search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எல்லா நபிகளும் ஏற்றுக் கொண்ட எங்கள் நபி
    X

    எல்லா நபிகளும் ஏற்றுக் கொண்ட எங்கள் நபி

    நபிகளார் சந்தித்த நபிமார்களில் தாம் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய முகச்சாயலில் இருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) உணர்ந்தார்கள்.
    நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறையில்லமான கஅபாவின் அருகில் ஹத்தீமில் படுத்துக் கொண்டிருந்தபோது அவரிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) வந்து அவரது நெஞ்சை, காறை எலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளந்து நபிகளாரின் இதயத்தை வெளியில் எடுத்தார். தங்கத் தட்டு ஒன்று கொண்டு வரப்பட்டு அதில் நபிகளாரின் இதயம் ஸம்ஸம் தண்ணீரால் கழுவப்பட்டது. நபிகளாரின் இதயத்தில் இறை நம்பிக்கையும் ஞானமும் முழுமையாக நிரப்பப்பட்டது. பிறகு பழையபடியே மீண்டும் நபிகளாரின் இதயத்தை வைத்து மூடிவிட்டார் வானவர்.

    அங்கு, கோவேறு கழுதையைவிடச் சிறியதும் கழுதையைவிடப் பெரியதுமான வெள்ளை நிறத்தில் மின்னல் வேக வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதன் பெயர் ‘புராக்’. அந்தப் புராக் வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்குமளவிற்கு அதிவேகமானது. அந்த வாகனத்தில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள், பைத்துல் முகத்தஸிற்கு, (ஜெரூசலேம் இறை ஆலயத்திற்கு) அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

    இந்த நிகழ்வுதான் இஸ்லாத்தில் மிஹ்ராஜ் விண்பயணம் என்று சொல்லப்படுகிறது.

    அங்கிருந்து நபி முஹம்மது (ஸல்) அவர்களை முதல் வானத்திற்குக் கொண்டு சென்றார் வானவர் ஜிப்ரீல். முதல் வானத்தின் கதவைத் திறக்கும்படி ஜிப்ரீல் (அலை) சொல்ல, “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார்கள். “உங்களுடன் வந்திருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் (அலை), “முஹம்மத் (ஸல்)” என்று பதில் தந்ததற்கு “அவரை அழைத்து வரும்படி ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் (அலை), “ஆம்” என்றார்கள். அந்த வானத்தின் காவலர் கதவைத் திறந்து “உங்களது வருகை மிக நல்ல வருகை. உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று வாழ்த்தினார்.

    அந்த வானத்தில் இன்னும் மேலே சென்றபோது அங்கே ஒருவர் இருந்தார். அவரின் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தன்னுடைய வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார். தன்னுடைய இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். அவர் நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பார்த்ததும் “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று வரவேற்றார். “இதுதான் ஆதம் (அலை)” என்று அவரை அறிமுகப்படுத்தினார் ஜிப்ரீல் (அலை). அவருக்கு நபிகளார் சலாம் கூறினார்கள். “வலப்பக்கமும் இடப்பக்கமும் இருப்பது அவருடைய சந்ததிகள். வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரக வாசிகள். எனவேதான், வலப்பக்கம் சொர்க்கவாசிகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியால் சிரிக்கிறார். இடப்பக்கம் நரகவாசிகளான தம் மக்களைக் காணும்போது வேதனையில் அழுகிறார்” என்று ஜிப்ரீல் (அலை) விவரித்தார்.

    பிறகு நபி முஹம்மது (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் இன்னும் உயரத்திற்கு ஏறிச் சென்றார்கள். இரண்டாம் வானத்திற்கு வந்ததும், அங்கேயும் காவலாளிகள் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டுவிட்டு திறந்தனர். அங்கே நபி முஹம்மது (ஸல்) சந்தித்தது யஹ்யா (அலை) அவர்களையும் ஈசா (அலை) அவர்களையும். இப்படியாக ஒவ்வொரு வானத்திலும் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றிய நபிகளான யூசுப் (அலை), இத்ரீஸ் (அலை), ஹாரூன் (அலை) என்று எல்லோரையும் சந்தித்து 'சலாம்' சொல்லிவிட்டு மேலே உயரும்போது அவர்கள் சந்தித்தது மூஸா (அலை).

    மூஸா (அலை) அவர்களுக்குச் சலாம் சொல்லிவிட்டு அவர்களுடன் பேசுகிறார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். “தங்கள் அழுகைக்கு என்ன காரணம்?” என்று அவர்களிடம் நபி முஹம்மது (ஸல்) கேட்டார்கள். அதற்கு மூஸா (அலை), “என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள் என்பதால் அழுகிறேன்” என்று பதிலளித்தார்கள். அதுவொரு சந்தோஷமான அழுகை எனலாம்.

    பிறகு ஏழாவது வானத்திற்குச் சென்றார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். நபிகளார் சந்தித்த நபிமார்களில் தாம் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய முகச்சாயலில் இருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) உணர்ந்தார்கள்.

    ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

    ஸஹீஹ் புகாரி 1:8:349, 2:25:1636, 4:60:3342, 4:63:3887, 3:59:3207, 7:97:7517, ஸஹீஹ் முஸ்லிம் 1:259, 1:264

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×