search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீமைகளை நீக்கி நன்மைகளைச் செய்வோம்
    X

    தீமைகளை நீக்கி நன்மைகளைச் செய்வோம்

    அனைத்தும் மெய்யான ஹிஜ்ரத் என்பது நம்மிடமுள்ள, நம்மைச்சுற்றியுள்ள தீமைகளை விலக்கி நடப்பதில் தான் இருக்கிறது. வாருங்கள், நன்மைகளை அள்ளுவோம், தீமைகளைத் தள்ளுவோம்.
    ‘ஹிஜ்ரத்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘இடம்மாறுதல்’, ‘விட்டுவிடுதல்’, ‘வெறுத்துவிடுதல்’ என்று பொருள் பலவுண்டு. அரபுநாட்டில் தோன்றிய நபி அவர்கள் ‘இறைவன் ஒருவனே’ என்ற ஓரிறைக்கொள்கையைப் பின்பற்றி தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால் மக்கா நகர மக்கள் இதை ஏற்க மறுத்தனர். மேலும் முகமது நபி அவர்கள் இறைத் தூதரல்ல என்று மறுக்கவும், வெறுக்கவும் ஆரம்பித்தார்கள்.

    அப்போது, அல்லாஹ்வின் ஆணைப்படி மக்காவில் இருந்து ஐநூறு மைல்களுக்கு அப்பாலுள்ள மதீனா நகரை நோக்கி புறப்பட்டார்கள் நபியவர்கள். இப்புனிதம் மிகுந்த நகர்வுப்பயணம் தான் ‘ஹிஜ்ரத்’ (புலம் பெயர்ந்து செல்லல்) என்று அழைக்கப்படுகிறது.

    நபிகளாரின் பொற்காலத்தில் ஹிஜ்ரி உட்பட எவ் விதமான வருடக்கணக்கும் வழக்கத்தில் இருக்கவில்லை. முஹர்ரம், ஸஃபர் எனத்தொடங்கி துல்ஹஜ்ஜூ என முடியும் 12 அரபு மாதப்பெயர்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இதை இறை மறை வசனம் ஒன்று உறுதிப்படுத்திக்காட்டுகிறது இப்படி:

    ‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள் முஹர்ரம் 1, ரஜப்7, துல்கஅதா 11, துல் ஹஜ் 12) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே, அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்’. (திருக்குர்ஆன் 9:36)

    நபிகளார் காலத்திற்கு பின்னர் உமர் (ரலி) அவர் களின் உன்னதமான ஆட்சிகாலத்தில் கடிதங்கள் பல திசைகளில் இருந்து வருவதும், போவதுமாய் இருந்தன. அன்றொரு நாள் கூஃபா நகரின் ஆளுநர் அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்து கடிதம் ஒன்று வந்திருந்தது. அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது:

    ‘ஆண்டுக்கணக்கு என்று எதுவும் நம்மிடம் இல்லாமல் இருப்பதால், அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் எதுவும் அது எந்த வருடம் நிகழ்ந்தது என்று தெரியாமல் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. எனவே வெகுவிரைவாக தாங்கள் இதற்கொரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்’.

    இதன் அடிப்படையில் தான் ஆலோசனைக் கூட்டம் ஒன்று உமர் (ரலி) தலைமையில் நடைபெற்றது. அதில் மா நபியின் பிறந்த தினம், நபி மரணித்த தினம், நபி பட்டம் பெற்ற தினம், நபி ஹிஜ்ரத் செய்த தினம் என நபிகளாரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு திருப்புமுனை தினங்கள் இருந்தன. இதில் ஒன்றைத் தேர்வு செய்து அந்நாளிலிருந்து இஸ்லாமிய ஆண்டைத் தொடங்க முன் மொழியப்பட்டன. அவற்றில் அலி (ரலி) யின் கருத்தான ‘ஹிஜ்ரத் தினம்’ தேர்வாகி அன்று முதல் இந்த ‘ஹிஜ்ரத், ஹிஜ்ரி’ என்ற சொல் அனைவரின் உதடுகளிலும் உச்சரிப்புப் பெறத்தொடங்கிற்று.

