search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நபிகளாரின் விண்ணுலகப் பயணத்தில் விரிந்த காட்சிகள்
    X

    நபிகளாரின் விண்ணுலகப் பயணத்தில் விரிந்த காட்சிகள்

    நபி முஹம்மது (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான ‘சித்ரத்துல் முன்தஹா’ வரை நபிகளார் கொண்டு செல்லப்பட்டார்கள்.
    நபி முஹம்மது (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான ‘சித்ரத்துல் முன்தஹா’ வரை நபிகளார் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்த மரத்தின் வேர் பகுதியின் அருகேதான்,  பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் மனிதர்கள் உட்பட எல்லா உயிர்களின் செயல்கள் பற்றிய குறிப்புகளும்  சேர்க்கப்படுகிறது. இறைவனிடமிருந்து வரும் இறைக்கட்டளைகள் யாவும் அதே இடத்தில் வந்து சேர்கின்றன.

    அங்கே வானவர்கள் அதனைப் பெற்றுக் கொள்கின்றனர். ‘சித்ரத்துல் முன்தஹா’ எனும் அம்மரத்தை பிரமாண்டமான தங்கத்தாலான விட்டில் பூச்சிகள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. அங்கே நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மூன்று கட்டளைகள் வழங்கப்பட்டன. ஐந்து வேளை தொழுகைகள் மட்டுமல்லாது திருக்குர்ஆனின் ‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி மூன்று வசனங்களும், நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹீயின் அதாவது இறைச்செய்தியின் மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை வேதமாக அறிவிக்கச் செய்வானே தவிர நேரடியாகப் பேசுவதில்லை.  “கண் பார்வைகள் அவனை அடைய முடியாது.

    ஆனால் அவனோ எல்லாவற்றையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனும் ஆவான்” என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கேற்ப நபி முஹம்மது (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணத்தின்போது அல்லாஹ்வை நபிகளார் உள்ளத்தால் மட்டுமே உணர்ந்தார்கள். வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை அறுநூறு இறக்கைகள் கொண்ட வானவராக நிஜத் தோற்றத்தில் நபி முஹம்மது (ஸல்) பார்த்தார்கள்.

    விண்வெளிப் பயணத்திற்கு மறுநாள் காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து அவர்களைப் ‘பெரும் பொய்யர்’ என்றும் கூறினர். “உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்குப் பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர்.

    அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காட்சியளிக்கச் செய்தான். அதனைப் பார்த்தபடியே அதன் அடையாளங்களை விவரித்துக் கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தைப் பற்றியும், அது எப்போது மக்காவிற்குத் திரும்பி வரும் என்பதைப் பற்றியும், அந்தக் கூட்டத்திற்குச் சொந்தமான ஒட்டகமொன்று காணாமல்போனது குறித்தும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர்.

    மிஃராஜ் விண்வெளிப் பயணத்திற்கு மறுநாள் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்காக வானிலிருந்து இறங்கி வந்து வானவர் ஜிப்ரீல் (அலை) தலைமை ஏற்றுத் தொழுவித்தார்கள். நபிகளாருக்கு ஐந்து நேரத் தொழுகைகளையும் ஜிப்ரீல் (அலை) தலைமையேற்று அவர்களுக்குத் தொழும் முறையையும் கற்றுக் கொடுத்தார். தொழுகைக்கான நேரத்தையும், தொழும் முறையையும் ஜிப்ரீல் (அலை) காட்டிவிட்டு “இவ்வாறே நான் உங்களுக்குச் செய்து காட்டுமாறு பணிக்கப்பட்டேன்” என்று நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள்.

    ஸஹீஹ் முஸ்லிம் 5:1068, 1069, 1:279, 1:276, ஸஹீஹ் புகாரி 3:59:3232, 3235, திருக்குர்ஆன் 53:1-18, 6:103, 42:51

    - ஜெஸிலா பானு.

    Next Story
    ×