நிறைவேற்றிய பிறகு இந்த உலக வாழ்க்கையில் இருந்தும், அதில் வாழ்பவர்களிடம் இருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபிகளாரின் உள்ளத்தில் தோன்றின.

    முகரம் முடிந்து ஸபர் மாதம் பிறந்தது. அந்த மாதத்தின் தொடக்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உஹத்’ என்ற இடத்திற்குச் சென்றார்கள்.

    உஹத் என்பது மதீனாவுக்கு வடக்கே மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு மலை. ஹிஜ்ரி 3-ம் ஆண்டு (கி.பி.625) ஷவ்வால் மாதத்தின் மத்தியில் முஸ்லிம் களுக்கும் இறை மறுப்பாளர்களுக்கும் இடையே நடந்த யுத்தம் ‘உஹத் போர்’ எனப்படுகிறது.

    உஹத் யுத்தம் நடந்த இடத்தில், அந்தப்போரில் இறந்தவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சித் தொழுதார்கள். நபிகளாரின் இந்தச் செயல், இருப்போருக்கும் இறந்தோருக்கும் விடை கூறுவது போல அமைந்தது.

    பின்பு பள்ளிவாசலுக்கு வந்து சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) ஏறி நின்று, “நான் உங்களுக்கு முன்பு செல்கிறேன். நான் உங்களுக்குச் சாட்சியாளன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தற்போது எனது நீர் தடாகத்தைப் பார்க்கிறேன். எனக்குப் பூமியில் உள்ள பொக்கிஷங்களின் சாவிகள் கொடுக்கப்பட்டன. எனக்குப் பின்பு நீங்கள் இணை வைப்பவர்களாக மாறி விடுவீர்கள் என்று நான் அஞ்சவில்லை. இந்த உலகத்திற்காக நீங்கள் சண்டையிட்டுக் கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்றார்கள்.

    ஹிஜ்ரி 11-ம் ஆண்டு ஸபர் மாதம் இறுதியில் ஒருநாள். இறந்த ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்து விட்டு திரும்பும் வழியில் நபிகளாருக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. உடல் சூடு அதிகமானது. தலையில் கட்டி இருந்த துணிக்கு மேல்புறத்திலும் வெளிப்பட்ட அனலை உடனிருப்போர் உணர முடிந்தது. நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே சில நாட்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

    மரணம் அடைவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு புதன்கிழமை அன்று, அவர்கள் உடல் நெருப்பாய் கொதித்தது. வலியும் அதிகமானது. அன்றைய தினம் நன்றாக குளித்தார்கள். இதனால் சூடு தணியக் கண்டார்கள். தலையில் தடிப்பான துணியைக் கட்டிக் கொண்டு போர்வையைப் போர்த்தியவர்களாகப் பள்ளிவாசல் சென்றார்கள். மேடையில் நின்று சொற்பொழிவு ஆற்றினார்கள். இதுவே அவர்கள் நிகழ்த்திய கடைசி சொற்பொழிவாகும்.

    “இந்த உலகில் உள்ளவற்றை உங்களுக்கு வழங்கட்டுமா? அல்லது மறுமையில் என்னிடம் உள்ளவற்றை உங்களுக்குத் தரட்டுமா? என்று ஓர் அடியாரிடம் இறைவன் கேட்டான். ஆனால் அந்த அடியாரோ மறுமையில் உள்ள இறைக் கொடைகளையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று நபிகளார் கூறினார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறைமுகமாக எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட நபித்தோழர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் அழத்தொடங்கினார்கள்.

    மேலும் நபிகளார், “தனது நட்பாலும் பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர் அபூபக்கர் ஆவார். என் இறைவனே! உன்னைத் தவிர மற்ற எவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்வதாக இருந்தால் அபூபக்கரை உற்ற நண்பனாக ஆக்கி இருப்பேன். இருந்த போதிலும் அவருடன் இஸ்லாமிய சகோதரத்துவமும் அதன் நேசமும் எனக்கு இருக்கிறது”.

    “மக்களே! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் தம் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். இதோ பாருங்கள், நீங்கள் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. நான் உங்களை அதனை விட்டும் தடுத்துச் செல்கின்றேன்” என்றார்கள்.

    மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு நோயின் கடுமை கொடுமையாக இருந்தபோதிலும், அந்தி நேரத் தொழுகை (மக்ரிப்) வரை அனைத்தையும் நபிகளாரே தொழ வைத்தார்கள். இரவில் நோயின் வேகம் அதிகமானது. இஷா (இரவு நேரத்தொழுகை) தொழுகையில் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் அபூபக்கரை தொழ வைக்கும்படி கூறினார்கள். அதில் இருந்து பதினேழு நேரத்தொழுகைகளை அபூபக்கர் மக்களுக்குத் தொழ வைத்தார்கள்.

    திங்கட்கிழமை அன்று அபூபக்கர் அவர்களைப் பின் தொடர்ந்து ‘சுபுஹு’ (அதிகாலைத் தொழுகை) தொழுகையை முஸ்லிம்கள் தொழுது கொண்டிருந்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களின் அறையின் திரையை நபிகளார் விலக்கி, பெருந்திரளான மக்கள் தொழுகையில் நிற்பதைக் கண்டு மகிழ்ச்சி கொண்டார்கள்.

    தொழ வைப்பதற்குத்தான் நபிகளார் வருகிறார்கள் என்று எண்ணிய அபூபக்கர், தொழ வைக்கும் இடத்தில் இருந்து சற்று பின்னால் வரிசையை நோக்கி நகர்ந்தார்கள். நபிகளார் வருகை அவர்களுக்கு ஆனந்தத்தை அளித்தது.

    ஆனால் நபிகளாரோ, “உங்கள் தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறி விட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இன்னொரு தொழுகை நேரம் நபிகளாருக்குக் கிடைக்கவில்லை.

    அன்றைய தினம் முற்பகலில் மகள் பாத்திமா (ரலி) அவர்களை வரவழைத்து நபிகளார் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு கட்டத்தில் பாத்திமா அழுதார்கள். மீண்டும் இன்னொரு செய்தியைக் கூறவே, பாத்திமா சிரித்தார்கள்.

    இதைப் பற்றி பின்னாளில் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:-

    “இந்த நிகழ்ச்சி பற்றி பின்பு ஒருநாள் பாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட அந்த (நோயின்) வலியால் நான் இறந்து விடுவேன் என்று இறைத்தூதர் கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தாரில் நான்தான் முதலில் அவர்களைப் பின்தொடர்ந்து (உலகைப் பிரிந்து) செல்ல இருப்பவள் என்ற செய்தியைக் கூறியபோது சிரித்தேன் என்று பாத்திமா பதில் அளித்தார்கள்”.

    பாத்திமா மைந்தன்
    Next Story
    ×