    ஹிஜ்ரத் வரலாறு நீண்டது, நெடியது. ஆனால் நபிகளார் நமக்கு இன்னொரு ஹிஜ்ரத்தை அறிமுகம் செய்கிறார்கள்:

    ‘எவர் சிறிய, பெரிய பாவங்களை விட்டொழிக் கிறாரோ அவர்தான் மெய்யாலுமே ஹிஜ்ரத் செய்தவர் ஆவார்’ (நூல்: புகாரி)

    இன்றைக்கு நம்மிடையே மிகஅவசியமான ஒன்றும் இதுதானே. எங்கு திரும்பினாலும் பாவம், குற்றம், குறை, தீமை என தவறுகளின் பட்டியல் நீளுகிறது. இந்நிலை முதலில் மாற வேண்டாமா? அப்படியானால் நாம் செய்யவேண்டிய முதல் பணி, நமது பாவங்களை விட்டொழிக்க முயற்சிப்பது தான்.

    நபிகளார் நவின்றார்கள்: ‘உங்களில் எவர் ஒரு குறையை காண்கிறாரோ, முதலில் அவர் தமது கையால் அதை தடுக்கட்டும். இயலாவிட்டால், தமது நாவால் அதை தடுக்கட்டும். அதற்கும் இயலாவிட்டால், தமது மனதால் வருத்தப்படட்டும். இதுதான் இறைவிசுவாசத்தின் இறுதி நிலையாகும்’. (நூல்: முஸ்லிம்)

    தவறுகள் அவ்வப்போது உடனுக்குடன் களையப்படும் போதுதான் நன்மைக்கதவுகள் நமக்கும், நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கும் நன்கு விசாலமாகத் திறக்கும்.

    ‘மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றவர்கள்’ (திருக்குர்ஆன்: 3:104).

    வெற்றிக்கு வழி நன்மையை ஏவுவது மட்டுமல்ல, தீமையை தடுப்பதும் தான் என்கிறது இந்த இறை வசனம்.

    இதனால்தான் இன்னொரு வசனம் இப்படிப்பட்டவர்களை பாராட்டுகிறது இவ்வாறு:

    ‘மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்’. (3:110)

    நம்மில் சிலர் நன்மையைச் செய்வதும் இல்லை; தீமையைத் தடுப்பதும் இல்லை. இப்படிப்பட்டவர்கள் தான் மிகவும் அபாயத்திற்குரியவர்கள். இறைவனின் சாபத்திற்கு உரியவர்களும் இவர்களே. இதற்கான சான்று திருக்குர்ஆனிலும் உண்டு.

    தாவூத் நபி காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு ‘நீங்கள் சனிக்கிழமை மட்டும் மீன் பிடிக்க வேண்டாம்’ என்று இறைக்கட்டளை வந்தது. அதை குறுக்கு வழியில் சிலர் வரம்புமீறிய போது, அதைப்பார்த்த ஒருசிலர் அதை தடுக்க முன்வரவில்லை. அவர்கள் தான் அருவருப்பான குரங்குகளாக உருமாற்றப்பட்டார்கள் என்கிறது பின்வரும் இறைவசனம்:

    ‘(நபியே) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும். அவர்கள் (தடுக்கப்பட்ட) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்குமேலே தலைகளை வெளியாக்கி) கொண்டு வந்தன.

    ஆனால் சனிக் கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறுவெளியாகி) வருவதில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம். அவர்கள் எது குறித்து உபதேசிக்கப்பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்புமீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, ‘நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்’ என்று அவர்களுக்கு நாம் கூறினோம்”. (7:163,165,166)

    ஆக, மேற்கண்ட அனைத்தும் மெய்யான ஹிஜ்ரத் என்பது நம்மிடமுள்ள, நம்மைச்சுற்றியுள்ள தீமைகளை விலக்கி நடப்பதில் தான் இருக்கிறது.

    வாருங்கள், நன்மைகளை அள்ளுவோம், தீமைகளைத் தள்ளுவோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.
    Next Story
    ×